அதிர்ஷ்டம் தரும் விளக்குகள் – விளக்குகளின் வகைகள் மற்றும் நன்மைகள்

உலகம் கட்டுரைகள் கலை வணிகம்
பால்ராஜ் நாடார்
பால்ராஜ் நாடார்

இந்துக்களின் சமய விழாக்களிலும், பண்டிகை, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் தவறாமல் இடம்பெறுவது குத்துவிளக்கு. திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்குச் செல்லும் மருமகளை முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்லித்தான் அழகு பார்ப்பார்கள். காரணம், குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பதால்தான். தாய்வீட்டுச் சீதனப் பொருட்களில் முதல் இடம் குத்துவிளக்கிற்குதான். குத்துவிளக்கு மட்டுமல்ல, அதைப்போல இன்னும் பல விளக்குகள் இந்துக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைதிருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகாலமாக கோயில்களுக்கு ஆகம விதிகளின்படி விளக்குகளைச் செய்துகொடுத்துவரும் பால்ராஜ்   இதுபற்றி என்ன சொல்கிறார்.

 

‘’விளக்குகளில் பல வகைகள் உண்டு. பொதுவாக, வீடுகளில் பயன்படுத்தப்படும் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு மற்றும் விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் அகல் விளக்குகள்தான் மக்களால் அதிகம் அறியப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னும் பலவகையான விளக்குகள் இருக்கின்றன. கோயில்களில் பயன்படுத்தப்படும் விளக்குகளும் நிறைய இருக்கின்றன’’ என்றபடியே, ஒவ்வொரு விளக்கின் பெயரையும், அதற்கான பயன்பாடு பற்றியும் விளக்க ஆரம்பித்தார்.

குத்துவிளக்கு
‘‘இதுதான் விளக்குகளுக்கு முதன்மையானது. மங்களத்தைக் குறிக்கும் இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய்  – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், கலை மகள், மலை மகள் என இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர். மேலும், குத்துவிளக்கின் ஐந்து முகங்களிலும் சுடர் எரிய பிரார்த்தனை செய்வது, பஞ்ச பூதங்களை ஒருசேர வணங்கும் பலனைக் கொடுக்கிறது. குத்துவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி மந்திரங்களை ஓதி வழிபட்டு வந்தால், ‘விளக்கிட்டாருக்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி’ என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

அகல் விளக்கு
கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், நமது வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாக விளங்குகின்றன. சற்று குழியான சிறிய மண் பாத்திரம்,  ‘அகல்’ என்று அழைக்கப்பட்டது.
தமிழகத்தின் கொடு மணல், அரிக்கமேடு, கரூர் போன்ற இடங்களில், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சிறு மண்பாத்திரங்களில் ‘கூல அந்தைய சம்பன் அகல்’ ‘வாருணி இய் அகல், ‘முதிகுயிர அன் அகல்’, ‘குறஅகல்’ என்றெல்லாம் பண்டைய தமிழ் -பிராமி எழுத்துக்களில் காணப்படுவது அகல் விளக்கின் சிறப்பாகும். பண்டையத் தமிழர்கள் பயன்படுத்திய அகல் விளக்குகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றினை போன்றவை கார்த்திகை நாளில் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகின்றன. இவை மலர்கள் அடுக்கடுக்காய் பூத்திருப்பது கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றி வைத்த விளக்குகள் போன்று உள்ளன என்று,  ஔவையார் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 10-, 11ம் நூற்றாண்டுகளில் களிமண் அகல் விளக்குகளில் 4 திரிகள், 6 திரிகள், 8 திரிகள் போடும் அளவுக்கு செய்யப்பட்ட விளக்குகள் பழையாறை, தாராசுரம், திருவாமாத்தூர், போளுவாம்பட்டி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. திருச்சோற்றுத்துறை கோவிலுக்கு செம்பினால் ஆன 32 அகல் விளக்குகள் அளிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டினால் அறிய முடிகிறது. திருவண்ணாமலை திருக்கோவிலில் கார்த்திகை திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றவும், தானம் அளித்ததாக முதலாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் அறிய முடிகிறது.

காமாட்சி விளக்கு
புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கு காமாட்சி அம்மன் விளக்கு. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, “நிறைநாழி’’ எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில்  தீபம் ஏற்றப்படும். இந்துக்களின் வீடுகளில் குத்துவிளக்கைப் போன்றே காமாட்சி விளக்கும் அனைத்து புனித காரியங்களிலும் இடம்பெற்றிருக்கும்.

அன்னம் விளக்கு
கோயில்களில் மட்டுமே இவ்விளக்கு பயன்படுத்தப்படுகிறது. குத்துவிளக்கினைப் போன்றே ஐந்து முகங்கள் இவ்விளக்கிற்கு உண்டு. நாட்டில் விவசாயம் செழித்து, எங்கும் பசுமை பூத்திருக்க இவ்விளக்கால் கடவுளுக்கு தீப ஆராதனை செய்கிறார்கள்.

சரவிளக்கு
நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, இறைவனின் சந்நிதானத்திற்கு முன்பாக, வாசலை அலங்கரித்த வண்ணம் இருக்கும். இதுதான் சரவிளக்கு என அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் கோயில்களில் இவ்விளக்கிற்குப் பதிலாக மின் விளக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

தூங்கா விளக்கு
கோயில்களில்தான் இவ்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சாமி கருவறைகளில் இரவும் பகலும் எரியும்படியாக எண்ணெய் விளக்குகளை ஏற்பாடு செய்திருப்பர். எனவேதான் இது தூங்கா விளக்கு. பலவிதமான வடிவமைப்புகளில், கலைநயம் மிக்கதாய், சிறியவை,பெரியவைகளாக, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களினால் தூங்கா விளக்குகள் தயாரிக்கப்பட்டிருக்கும். வட்டவடிவமாக இருக்கும் இந்த விளக்குகளின் நடுவில் ஒரு சங்கிலியை இணைத்து பொருத்திவிடுவர். இதில் எண்ணெய்விட்டு விளக்கை ஏற்றி அணையாமல் கவனித்துக் கொள்வர்.

தொங்கும் விளக்கு
இதுவும் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. ஐந்து முகங்களைக் கொண்ட பல அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக தொங்குவதுபோல் இவ்விளக்கு காட்சியளிக்கும். கிட்டத்தட்ட குத்துவிளக்கின் தோற்றத்தைப் போலவே தோற்றமளிக்கும்.

வாசமாலை விளக்கு
இதுவும் கோயில்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோயில் வாசலை இவ்விளக்குகள்தான் அலங்கரிக்கும். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாலைபோல் காட்சியளிப்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது.

கிளி விளக்கு
கோயில்களில் சிறப்பு பூஜையின்போதும், வீடுகளில் விழாக் காலங்களிலும் இவ்விளக்கு பயன்படுத்தப்படுகிறது. கிளி ஒன்று விளக்கின்மீது அமர்ந்திருப்பதுபோல் தோற்றமளிக்கும் இவ் விளக்கு அம்மன் கோவில்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சாஸ்தா விளக்கு
கேரளாவில்தான் இவ்விளக்கின் பயன்பாடு அதிகம். முக்கியமாக ஐயப்ப வழிபாட்டிற்கு மட்டுமே இவ்விளக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் விரத காலத்தில் இவ்விளக்கில் தீபம் ஏற்றி, ஐயப்பனுக்குரிய பூஜைகளைச் செய்வர்.

பம்பா விளக்கு
இதுவும் ஐயப்ப வழிபாட்டிற்கு உகந்த விளக்கு. மூன்று முகங்களைக் கொண்டிருக்கும். கேரளா மற்றும் ஐயப்ப பக்தர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மாட விளக்கு
வீடுகளின் வாசலில் இருபுறமும் உள்ள மாடத்தில் ஏற்றப்படும் விளக்கு இது. பல கிராமங்களில் இன்றும் மாடவிளக்கு ஏற்றும் வழக்கம் இருக்கிறது. நகரங்களில் விளக்கு மாடத்துடன் கூடிய வீடுகள் வழக்கொழிந்து விட்டன. கிராமங்களிலும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் விளக்கு மாடங்கள் காணாமல் போய்வருவது வருத்தத்திற்குரியது.

பாவை விளக்கு
பாவை விளக்குகளில் பெரிய அளவிலானது கோவில்களிலும், சிறிய அளவிலானது வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இளம்பெண் ஒருத்தி தன் கையில் விளக்கினை ஏந்திக்கொண்டிருப்பதுபோல் இருப்பதால், விருந்தினர்களை வரவேற்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கும்.

யானை விளக்கு
ஒரு யானை விளக்கினைச் சுமந்துகொண்டிருப்பதுபோல் இவ்விளக்கு காணப்படும். இப்போது, பெண் வீட்டாரின் சார்பாக இவ் விளக்கும் சீதனமாகக் கொடுக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் ராஜாக்கள் இரவு ஊர்வலம் செல்லும்போது, போர்க்காலங்களின் இரவுப் பொழுதுகளில், பரவலாக வெளிச்சம் கிடைக்கும் பொருட்டு, யானைகள் மீது மிகப்பெரிய தீபத்தை ஏற்றிச் சென்றதை இவ்விளக்குகள் வரலாறாகச் சொல்கின்றன.

யானை மீது பாவை விளக்கு
இதுவும் வரலாற்றுத் தொடர்புடையதே. அரசர் ஊர்வலமாகச் செல்லும்போது, யானையின் மீது அமர்ந்து விளக்கேற்றியபடியே பெண்கள் அவரை வரவேற்றிருக்கலாம். இப்போது, அழகுக்காகவும், சீதனப் பொருளாகவும்தான் இவ்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

கிளைவிளக்கு
கோயில்களில் தீபாரதனையின்போது இவ்விளக்கு பயன்படுத்தப்படுகிறது. கோபுரத்தின் வடிவமைப்பை இவ்விளக்குகள் கொண்டிருக்கும்.

குபேர தீபம்
நவீனகால சிந்தாங்களால் உருவாக்கப்பட்ட விளக்கு இது. செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையில், வீடுகளில் குபேர விளக்கு ஏற்றப்படுகிறது.

மின்சார விளக்குகள்
மேலே சொல்லப்பட்ட அத்தனை விளக்குகளையும் இன்றைய அறிவியல் தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி, விதவிதமான வடிவங்களில் தயாரித்து, செயற்கை தீபமாக மின் ஒளி பாய்ச்சி, அழகூட்டிக்கொள்கிறார்கள். திரி, எண்ணெய் தேவைப்படாமல், சுவிட்சைப் போட்டவுடனே எரியும் இவ்விளக்குகள்தான் 21ம் நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது.

சித்திரை-  தான்யம் உண்டாகும்
வைகாசி- செல்வம் கிடைக்கும்
ஆனி-  விவாகம் நடக்கும்
ஆடி-  ஆயுள் விருத்தி
ஆவணி-  புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி- பசுக்கள் விருத்தி
ஜப்பசி- பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை-  நற்கதி உண்டாகும்
மார்கழி- ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை- வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி-  துன்பம் அகலும்
பங்குனி- தர்ம சிந்தனை பெருகும்

குத்துவிளக்கு ஏற்றும் முறை
சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம். குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். குத்துவிளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்பொழுது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக்கூடாது.

தீபம் ஏற்ற கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. நெய்-சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும். நல்லெண்ணெய்-எல்லாப் பீடைகளையும் விலக்கும். விளக்கெண்ணெய் -உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர், சுகம், தாம்பத்திய சுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும். முக்கூட்டு எண்ணெய்- வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். இது குலதெய்வத்திற்கு உகந்தது.

ஜங் கூட்டு எண்ணெய்
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து மாற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48) நாட்கள் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.

இலுப்ப எண்ணெயிலும் தீபம், ஏற்றலாம். வீட்டிற்கு நலன் உண்டாகும். கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை. இதனால் கடன், துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப்படைக்கும்.

 

பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *