சிறுகதை – கீரிப்பட்டி வேலம்மா – ஜே.வி.நாதன்

கதைகள்
ஜே.வி.நாதன்
j.v.nathan

 

பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள். பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள்.
கடந்த பத்து நாட்களாக அரை அடி ஆழம் நீர் தெரியும். பகலில் இறைத்தானதும் இரவில் ஊறி, காலையில் மீண்டும் அரையடித் தண்ணீர் நிற்கும். நேற்றிலிருந்து அதுவும் தீர்ந்துவிட்டது. கீரிப்பட்டியில் எல்லாக் கிணறுகளும் வற்றி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் வேலம்மாளின் வீட்டுக் கிணறு மட்டும் வற்றவில்லை. அதுதான் ஊருக்கே நீர் வழங்கி வந்தது.
ஊர் பொதுக் கிணறு போல, யார் வேண்டுமானாலும் வந்து நீர் சேந்திப் போவார்கள். வேலம்மாவுக்கு அதில் தடையேதும் கிடையாது. ஆனால், நீர் வழங்கி வந்த ஒரு கிணறும் வற்றி விட்டதில் மனசு ஒடிந்து போயிற்று.
வழக்கமாக இந்த நேரத்துக்கு வேலம்மா வீட்டு முன்னால் ‘ஜே, ஜே’ என்று ஊர்ப் பெண்மணிகள் கூட்டம், கேலியும் கூச்சலுமாகக் கலகலப்பு நிறைந்து வழியும். இன்று..?
ஒரு காகம் வந்து, தத்தித் தத்தி வேலம்மாள் முன் உட்கார்ந்து பின் ‘ஜிவ்’வென்று எழுந்து கனகாரியமாக எங்கோ பறந்தது.
வெடி வைத்து ஆழப் படுத்தலாமென்றால் பணம் வேண்டும். பக்கத்துக் கணியம்பாடியில் போரிங் இயந்திரம் வந்து துளை போட்டுக் குழாய் பதித்திருக்கிறதாம். ஆனால், சுமார் எண்பதினாயிரம் ரூபாய் செலவு ஆயிற்றாம். கணியம்பாடிப் பண்ணையார் பெரும் செல்வந்தர். அது அவரால் முடியும். இந்தக் கீரிப்பட்டியில் அப்படிப்பட்ட செல்வமுள்ள புள்ளி யாருமில்லை. எல்லாம் அன்றாடம் காய்ச்சிகள்தானே?
டவுனுக்குப் போய் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் வேலம்மாள்.
ஃஃஃ
அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சங்கரன் சட்டென்று ஏதோ ஃபைலைப் புரட்டித் தீவிரமாக அதில் மூழ்கியிருப்பவன் போலப் பாவனை செய்யவும், பக்கத்து சீட் காதர் வராந்தா பக்கம் பார்வையை ஓட விட்டான்.
எளிய வாயில் சேலை. காதில் தோடு மட்டும் இருந்தது. மூக்குத்தி இல்லை. நெற்றி வெறிச்சோடியிருந்தது. முகம் வெகுவான சோகத்தையும், தயக்கத்தையும் பிரதிபலிக்க, வேலம்மாள் வந்து சங்கரன் முன் நின்று இருகரம் குவித்தாள்.
சங்கரன் நிமிராமல் ஏதோ ஒரு கடிதத்தை ஆழ்ந்து வரி விடாமல் படிக்க ஆரம்பித்தான். வேலம்மாள் வெகுநேரம் நின்று, அவன் நிமிரக் காத்து, ‘’ஐயா!’’ என்று அழைத்து, வேறு வழியின்றி அவன் நிமிர்ந்ததும் மீண்டும் அவள் வணங்கினாள். அவன் ‘வள்’ளென்று விழுந்தான். ‘’என்ன வேணும்? நான்தான் போன வாரமே சொன்னேன்ல, பென்ஷன் ப்ரப்போசல் எல்லாம் டைரக்டர் ஆபீஸ் மூலமா ஏ.ஜி. ஆபீசுக்கு அனுப்பியாச்சு. பிராவிடண்ட் ஃபண்ட் மட்டும் சாங்ஷன் ஆகியிருக்கு. அது என்ன சாதாரண வேலையா? தொகையும் என்ன கொஞ்சமா? ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபா ஆச்சே! ஏதாவது தப்பாயிட்டா ‘ஆடிட்’டுக்கு யாரு பதில் சொல்றது?’’
‘‘ரொம்பக் கஷ்டமா இருக்குங்க ஐயா. அதனாலத்தான் வந்தேன்.. மன்னிக்கணும்’’
‘‘யாருக்குத்தான் கஷ்டமில்லை?’’ சலிப்புடன் கூறியவன், ‘‘போய் மேனேஜரைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போ!.. அடுத்த வாரத்துல பில் போட்டுப் பணம் வாங்கித் தர முயற்சி பண்றேன்…’’ என்றான்.
மேனேஜர் சோடா பாட்டில் கண்ணாடி அணிந்திருந்தார். வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு ஒரு வாரப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். வேலம்மாள் போய் நின்றதும், ‘’அட ராஜகோபால் சம்சாரமா? ஏது இந்தப் பக்கம்?’’ என்று வியப்புக் காட்டி விசாரித்தார்.
மனசுக்கு ஆறுதலான குரலைக் கேட்டதும் விழிகள் பெருக்கெடுத்து நீரைக் கொட்டின.
’’நடுக்காட்டில் என்னை நிக்க வெச்சிட்டுப் போயிட்டாருய்யா என் வீட்டுக்காரரு. நான் நாய் படாதபாடு படறேன். சொந்த பந்தத்தில் ஆளு அம்பு கிடையாதுங்க. எனக்கு வரவேண்டிய பணத்தையெல்லாம் சீக்கிரம் வாங்கிக் கொடுதீங்கன்னா உங்களைத் தெய்வமா நினைச்சுக் கும்பிடுவேன்!’’
’’அட உனக்கு எதுக்கும்மா பணம்? கொழந்தையா குட்டியா? ராஜகோபால்தான் ஒரு குறையுமில்லாதபடி உனக்கு நிலம், சொந்த வீடு, வயல்னு வெச்சுட்டுப் போயிட்டாரே… சரி, சரி! உன் பணம் உனக்கு வந்துதானே ஆகணும், வரும். ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கே..’’
அவள் நிமிர்ந்தாள். மேனேஜர் குரலைத் தணித்துக் கொண்டார். ‘’அந்த ஈ செக்ஷன் கிளார்க் ஒரு மாதிரி ஆளு. இன்கிரிமெண்டுனா நூறு, லீவு சாங்ஷனா நூத்தைம்பது, ஜி.பி.எஃப். லோனா இருநூறுன்னு ‘ரேட்’ ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருக்கான். கஷ்டத்தைப் பார்க்காம கொஞ்சம் பணத்தைக் கொண்டுவந்து அவன்கிட்டே தள்ளிட்டா…’’
உதடுகள் துடிக்க பரிதாபமாக வேலம்மால் மேனேஜரைப் பார்த்தாள். ‘’பணத்துக்கு நான் எங்கேய்யா போவேன்?’’ என்று அவள் கண்களே கேட்டன.
‘‘கஷ்டம்தான் வேலம்மா, நா இல்லேன்னு சொல்லலை. உலகம் அப்பிடி இருக்கு. நமக்கு சீக்கிரம் வேலையாகணும்னா செய்துதான் தீரணும். நான் இங்கே மானேஜர்னுதான் பேரு. ஆனா அவன் பேச்சுதான் ஆபீசருகிட்டே எடுபடுது. ஆபீசரும் அவனும் ஒரே ஜாதிக்காரங்க. ஒரு ஆயிரம் ரூபாய் புரட்டிகிட்டு வந்து அவன்கிட்டே கொடுத்துப் பாரு. காரியம் தானா நடக்கும்!’’
‘‘ஆயிரம் ரூபாயா?’’ – அவளுக்குப் பகீரென்றது.
அவள் கணவன் ராஜகோபால் அதே அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தவன், காச நோய் பீடிப்பில் சானடோரியத்துக்கும் வீட்டுக்குமாக அல்லாடி, திடுதிப்பென்று அவளைத் தவிக்கவிட்டுக் கண்ணை மூடிவிட்டான்.
அவன் மறைவுக்குப் பின், வேலம்மாவுக்குக் குடும்ப ஓய்வூதியம், கிராஜுவிட்டி மற்றும் பொது சேம நல நிதியாக இத்தனைகாலம் சேமித்து வந்த தொகை வட்டியுடன் வரும் என்றார்கள். அதற்கு வேண்டிய விண்ணப்பங்களை அவளுடைய கிராமத்தின் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் தயாரித்துக் கொடுக்க, அவற்றை அலுவலகத்தில் சேர்த்துவிட்டு நடையாய் நடக்கிறாள் அவள்.
எப்போது போனாலும் அந்தக் கிளார்க் ‘சள் புள்’ளென்று எரிந்து விழும்போதே வேலம்மாளுக்கு சந்தேகம்தான், ’ஆசாமி பணம் எதிர்பார்க்கிறானோ?’ என்று. ஐம்பதோ நூறோ கொடுக்கலாம் என்றும் எண்ணியிருந்தாள். ஆனால், மானேஜர் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போடுகிறாரே?
‘‘ஐயா! பிராவிடண்ட் பண்டுப் பணம் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை சீக்கிரம் வாங்கிக் கொடுங்க. அது கைக்கு வந்ததும் அதிலிருந்து ஆயிரம் என்ன, ஆயிரத்து ஐநூறு ரூபாயே தர்றேன். நான் சொன்னா வாக்குத் தவற மாட்டேனுங்கய்யா… திடீருன்னு அம்புட்டுத் தொகைக்குத் தோதா என்கிட்டே நகை நட்டுகூட இல்லீங்கய்யா… என்னை நம்புங்க!’’
மானேஜர் யோசனையுடன் தலையை ஆட்டினார்.
ஃஃஃ
‘‘சார், கூப்பிட்டீங்களாமே..?’’ – ஈ செக்ஷன் சங்கரம் வந்து பவ்யமாக நின்றான்.
மானேஜர் வெற்றிலை பாக்கை மென்றுகொண்டே அவனைக் குனியச் சொல்லி ஜாடை காட்ட, சங்கரன் மேஜை முன் தலை குனிந்து காதை அவரிடம் கொடுத்தான்.
‘‘காலைல வந்துச்சே, ஜி.பி.எஃப். பார்ட்டி..’’
‘‘ஏ-2 கிளார்க் ராஜகோபால் சம்சாரமா ஸார்?’’
‘‘ஆமாம். தௌசண்ட் பேசியிருக்கேன். அது பணம் கைக்கு வந்ததும் தௌசண்ட் அண்ட் ஃபைவ் ஹண்ட்ரடாத் தர ஒப்புகிச்சு. சீக்கிரம் பில்லைப் போட்டு டிரெஷரிக்கு அனுப்பு. கேஷ் பார்ட்டிக்குக் கெடைச்சதும் நான் பேசின தொகை கைக்கு வந்துடும்..’’
‘‘வந்து, ஸார்…’’
‘‘பணம் வருமான்னு சந்தேகமா? பாவம்ப்பா சங்கரா அந்தப் பொம்பளை, நிச்சயம் பணம் வரும். நீ வேலையை முடிச்சுக் கொடு. பணத்துக்கு நான் கியாரண்டி. பணம் கைக்கு வந்ததும் நீ பாட்டுக்கு உன் பாக்கெட்டுல போட்டுகிட்டுப் போயிடாதே, என் பர்சண்டேஜ் எனக்கு வந்த்டணும், தெரிஞ்சதா?..’’
‘‘சேச்சே என்ன சார், நான் நியாயஸ்தன் சார்!’’
அந்த நியாயஸ்தன் தன் இருக்கைக்குத் திரும்பிப் போனான்.
ஃஃஃ
ஒரு வாரத்தில் வேலம்மாளுக்குத் தகவல் வந்தது, பிராவிடண்ட் பண்ட் பணம் தயாராக இருப்பதாக. ஆனால் நகரில் ஏதோ ஒரு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் அமைச்சருக்கு அந்த அலுவலகத்தில் வரவேற்புக் கூட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கூட்டத்தில் அமைச்சர் கையால் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வேலம்மாவுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் கீரிப்பட்டி கிராமமே அதிசயிக்கும் வண்ணம் ஜீப் ஒன்று வந்து வேலம்மாளை நகரத்துக்கு அழைத்துச் சென்றது.
அவள் கணவன் பணிபுரிந்த அலுவலகத்தின் முன்னால், திறந்த வெளியில் சரிகை பார்டர் போட்ட வெண்ணிறத் துணி மேவிய பந்தல், ஒலிபெருக்கி, வாழை மரங்கள், திரும்பிய பக்கமெல்லாம் போலீஸ், மக்கள் வெள்ளம்… யாவும் கண்கொள்ளாக் காட்சி!
அந்த அலுவலகத்தின் அதிகாரி மைக்கைப் பிடித்து அமைச்சரை வானளாவப் புகழ்ந்தார்.. தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்து மறைந்துபோன கிளார்க் ராஜகோபாலின் சேவையைப் பாராட்டினார். ராஜகோபாலின் விதவை மனைவிக்குப் பொது சேமநல நிதியாகச் சேர்ந்திருந்த ரூபாய் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சரிடம் கொடுத்து வேலம்மாள் கையில் கொடுக்கச் செய்தார்.
அவள் கண்கள் பனித்தன. உணர்ச்சி வசப்பட்டு மந்திரியிடம் பேச ஆரம்பித்தாள். அமைச்சர் வேலம்மாளின் கையில் மைக்கைக் கொடுத்து அதில் பேசுமாறு கூறினார்.
‘‘என் வீட்டுக்காரர் இறந்ததும் எனக்கு சேமநல நிதியாக இவ்வலவு தொகையைத் தர்றீங்க. நீங்க நல்லா இருக்கணும். ஆனா இந்தப் பணம் ஒரு லட்சத்து எட்டாயிரத்து ஐநூறையும் நான் எடுத்துக்கப், போறதில்லை. இங்கிருந்து பத்து கல் தொலைவுல கீரிப்பட்டின்னு எங்க கிராமம் இருக்கு. மருந்துக்குக் கூட சொட்டுத் தண்ணி சுரக்காத பாலைவனமாப் போச்சு எங்க ஊரு. அங்கே போர்வெல் போட்டு ஊருக்கே தண்ணீர் கிடைக்கிறாப்பல இந்தப் பணத்துல ஒரு பொதுக் குழாய் போட ஏற்பாடு செஞ்சிட்டா என் நெஞ்சு குளிரும்… இந்த உதவியை எனக்காக, எங்க ஊர்ல இருக்கற பாவப்பட்ட மக்களுக்காக நீங்க செய்யணும் சாமி!’’
மேடையில் நெடுஞ்சாண்கிடையாக வேலம்மாள் விழுந்து வணங்கிய போது அமைச்சரின் உடம்பு பதறியது. நாத்தழுதழுக்கச் சொன்னார்:
‘‘கேக்கவே மெய் சிலிர்க்குதம்மா. கணவரை இழந்து ஆதரவே இல்லாம இருக்கிற உங்களுக்குக் கிடைச்ச பணத்தைப் பொது சேவைக்குப் பயன்படுத்தணும்னு நீங்க நினைக்கறீங்களே, அதுவே போதும். நாங்க அரசாங்க செலவில் போர்வெல் போட்டுக் கொடுக்கறோம்மா!’’
‘‘செய்யுங்கய்யா. ஆனாலும் என் காணிக்கையா இந்த ரூபாய் ஒரு லட்சத்து எட்டாயிரத்து ஐநூறையும் நீங்க ஏத்துகிட்டுத்தான் ஆகணும். ஊருக்குள்ளே இன்னும் ஓரிரண்டு இடங்கள்லே குழாய் போட்டுத் தந்தீங்கன்னா எங்க கீரிப்பட்டி ஜனங்க குறை தீர்ந்து போகும்..!’’
அமைச்சருக்கு ஒரு விஷயம் புரியவில்லை. ‘’முழுசா ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு உங்க பேரில் செக் இருக்கும்மா இந்தக் கவரில். நீங்க தொகையை குறைச்சுச் சொல்றீங்களே..?’’
‘‘சரியாத்தானுங்கய்யா சொல்றேன். இந்தப் பணத்துக்கு பில் போட்டுக் காசாக்கித் தரணும்னா அந்த செக்ஷன் கிளார்க்குக்கு ஆயிரம் ரூபாய் தரணும்னு மானேஜர் ஐயா சொன்னாங்க. நான் பணம் கைக்கு வந்ததும் ஆயிரத்து ஐநூறாத் தந்துடறேன்னு அவங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கேனே…’’ என்றாள் வேலம்மா.
‘மடால், மடால்’ என்று இரு சப்தங்கள் கேட்டன.
அவை –
மானேஜர் ஒரு பக்கமும், ஈ செக்ஷன் குமாஸ்தா சங்கரன் இன்னொரு பக்கமும் மயக்கம் போட்டுத் தடலென்று கீழே விழுந்த சப்தங்களாய்த்தான் இருக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *