உலக சுற்றுச் சூழல் – தியோடர் பாஸ்கரன்

கட்டுரைகள்
தியோடர் பாஸ்கரன் THEODAR BHASKARAN

ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம். நம்மில் பலருக்கும் இப்படியொரு தினம் இருப்பதும், அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதும் தெரியாது. வளர்ந்த நாடுகள்  தங்கள் நாட்டு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் இந்தியாவும், இந்திய மக்களும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் மெத்தனமாக இருப்பது, அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்கிற நோய். அரசியல், கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என துறைவாரியாக ஆர்வலர்களும், விமர்சகர்களும் கொட்டிக்கிடக்கும் நம்நாட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்னவோ ஒருகை விரல் எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தியோடர் பாஸ்கரன். சுற்றுச்சூழல் தொடர்பான பல கேள்விகளோடு அவருடன் உரையாடினோம்.

 

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடமும், அரசிடமும் எந்த நிலையில் உள்ளது?

“மக்களிடமும் அரசிடமும் இதுபற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. எத்துக்காட்டாக நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் எத்தனைக் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் நம்நாடு எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்னைகளைப்பற்றி குறிப்பிட்டுருந்தார்கள்? நம்அரசு சுற்றுச்சூழல், சூழலியல் கல்வி போன்ற காரியங்களுக்கு எவ்வித முன்னுரிமை அளிக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அதுபோன்ற விஷயங்களைக் கண்டுகொள்வதேயில்லையே. கட்டமைப்பு மேம்பாடு, தொழில்மயமாதல் என்றபெயரில் சுற்றுச்சூழலைச் சீரழிக்கின்றோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுச்சூழல் துறை இருந்தும், காட்டின் பரப்பு குறைந்துகொண்டே வருகின்றது. நதிகள் வரண்டிருக்கின்றன. ஏரிகள் இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றன. மலைகளும் காடுகளும் கனிமச்சுரங்கம், அணை, தோட்டப்பயிர், வெட்டுமரத்தொழில் போன்ற காரியங்களுக்காக அழிக்கப்படுகின்றன. நம் கண் முன்னேயே காடு சுருங்கி வருவதைக் காண்கின்றோம்.

அதுபோலவே நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்பொருள் பற்றி யாரும் பேசுவதேயில்லை. சுற்றுச்சூழல் பற்றிய பாடங்கள் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் சரியான புத்தகங்கள் எழுதப்படவில்லை. அடிப்படையான கருதுகோள்கள்கூட கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. கண்ட இடத்தில் குப்பைபோடுவது (littering,) சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது, ஒணான் போன்ற சிற்றுயிர்களை வதைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமலிருக்க பள்ளிகளில் ஒரு விழிப்புணர்வை தரமுயலலாமே? நாம் ஒன்றும் செய்வதில்லை.

நாம் செய்யும் பலகாரியங்கள் எவ்வாறு சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்பதை உணரவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் முடிந்தவரை தவிர்க்கலாமே? நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இயற்கை வளங்களைப் பற்றித்தெரிந்து கொள்ள வேண்டும். புத்தாக்க எரிசக்திகளை பயன்படுத்த வேண்டும். நம் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, வீணாக்குவதைத் தவிர்த்து, மாசு படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த விஷயங்களில் பேசுவதைத் தவிர்த்து செய்கையில் தீவிரம்காட்டவேண்டும்”.

1972 ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையால் துவங்கப்பட்ட உலகச் சுற்றுச் சூழல் தினம், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக வைத்து வெவ்வேறு தலைப்புகளில் கொண்டாடப்படுவது ஏன்?

“1972ஆம்ஆண்டு தான்ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு பன்னாட்டு மாநாடு நடந்தது.பெட்ரோல் தட்டுப்பாட்டால் வந்த சிக்கல், சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதை உலகநாடுகள் உணர்ந்தது. இவைகளின் விளைவே இந்தக் கூடுகை. அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சூழலியல் பிரச்னையின்மீது கவனம் செலுத்தப்படுகின்றது. அந்தக் கருதுகோளை நன்குபுரிந்துகொள்ள இத்தைகய கவனிப்புகள் உதவும் என்ற நம்பிக்கையில்தான் இது செய்யப்படுகின்றது. ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அன்றிலிருந்து, மறு ஆண்டு ஜூன் 5வரை உலகின் பல இடங்களில் நாடகங்கள், உரைகள், கூட்டங்கள் என பல நிகழ்ச்சிகள் நடக்கும். ஆனால், இது பேச்சளவில், குறியீட்டளவில் நின்றுவிடுவதுதான் அவலம்.’’

சுற்றுச் சூழல் மாசுபடுவதால் உயிரியல் தோற்றத்தில்கூட மாறுபாடுகள் உண்டாகும் என்பது எந்த வகையில் உண்மை? இதற்கான சான்றுகள் இருக்கிறதா?

“ எண்டோசல்பான் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளால் கேரளாவிலும், பாதரச கழிவால்ஜப்பானில் மினமாட்டா தீவிலும் குழந்தைகள் ஊனமாகப் பிறந்தது சூழலியல் வரலாற்றில் இடம்பெற்றுள்ள செய்தி. ஆனால், உயிரியல் தோற்ற மாறுபாடு ஏற்படுவது  பற்றி அறிவியல் சார்ந்த சான்றுகள் இல்லை.”

இயற்கை வனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியா எந்த நிலையில் உள்ளது?

“நம் நாட்டில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தகாலத்தில் காட்டுயிர் பேணலுக்கு அரசு மிக முக்கியவத்துவம் கொடுத்தது. பலசரணாலயங்கள் ஏற்படுத்தப்பட்டன. காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1973ல்அமுல்படுத்தப்பட்டது. வேட்டை அறவே தடைசெய்யப்பட்ட்து. சுற்றுச்சூழலுக்கென ஓர் அமைச்சகம் உருவாக்கப்பட்ட்து.

தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 1,30,058 சதுர கி.மீ. இதில் ஏறக்குறைய 22,748 மட்டுமே (அதாவது மொத்த பரப்பில் 17.5% மட்டுமே) பாதுகாக்கப்பட்ட காடுகள். (சமன்நிலையை காக்க இருக்கவேண்டியது 33%).  இம்மாதிரி காடு சூழ்ந்த நிலப்பரப்பில் ஒரு பகுதியே காட்டுயிர் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பத்து சரணாலயங்களில், இவற்றில் தேசீயப்பூங்கா என்று அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து சரணாலயங்களும், மலைக் காடுகளில் உள்ளன. சரணாலயம் என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்படுவது.  ஆனால், தேசியப்பூங்கா உயிர்ச்சூழலை ஒட்டியது. இவற்றிற்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அதிகம். களக்காடு -முண்டந்துறை சரணாலயம் சோலை மந்தியை (சிங்கவால் குரங்கு) பாதுகாக்க. முதுமலை தேசியப்பூங்கா அந்த உயிர்ச்சூழலை அழிவிலிருந்து காக்க ஏற்படுத்தப்பட்ட்து. சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்திய மங்கலம்  காடுகள் வேங்கை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மேகமலை சரணாலயம், பழனிமலைத் தொடர்சரணாலயம் இவைகள் உருவாகியிருப்பதும் நல்லஅறிகுறியே!’’

இயற்கையை அழிப்பதில் மனித இனத்திற்கு நிகராக வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா? அல்லது மனிதர்கள் மட்டுமே காரணமா?

“எரிமலைகுமுறல், ஆழிப்பேரலை, பூமியதிர்ச்சி போன்ற இயற்கை நிகழ்வுகள் உலக நிலவிரிவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், இயற்கையை மீட்க முடியாதபடி அழிப்பதில்லை. மனிதர்கள் இவ்வுலகில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளாயிற்று என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அவர்கள் வாழ்க்கை எளிமையாக இருந்தவரை, அவர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தவரை பிரச்னை இல்லாமல் இருந்தது. கடந்த நூறு ஆண்டுகளாக மனிதர்களின் செயல்கள் இயற்கையைச் சீரழித்ததுபோல் மனித வரலாற்றில் எப்போதுமே நடந்ததில்லை. அதிலும், அண்மைக் காலத்தில் தொழில் நுட்பம் மூலம் இயற்கை வளத்தைச் சுரண்டுவது வேகமாக நடக்கின்றது. பூமிக்கு அடியிலிருக்கும் எண்ணெய், நிலக்கரி ஒருநாள் தீர்ந்து போகலாம் என்பதை மனிதர் உணரத்தொடங்கியிருக்கின்றனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலையில் உள்ள இரும்புத்தாதுவை எடுக்கமுயற்சிகள் நடக்கின்றன.  சுரங்கம் போட்டு பூமியைக் குடைவது சுற்றுச்சூழலை அழிப்பது தான். சேலத்திற்கருகே உள்ள பாக்சைட் சுரங்கப் பகுதியைப் பார்த்தீர்களேயானால் நான் சொல்வது புரியும்.

அதுபோலவே,  காலநிலை  மாறுதல்  குறித்து  நாம் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றோம்.  பன்னாட்டளவில்  இதுபற்றிய சொல்லாடல் பத்தாண்டுகளுக்கு மேலிருந்தும், இது ஏதோ அறிவியலாளர்களின் களம்  என்று அதைக் கண்டுகொள்ளாதிருக்கின்றோம்

நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதுபற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் இயற்கை வளங்களைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். புத்தாக்க எரிசக்திகளை பயன்படுத்தவேண்டும். நம் தேவைகளை குறைத்துக்கொண்டு, வீணாக்குவதைத் தவிர்த்து, மாசுபடுத்துவதை நிறுத்தவேண்டும். இந்த விஷயங்களில் பேசுவதைக் காட்டவேண்டும்.’’

அணு ஆயுதங்கள், அணு உலைக் கூடங்கள் மற்றும் அணுமின் நிலையங்கள் எந்தமாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

“எல்லா வகையான மாசுபடுதல்களிலும் கொடியது அணு ஆயுதங்கள், அணுஉலைக்கூடங்கள் இவற்றிலிருந்து உருவாகும் கதிரியக்க மாசுபடல். அணுவை மனிதர் பிளந்த நாளிலிருந்து இந்தமீளமுடியாத பிரச்னையில் மனித இனம் மாட்டிக்கொண்டிருக்கின்றது. அணு உலைகளின் கழிவுகளை என்ன செய்வது என்பது ஒரு பெரிய பிரச்னை. தயாரிக்கப்பட்டுவிட்ட அணுகுண்டுகளை என்ன செய்வது என்பதுவும் அதேபோல ஒரு சிக்கல்தான். அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் போரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இயற்கையை நோண்டிப் பார்க்கும் மனிதரின் எல்லா செயல்களுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. அணுவைப்  பிளந்ததற்கும் ஒரு விலை உண்டு.

1979இல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நடந்த அணுவிபத்து,  1986இல் ரஷியாவில் செர்னோபில் அணு உலை வெடிப்பு போன்றவை இந்த ஆபத்தைப் பற்றிய பாடமாக இருக்கின்றன. இந்த பொருளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள ஜெ.பிரபாகரன் எழுதிய அணுஉலை அறிவோம் (பென்னிகுவிக் பதிப்பகம், மதுரை 2013) என்ற நூலைப் பார்க்கவும்.’’

நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதற்கும் சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கும் தொடர்பு இருக்கிறதா?

“நிச்சயம்இருக்கின்றது.  சுற்றுச் சூழல் சீரழிவின்ஒரு விளைவு காடு அழிவது. மழை நீரை தக்கவைக்கத் தேவையான காடுகள் போன்ற தாவர பரப்பு மறைந்து நிலத்தடி நீர் குறைகின்றது. மரங்களையும் சகட்டுமேனிக்கு வெட்டித் தள்ளிவிட்டோம். வருடா வருடம் அதே அளவு மழை பெய்துகொண்டிருந்தாலும், தண்ணீர் பஞ்சம்தொடர்கின்றது.

உலகின் பலநாடுகளில், நிலத்தடி நீரை எடுக்க, துழைகிணறுதோண்ட, அரசு அனுமதிவேண்டும். நிலத்தடிநீர் பொதுச் சொத்தாயிற்றே.  நம்நாட்டில் யார் வேண்டுமானலும் எடுத்து பயன்படுத்தலாம். விற்கலாம்.  சுதந்திரம் வந்து சில ஆண்டுகளில், கிராமப்புறத்திற்கு மின்வசதி அளிக்கப்பட்டவுடன், பலபண்ணைகளில் துழைகிணறுபோட்டு, மோட்டார் பம்ப் வைத்து, நிலத்தடி நீரைபயன்படுத்த ஆரம்பித்தனர். சில பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் (water table) கீழேபோக ஆரம்பித்தது.  ஈரோடு, திருப்பூர் போன்ற வறண்ட மாவட்டங்களில், ஆயிரம் அடிவரை தோண்ட வேண்டியிருக்கின்றது.  அதேசமயம், காடுகள் அழிக்கப்பட்டு,  ஏரிகள் போன்ற நீர்நிலைகள் காய்ந்து வறண்டுவிட்டது. ஏரிகளுக்கு மழை நீரை கொண்டு சேர்க்கும் கால்வாய்கள் நிலப்பயன்பாட்டால் அடைக்கப்பட்டு ஏரிகளுக்கு நீர் வரத்து நின்றேவிட்டது.

நிலத்தடி நீர் குறைவதற்கு மணற்கொள்ளை எனும் சூழலியல் அட்டூழியமும் ஒருகாரணம். ஒரு நதிப்படுகையிலுள்ள மணல்தட்டு பல்லாயிர ஆண்டுகள் ஓட்டத்தால் உருவாவது. நதியில் நீரில்லா நாட்களிலும் மணலுக்கடியில் ஒரு பெரும் நீரோட்டம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதுதான் ஊற்றுகளாக மக்களை வாழவைப்பது. “ஆற்றுப் பெருக்கு அடிசுடும் அந்நாளும்/அவ்ஆறு ஊற்றுப்பெருக்காம் உலகு ஊட்டும்” என்று அவ்வையார் குறிப்பிட்டது இதைத்தான். தஞ்சாவூர் பகுதியில் நதிப் படுகையில் ஒரடி தோண்டினாலே நீர்வரும்.

நதிக்கு இருபுறமும் உள்ள பகுதியில் நிலத்தடி நீரை  இந்த மணலடி நீரோட்டம்  தக்க வைக்கின்றது. மணற் போர்வையை நீக்கிவிட்டால், நம் கண்ணில் படாத இந்த நீரோட்டம் வற்றி, நிலத்தடிநீர் கீழே வெகு ஆழத்திற்குப் போய்விடுகின்றது.  இதனால் பம்ப்செட் போட்டு இந்த நீரை நம்பியிருக்கும் வேளாண்மை பாதிக்கப்படுவதல்லாமல் அங்குள்ள பலமரங்கள், தாவரங்கள் காலவட்டத்தில் மறைந்து போய்விடுகின்றன. மணற் பரப்பு குறைக்கப்பட்டதால், மழைக் காலத்தில் நதியில் நீரோட்டம் வேகமாக இருக்கும். இதனால் கரை பாதிக்கப்பட்டு, ஒரத்தில் நிற்கும் மரங்கள் விழுகின்றன. அதுமட்டுமல்ல, ஆற்றிற்கு ஒரு வடிகட்டி போல மணல் செயல்படுகின்றது. மணற்பரப்பு சீராக இருந்தால் மழை நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில் ஆற்றில் வரும் நீர் தெளிவாக இருக்கும்.  மணல் குறைந்து அடிமண் தெரிய ஆரம்பித்தபின் வரும் நதிநீர் எப்போதும் கலங்கலாகவேஇருக்கும்.

அதுமட்டுமல்ல.மேல்நாட்டில் நாம்காணும் சிலபழக்கங்களை, இதுதான் மேம்பாட்டின் குறியீடு என்றெண்ணி நம்நாட்டிலும் காப்பியடிக்கின்றோம். நீர்ப்பூங்காக்கள் (water park)  அமைப்பது அதுபோல ஒன்று. வறண்ட பூமியில் குடிப்பதற்கு  தண்ணீர் இல்லாமல் மக்கள் அலைந்து கொண்டிருக்கும்போது நீர்ப் பூங்காக்கள் அவசியமா.? நமது சுற்றுச்சூழலுக்கும் இது ஒத்துவருமா என்று பார்க்காமல், அன்று காசு கிடைத்தால் போதும் என்று பூமியை குடைகிறோம். கோல்ஃப் திடல் பாவுவதும் புல்தரை (lawn) அமைப்பதும் அதுபோலத்தான். புல்தரையை பராமரிக்க நிறைய நீர் தேவை. தினமும் நீர்ஊற்ற வேண்டும். இதற்கு பல இடங்களில் நிலத்தடி நீரைபயன்படுத்துகின்றார்கள். இது தேவையா?  ஆஸ்திரேலியாவில் புல்தரைகள் பாவுவதை கட்டுப்படுத்துகிறார்கள். பைப் தண்ணீர் இல்லாத சிற்றூர்களில் மழைநீர் சேமிப்பையும் கட்டாயமாக்கியிருக்கின்றார்கள்.’’

 

பேட்டி : பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *