தேவை ஒரு துளி அன்பு!

கட்டுரைகள்

ஒரு ஃப்ளாஷ்பேக்குடன் தொடங்குகிறேன் இந்தக் கட்டுரையை!

சில வருடங்களுக்கு முன், பெண்கள் இதழ் ஒன்றின் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றியபோது, அங்கு வந்த வாசகர் கடிதம் ஒன்றின் சாராம்சத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைக்கு அந்த வாசகருடைய வயது அறுபதுகளில் இருக்கும். அவர் காலத்தைய பிரபல கதாநாயகி ஒருவரின் மீது அவருக்குத் தீராக் காதல்! அந்த நடிகையைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதே அவருடைய கனவு,  லட்சியம் எல்லாம்!

இத்தனைக்கும் அந்த நடிகையை அவர் நேரில் பார்த்ததில்லை.. டெலிஃபோனில் கூடப் பேசுவதற்கு முயற்சித்ததில்லை. அவர் நடித்த சினிமாக்களை மட்டும்தான் பார்த்திருக்கிறார். இந்த ஒருதலைக் காதலை வீட்டில் சொல்வதற்கும் அவருக்குத் தயக்கம்! பயம்!

இந்த சமயத்தில், வீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து, அவரை வாயைக் கூடத் திறக்க விடாமல் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். அவர் இப்படி எழுதுகிறார்.. ‘‘எனக்குத் திருமணம் செய்து வைத்த பெண் நல்ல மனம் கொண்ட பெண்தான். அழகிலும் குறைவில்லைதான். ஆனால், என்னால் அந்தப் பெண்ணை ‘மனைவி’ என்கிற ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க முடியவே இல்லை. என் மனம் முழுக்க நிரம்பி இருக்கிற காதலியின் இடத்தில் வேறொரு பெண்ணை எப்படி வைக்கட்டும்? அவரை ஒரு சகோதரியாகத்தான் நினைத்தேன். இதை நான் அவரிடம் சொன்னபோது, அவர் ரொம்பவே மனம் உடைந்து போய்விட்டார். திருமணத்துக்கு முன்பே இதைச் சொல்கிற தைரியமற்ற என் கோழைத்தனத்தால் ஓர் அருமையான பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனே’ என்று இப்போது நினைத்தாலும் வேதனைப்படுகிறேன்.. ஆனாலும்கூட, மனைவியோடு வாழ்ந்திருக்க முடியும் என்று தோன்றினதே இல்லை.”

கடைசியில் அவரும், அவர் மனைவியும் பிரிந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்த அந்த வாசகரின் இதயம் முழுக்க, அப்போதும் நிரம்பி இருந்தார் அந்த நடிகை!

‘இது என்ன பைத்தியக்காரத்தனம்? திரையில் மட்டுமே பார்க்க முடிகிற ஒரு நடிகையை யாராவது காதலிப்பார்களா? சரி.. அதற்காக, திருமண  பந்தத்தையே முறிப்பார்களா? அவரையே நம்பி வந்த அந்தப் பெண்.. அவள் பாவம் இல்லையா?’

இப்படியெல்லாம் பல கேள்விகளை நீங்கள் கேட்கலாம். எனக்குள்ளும் இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தனதான். ஆனாலும், வாசகருடைய அந்த மாசற்ற அன்பு.. அதுதான் எனக்குள் நிலைத்து நிற்கிறது.

பார்த்தே இராத, பேசியே இராத, பழகியே இராத.. ஏன்.. தன்னை யார் என்றே அறிந்திராத ஒரு பெண்ணின் மீது அவர் இன்றைக்கும் வைத்திருக்கிற தூய்மையான அன்பையும், அதற்காகத் தன் சொந்த வாழ்க்கையையே விலையாகத் தந்து விட்டதையும், அது குறித்துப் பெரிய வருத்தங்கள் இல்லாமல் வாழ்வதையும், அடிக்கடி நினைத்து வியக்கிறேன். கூடவே, இன்றைய உலகம் ‘அன்பு’ என்று ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு அலைவதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

வேறெங்கும் போக வேண்டாம்.. நம் வீடு தேடி வருகிற செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தாலே இன்றைய உலகம், அன்பென்கிற வார்த்தையையே அறியாத அரக்கனின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கணவனுக்கு துரோகம் செய்கிற மனைவி.. மனைவிக்கு துரோகம் செய்கிற கணவன்.. ‘ஆல்வேஸ் கனெக்டட்’ உலகத்தின் ஆபாசங்கள்.. அத்துமீறல்கள்..

சரி.. அதை விடுங்கள்! எல்லா ஏரியாக்களிலுமே தட்டுப்பாடாகிக் கொண்டு வருகிறது அன்பு! ஆங்கிலத்தில் ‘ப்ளட் இஸ் திக்கர் தேன் வாட்டர்’ என்று சொல்வார்கள்.. அதாவது, ரத்தபந்தத்துக்கு எப்போதுமே ஈர்க்கிற தன்மை உண்டாம். ‘தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்’ என்று சொல்வார்கள் நம் கிராமப்புறங்களில்.

ஆனால் இன்று..? தாயையும் தகப்பனையும் அடிக்கிற மகன்கள் அதிகரித்து விட்டார்கள். அது கொலையாகும்போது அதிர்ச்சி செய்தியாகிக் கொண்டிருந்தது சில வருடங்களுக்கு முன்! இப்போது, அதுவும் பத்தோடு பதினொன்றாகி விட்டது! பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமே இப்படிப்பட்ட உறவு எனில், சகோதரர்கள், சகோதரிகள், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, ஒன்றுவிட்ட உறவுகளின் நிலைகள்..? முழுப்பகைதான்!

முகத்துக்கு முன்னே பூச்செண்டும் முதுகுக்குப் பின்னே துப்பாக்கியும்தான்! யாருக்கும் யார் மீதும் அக்கறை இல்லை.. அன்பில்லை.. அடுத்த வீட்டுப் பெண்மணிக்கு ஏதேனும் கஷ்டம் வந்தால்.. அப்பப்பா! நம் மனதுக்குள்தான் எத்தனை சந்தோஷம்! அக்கா கணவன் மருத்துவமனையில் கிடக்கிறார் என்றால், ‘நல்லா வேணும். புதுப் பணக்காரனுங்க.. ஓவரா ஆடுனானுங்க.. இப்ப என்னாச்சு..?’’ பேசுகிறோம்தானே?

திருமண வீட்டுக்குச் செல்வதன் நோக்கம், சொந்தபந்தங்களைப் பார்த்து, அவர்களோடு உட்கார்ந்து பேசி, நலன் விசாரித்து, சந்தோஷத்தைப் பெருக்குவதல்ல.. புதிதாக வாங்கிய கார், பட்டுப் புடவை, நகைகளின் கண்காட்சியை நடத்துவதும், ஆடம்பரத்தைப் பறைசாற்றிக் கொள்வதும்தான்! மானைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறதே சிங்கம்.. அதைப் போல, ஏழை, எளிய உறவினர்களின் மனங்களைக் குதறுவதே மற்ற உறவுக்காரர்களின் பிரதான பணி.

‘‘நீங்க அட்லீஸ்ட் இங்க பக்கத்துல ஊட்டி, கொடைக்கானலாவது போகலாம் இல்ல..? ஏன் போக மாட்டேங்கறீங்க அக்கா?’’

“நீங்க ஏன் இன்னும் கார் வாங்காம இருக்கீங்க?’’ இப்படியெல்லாம் அடுத்தவர் மனதை நோகடிப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்..!

என்ன ஒரு அவலமான மனநிலை! சிங்கம் கூட, பசியாக இருந்தால்தான் மானை வேட்டையாடும். ஆனால், இன்றைய மனிதர்களாகிய நாமோ, விலங்காபிமானம் கூட இல்லாதவர்களாய் மாறிக் கொண்டிருக்கிறோம்.

அடிப்படை அன்பற்ற இந்த மனநிலை, மற்றவர்களை மட்டும் காயப்படுத்துவது கிடையாது. தானே நிம்மதியற்ற மனநிலையில் இருக்கிறவர்கள்தான் பெரும்பாலும் பிறரை இப்படி வேதனைப்படுத்துகிறார்கள். இது ஒரு தொற்று வியாதியைப் போலப் பரவிச் சென்று சமூகத்தையே மனநோய்க்குள் தள்ளி விடுகிறது. மனநோயாளிகள் நிறைந்த சமூகமாக நம் சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது.

தன்னலமில்லாத அன்பு மட்டுமே இந்த நோய்க்கான மருந்து. யார்தான் அப்படி இருப்பார்கள் என்று குறை கூறிக் கொண்டிருக்காமல், நாம் ஒவ்வொருவருமே நம்மால் இயன்றவரை பிறரைக் காயப்படுத்தாமல், அருகில் இருப்பவர்கள் மீது கரிசனையோடும் அன்போடும் இருக்க முயற்சித்தாலே இந்த உலகம் உய்வடைந்து விடும்.

முயற்சித்துப் பாருங்களேன்.. கோடி ரூபாய் கொடுக்காத சந்தோஷத்தை.. மனநிறைவை.. ஒரு துளி அன்பு கொடுத்து விடும்.

 

தயாமலர்  ஸ்டீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *