வெற்றியின் விதை – தன்னம்பிக்கை தொடர் – பி.சுவாமிநாதன்

கட்டுரைகள்
பி.சுவாமிநாதன்

 

நாம் வாழும் வாழ்க்கை மிகச் சிறந்ததாக அமைய வேண்டும்,  என்றால் அதற்குப் பல நற்குணங்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, மூளையைப் பயன்படுத்தும் திறன் வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மூளையைப் பயன்படுத்தி நல்ல முடிவெடுக்க வேண்டும். அதே சமயம் மூளையைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதைத் தவிர பல நற்குணங்களும் வேண்டும்.

அவற்றுள் முக்கியமானது இங்கிதம். அதாவது காலம் அறிந்து, நேரம் அறிந்து, சுற்றுச்சூழல் அறிந்து, எதிராளியின் மனம் புண்படாதவாறு பேசுவது. இத்தகைய இங்கிதம் ஒருவருக்குத் தெரிந்து விட்டால், உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அவரால் குப்பை கொட்ட முடியும்.

பலருடன் பேசுவதற்கும், பொது இடங்களில் பழகுவதற்கும் இங்கிதம் தெரிய வேண்டும். சமயோஜிதம் புரிய வேண்டும். இதை இன்னொரு விதத்தில் பொறுமை என்றுகூட சொல்லலாம்.

பிரதான சாலை ஒன்றில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிக்னல் வருகிறது. சிவப்பு விளக்கு விழுந்தால், தாமதிக்கிறோம். பொறுமை காக்கிறோம். அடுத்த சில விநாடிகளில் பச்சை விளக்கு விழுந்த பின்தானே அங்கிருந்து புறப்படுகிறோம்?

 

அதுபோல் எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் நமக்குப் பச்சை விளக்கு ஓர் அடையாளமாகத் தெரிய வேண்டும்.

யார் யார் என்னென்ன சொன்னாலும், அவை அனைத்தையும் கேட்டு, அதன் பின் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ‘ஆமாம்… இவர் ஏதாவது ஆலோசனை சொன்னால், அதில் பலனே இருக்காது. இதைக் கேட்கவே கூடாது’ என்று முடிவெடுக்கக் கூடாது. எந்த வார்த்தைக்கு எந்த நேரத்தில் பலன் இருக்கும் என்று தெரியாது.

அது ஒரு மிகப் பெரிய ஹால். கிறிஸ்துவ பாதிரிமார்கள் அடிக்கடி வந்து போதனை நிகழ்த்தக் கூடிய இடம்.

அன்றைய தினம் கிறிஸ்துவ போதகர் ஒருவர் கூடி இருந்த அன்பர்களைப் பார்த்து போதனை செய்து கொண்டிருந்தார். கூடி இருந்தவர்களைப் பார்த்து,”யாரேனும் ஒருவர் உங்களை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிக்க வேண்டும் என ஏசுபிரான் சொல்லி இருக்கிறார்” என்று சொன்னார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் “ஏசுபிரான் சொன்ன இந்த வாசகம் உண்மைதானா?” என்று சோதிக்க விரும்பினார். அதுவும் யாரிடம்?

போதனை சொன்ன அந்த போதகரிடமே!

மெள்ள எழுந்து போதகரிடம் போனார். எவரும் எதிர்பார்க்காத வேளையில் பட்டென்று போதகரின் கன்னத்தில் அறைந்தார் அந்தப் பார்வையாளர்.

ஏசுபிரான் சொன்ன போதனைகளைக் கடைபிடிப்பதையே தன் லட்சியமாகக் கொண்ட அந்த போதகரும் பார்வையாளரைப் பார்த்துப் புன்னகைத்து, தனது மறு கன்னத்தைக் காட்டினார். பார்வையாளரும் தன் சக்தி முழுவதையும் திரட்டி, போதகரின் மறுகன்னத்திலும் பளாரென அறைந்தார். அங்கு கூடி இருந்த அனைவரும் பதைபதைத்துப் போனார்கள். இந்த ஆசாமியை வெளுத்துக் கட்டலாம் என்று மளமளவென எழுந்தார்கள். ஆனால், அனைவரையும் அமைதியுடன் அமருமாறு சைகை செய்தார் போதகர். அவரது பதிலுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்தனர்.

அடுத்த விநாடி நடந்ததுதான் ஆச்சரியம்… அந்த போதகர், பார்வையாளரைப் பிடித்து இழுத்து செமத்தியாக அடிக்க ஆரம்பித்து விட்டார். போதகர் தன் வலு முழுவதையும் திரட்டி பார்வையாளரை சகட்டுமேனிக்கு உதைக்கத் தொடங்கினார்.

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன பார்வையாளர், போதகரைப் பார்த்துப் பரிதாபமாக, “என்ன நீங்கள் இவ்வளவு மோசமாக இருக்கிறீர்கள்? நீங்கள்தானே சற்று முன் எங்களுக்கு எல்லாம் ஏசுபிரான் சொன்னதாக உபதேசம் செய்தீர்கள்… & ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொல்லி… அது உண்மைதானா என்று உங்களைக் கொண்டே சோதித்துப் பார்த்தேன். போதனையும் சொல்லி விட்டு, அதைப் பரீட்சித்துப் பார்த்த என்னையும் போட்டுத் துவைத்து விட்டீர்களே” என்றான் குமுறலுடன்.

போதகர் அமைதியுடன் சொன்னார்: “ஏசுபிரான் சொன்னபடிதானப்பா நானும் நடந்து கொண்டேன். ஒரு கன்னத்தில் அறைந்தாய். உடனே, சற்றும் மறுதலிக்காமல் மறுகன்னத்தைக் காட்டினேன். அங்கும் அறைந்தாய். ஆனால், மறுகன்னத்தில் அறைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஏசுபிரான் சொல்லவில்லையே!

ஒருவேளை மறுகன்னத்திலும் ஒருவர் உன்னை அறைந்து விட்டால், அடுத்து என்ன செய்வது என்று நீயே முடிவெடுத்துக் கொள் என்று நம் இஷ்டத்துக்கு விட்டு விட்டாரோ என்னவோ.? இப்போது சொல்லுங்கள் நண்பரே… நான் செய்தது தவறா?” என்று அப்பாவியாகக் கேட்ட பின்தான் பார்வையாளர் நிதானத்துக்கு வந்தார்.

வாழ்க்கையில் இங்கிதத்துடன், அதாவது பொறுமையாக அனைத்தையும் சகித்துக் கொண்டு நடக்கும்போது அதன் பிரதிபலனாகக் கிடைக்கும் நற்பலன் அளவிடற்கரியது. பொறுமையுடன் நடந்து கொண்டவர்களுக்குத்தான் இதன் அருமை புரியும். கோபத்துடனும் நிதானம் இல்லாமலும் வாழ்ந்து வருபவருக்கு இதன் அருமை புரியாது.

தற்போது நீங்கள் படிக்கப் போவது ஓர் உண்மைச் சம்பவம். பல வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்தது.

அன்றைய தினம் மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே வயதான அந்தத் தம்பதியினர் ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்தனர். அப்போது பணியில் இருந்த மேனேஜரிடம் போய், தங்குவதற்கு ஓர் அறை கேட்டனர்.

பதிவேட்டைப் புரட்டிப் பார்த்த மேனேஜர், உதட்டைப் பிதுக்கி, “ஸாரி சார்… இந்த நேரத்துல அறை எதுவும் காலியா இல்லீங்களே..”’ என்று சங்கடத்துடன் இழுத்தார்.

‘கொட்டுகிற இந்த மழையில் வெளியே போகவும் முடியாது. என்ன செய்யலாம்’ என்று வயதான தம்பதியர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, “எக்ஸ்க்யூஸ் மீ சார்..”’ என்று மேனேஜர் இவர்களின் கவனத்தைத் திருப்பினார். “தற்போதைக்கு ரூம் எதுவும் காலி இல்லை என்றாலும், பெரிதாக மழை கொட்டுகிற இந்த இரவு வேளையில் வயதான உங்களை வெளியே அனுப்புவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். சம்மதம் என்றால் சொல்லுங்கள்” என்றார்.

“தாராளமாக…” என்று இருவரும் ஆர்வமாயினர்.

“இந்த விடுதியில் எனக்கென்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விருந்தினர்களுக்கான அறையில் இருப்பது போன்ற வசதிகள் என் அறையில் இருக்காது. உங்களுக்கு சம்மதம் என்றால், நீங்கள் அதில் தங்கிக் கொள்ளலாம்” என்றார் மேனேஜர்.

“பரவால்லை தம்பி… நாங்க ரெண்டு பேரும் உன் அறையிலேயே இன்று இரவு தங்கிக் கொள்கிறோம்” என்ற வயதான கணவர் அடுத்து ஒரு கேள்வியைக் கேட்டார்:”‘சரிப்பா.. உன் அறையை எங்களுக்குக் கொடுத்து விட்டு, நீ எங்கே தங்குவே?”

“என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். தற்போதைக்கு உங்களுக்கு உதவுவதுதான் என் முக்கிய வேலை. நீங்கள் மழையில் நனைந்து விட்டீர்கள். உடனே என் அறைக்குப் போய் உடை மாற்றிக் கொண்டு ஓய்வெடுங்கள்” என்று அவர்களைத் தன் அறையில் கொண்டு போய் விட்டார்.

அன்றைய இரவுப் பொழுதை, தான் பணி புரியும் விடுதி வரவேற்பறையிலேயே கழித்தார் மேனேஜர்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. வயதான தம்பதியர் எழுந்து மேனேஜரிடம் வந்தனர். அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். “தம்பி… ஒங்க ரூமை எங்களுக்குக் கொடுத்து நேத்திக்குப் பெரிய உதவி பண்ணீங்க… உங்களோட இந்த நல்ல குணத்துக்கும் இங்கிதமான தன்மைக்கும் நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்லேன்னு தோணுது” என்றார் அந்த வயதான கணவர்.

“பரவால்லைய்யா. கடவுள் என்ன கொடுக்கணுமோ, அதைக் கொடுக்கறார். எந்த நேரத்துல எதைக் கொடுக்கணும்னு நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியும்” என்றார் பணிவாக.

“ஒங்களோட நல்ல குணத்துக்கு இதை விட ஒரு பெரிய்ய விடுதிக்கு நீங்க மேனேஜரா இருக்கலாம். ஓகே… ஒரு நாள் இதை விட பெரிய விடுதி நான் கட்டும்போது அந்த விடுதிக்கு உங்களை மேனேஜரா நியமிக்கிறேன்” என்றார்.

தான் இவருக்கு உதவி செய்ததாலும், தனது நல்ல குணத்தினாலும் முதியவர் இப்படிச் சொல்கிறார் என்கிற எண்ணத்துடன் ஒரு புன்னகையுடன் அவர்களை வழி அனுப்பி வைத்தார் மேனேஜர்.

சுமார் இரண்டு வருடம் ஓடியது. இந்த விடுதி மேனேஜருக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை எழுதியவர், மழை பெய்த ஒரு தினத்தில் மனைவியுடன் வந்து தங்கிய முதியவர்.

கடிதத்தில் நியூயார்க்கில் உள்ள தனது இல்ல முகவரியை எழுதி விட்டு, “தயவுசெய்து உடனே வந்து என்னை சந்திக்க முடியுமா?” என்று கேட்டிருந்தார்.

“சரி… வயதான,& நமக்கு அறிமுகமான அன்பர் அழைத்திருக்கிறாரே” என்று சந்தோஷமாக ஒரு நாள் அவரைப் பார்க்கப் போனார். அன்புடன் இவரை வரவேற்ற தம்பதியர் நன்றாக உபசரித்தனர்.

பிறகு, வயதான அந்தக் கணவர், “எங்கூட வாங்க…’ என்று இரண்டு தெருக்கள் தள்ளி ஓரிடத்துக்கு அழைத்துப் போனார். இவர்கள் இருவரும் அங்குள்ள புத்தம் புதிய பிரமாண்டமான ஓட்டலுக்கு முன்னால் நின்றனர்.

எதற்காக இங்கு அழைத்து வந்தார்… ஓட்டலை எதற்காக நமக்குக் காட்டுகிறார் என்று மேனேஜர் குழம்பி நிற்கும்போது, வயதானவர் சொன்னார்: “தம்பி… இன்னிலேர்ந்து இந்த ஓட்டலுக்கு நீங்கதான் மேனேஜர். உங்களோட தகுதிக்கு ஏதாவது பெரிசா செய்யணும்னு தோணிச்சு. அதுக்காக இந்த ஓட்டலை நானே கட்டினேன்.”

வெகு உருக்கமாகச் சொன்ன அந்த முதியவரைப் பார்த்து வியந்து போனார் மேனேஜர். ஒரு நாள் இவர் தங்குவதற்கு இடம் கொடுத்ததற்கு இப்படி ஒரு வெகுமதியா என்று திக்குமுக்காடிப் போனார்.

அந்த வயதான முதலாளி பெயர்  வில்லியம் வால்டோர் ஆஸ்தர். மேனேஜர் பெயர் ஜார்ஜ் போல்டு.

இந்த ஓட்டல் இன்றைக்கும் நியூயார்க்கில் உள்ளது.

இங்கிதமாக நடந்து கொள்ளும் தன்மை, அந்த மேனேஜருக்கு எப்பேர்ப்பட்ட பரிசைக் கொடுத்திருக்கிறது, பார்த்தீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *