மருத்துவர் பத்மா

இங்கிலாந்தில் தனியார் மருத்துவமனைகள் கிடையாது – டாக்டர் பத்மா சுந்தரம்

slider மருத்துவம்
மருத்துவர் பத்மா
மருத்துவர் திருமதி பத்மா சுந்தரம்

 

‘சந்திராயன் 2’ பறந்துகொண்டிருக்கும் வேகத்தை கால்குலேட் பண்ணிக்கொண்டு, நிலாவுக்குள்ளும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஆரம்பித்துவிட முடியுமா என்கிற சிந்தனையில் வாழ்கிற இந்தக் காலத்தில், பழங்கால டுபுக்கு கதைகளை வைத்துக்கொண்டு, பாட்டி வைத்தியம் என்கிற பெயரில், கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் உடல்நலக் குறிப்புகளை சொல்லித் திரிகிறதற்கும் ஒரு குரூப் எப்பவுமே தயாரா இருப்பாங்க.

டெஸ்ட் டியூப் பேபிகளுக்குக்கு கல்யாணம் ஆகி, அவர்களின் வாரிசுகளுக்கும் வாரிசுகள் உருவாகி, நலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்துல, கருவைச் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஈஸியா கண்டுபிடித்துவிட நிறைய வழிகள் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். இந்த மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து இங்கே விளக்குகிறார் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவரான டாக்டர் பத்மா சுந்தரம்.

“வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என சோதனை செய்ய நம்ம நாட்டுல அரசாங்கம் தடை விதித்திருப்பதால், சிலபேர் இப்படியெல்லாம் கட்டுக்கதைங்களை அவிழ்த்து விடுவார்கள். ஒரு குழந்தை தாயின் கருவறைக்குள் வளரும்போது ஆணா, பெண்ணான்னு கண்டுபிடிக்கவே முடியாது. ஆனாலும், இப்படியான அறிகுறிகள் இருந்தால் அது ஆண் குழந்தை, இப்படியான அறிகுறிகள் இருந்தால் அது பெண் குழந்தைன்னு சொல்றதெல்லாம் கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை சந்தோஷப்படுத்தறதுக்குதான்.

உதாரணமாக, வயிற்றில் வளர்ந்துகொண்டு இருப்பது ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிசாகவும், கீழ் வயிறு கொஞ்சம் சின்னதாகவும் இருக்கும்ன்னு சொல்வாங்க. ஆனா, மெடிக்கல் ரிசர்ச் படி அப்படி எதுவும் கிடையாது.

கர்ப்பிணியாக இருக்கற பெண்ணின் சிறுநீர் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை எனவும் கப்சா விடுவார்கள். அதுவும் பொய்தான். அதுபோல,  கர்ப்பத்தின் போது, பெண்களுக்கு இயற்கையாகவே மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். இடது மார்பகத்தை விட வலது மார்பகத்தின் அளவு பெரிதாக இருந்தால், ஆண் குழந்தைதான்னு சொல்வாங்க. அதையெல்லாம் நம்பிறாதீங்க.

முக்கியமாக, கர்ப்ப காலத்தில் எப்போதும் பாதம் குளிர்ச்சியாக இருந்தால், அதுவும் ஆண் குழந்தை பிறக்கும் என்பதற்கான அறிகுறின்னு சொல்வாங்க. அதையெல்லாம் நம்பிரக்கூடாது.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இதயத் துடிப்பானது குறைந்தபட்சம் 110லிருந்து அதிகபட்சம் 160 வரைக்கும் இருக்கும். இதை வைத்தும் ஒரு கணக்கு சொல்வாங்க. அதாவது, வயற்றுக்குள் இருக்கற குழந்தையின் இதயத்தின் துடிப்பானது 140-க்கு கீழே இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைன்னு சொல்வாங்க. இதுவும் பொய்தான்.

அப்புறம், கர்ப்ப காலத்தில் கூந்தலின் வளர்ச்சியானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை, கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தால் பெண் குழந்தைன்னு சொல்வாங்க. இதெல்லாம் உணவு, வாழ்கிற சூழல் பொருத்துதான் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். இதையெல்லாம் நம்பிரக்கூடாது.

கர்ப்பமா இருக்கும் போது வித்தியாசமான ருசியோட சாப்பிடனும்போல தோணும். அதையே காரணமாக வைத்து, வயித்துல இருக்கறது ஆண் குழந்தையா இருந்தா, புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகமா இருக்கும்னு கப்சா விடுவாங்க. அதையெல்லாம் நம்பிறக்கூடாது.

பொதுவாகவே, கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோர்வு இருக்கும். அப்படி சோர்வுடன் இருக்கும் போது, இடது பக்கம் சாய்ந்து தூங்கும் பழக்கம் இருந்தால், அது ஆண் குழந்தைக்கான அறிகுறி, வலது பக்கம் சாய்ந்து தூங்கினால் அது பெண் குழந்தைக்கான அறிகுறி என்றும் சொல்வார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எவ்வளவுதான் க்ரீம்களை கைகளுக்கு தடவினாலும், கைகள் வறட்சியுடனும், வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்தாலும், அது ஆண் குழந்தைதான்ன்னு அடிச்சிப் பேசறவங்களும் உண்டு.

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை சிகப்பா பிறக்கும் என்பதும் ஒருவித மூடப்பழக்கம்தான். அம்மாவும் அப்பாவும் என்ன கலர்ல இருக்காங்களோ, அவங்களோட குழந்தைங்களும் அப்படிதான் இருப்பாங்க. குங்குமப்பூ சாப்பிட்டு கலரை மாத்திக்க முடியும்ன்னு நெனைச்சா, நீக்ரோக்கள் வெள்ளைக்காரங்களா மாறி இருக்கணுமே?

அறிவியலை எல்லா இடத்துக்குள்ளும் திணித்து வைத்திருக்கிற இந்த 21ம் நூற்றாண்டிலும், மூடப் பழக்கங்களுக்கு பஞ்சமில்லாத நாடாக இந்தியா இருப்பது வருத்தமான விஷயமே. அதுவும் கிராமத்து ஜனங்கள்கிட்ட இந்தப் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், முன்பு மாதிரி அதிகளவு இல்லை என்பது சந்தோஷமான விஷயம்.

நான் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஹாஸ்பிட்டலில் எட்டு வருஷம் வேலை பார்த்தேன். அங்கே தனியார் மருத்துவமனைகளே கிடையாது. எல்லாம் அரசு மருத்துவமனைகள்தான். ஏழை பணக்காரர் என்கிற பாகுபாடு அங்குள்ள மருத்துவமனையில் கிடையாது. அந்த மாதிரி நம்ம நாட்டிலேயும் வரணும் என்பதே என்னுடைய ஆசை. கல்வியும் மருத்துவமும் எல்லாருக்கும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், இந்தியாவில் இன்னும் இருக்கிற மூட நம்பிக்கைகள் காணாமல் போய்விடும்.

மருத்துவம் என்னதான் முன்னேறினாலும், சிசேரியன் மூலமாக நடக்கற டெலிவரி நம் நாட்டில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், மருத்துவத் துறையில இருக்கற 20விழுக்காடு மருத்துவர்கள்தான். இந்த 20 சதவீதம்பேர் வியாபார நோக்கோடு செயல்படுவதால்தான், மீதி இருக்கற 80 சதவீதம்பேரும் பாதிக்கப்படுகிறார்கள். என் மருத்துவத்தைப் பொருத்தமட்டில் 90 விழுக்காடு  நார்மல் டெலிவரிதான்.  நார்மல் டெலிவரி ஆகற வரைக்கும் பொறுத்திருக்கிற பண்பு டாக்டர்களிடம் இருந்தால், 80 விழுக்காடு பெண்களுக்கு சிசேரியன் தேவையிருக்காது.

தொப்புள் சுத்திருக்கு, அதனால குழந்தைய ஆபரேஷன் பண்ணித்தான் எடுக்கணுங்கறதுல ஆரம்பிச்சி, சிசேரியனுக்கு காரணமாக பல விஷயங்களை சொல்வார்கள். ஆனால், தொப்புள்கொடி சுத்தி இருந்தாலும், நார்மல் டெலிவரி செய்ய முடியும். கடந்தவாரம் ஒரு பெண்ணுக்கு இதே நிலைமைதான். ஆனால், நார்மல் டெலிவரிதான் செய்தோம். எல்லாம் டாக்டர்கள் கைங்கர்யம்தான்.

முதல் குழந்தை சிசேரியன் மூலமாகப் பிறந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன்தான் என்கிற மூடத்தனமும் நம் நாட்டில் பரவலாக இருக்கிறது. முதல் குழந்தையை சிசேரியன் மூலமாகப் பெற்றெடுத்த 100 தாய்மார்களில் 70 சதவீதம் பேருக்கு இரண்டாவது குழந்தையை நார்மல் டெலிவரியாக்கிருக்கிறேன். ஆனால், இது நடந்தது இங்கிலாந்தில்.

ஜாதகம், சோதிடம் என நேரம் பார்த்து குழந்தையைப் பெற்றுக்கொள்ள இன்றைய சில பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதுகூட சிசேரியன் அதிகமாக உருவாகறதுக்கு காரணம். ஒரு பக்கம் மருத்துவர்கள் காரணமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மக்களும் காரணமாக இருப்பதற்கு நம்ம நாட்டில் உள்ள சில அடிப்படை விஷயங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. இவை அனைத்தும் காணாமல் போய் நலமான இந்தியா நிச்சயமாக உருவாகும்.

இந்த உலகத்திற்கு மருத்துவத்தை வழங்கிய நாடு இந்தியாதான். இங்கிலாந்தில் இந்திய மருத்துவர்கள்தான் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்.

இந்தியாவில் மருத்துவச் செலவுகள் மிகவும் குறைவு என்பதால், உலகெங்கிலுமுள்ள நோயாளிகள் இன்றைக்கு இந்தியாவுக்கு வந்து தரமான சிகிச்சையைப் பெற்று குணமடைந்து செல்கிறார்கள். ஆனாலும், நம் நாட்டில் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் வயிற்றுக்குள் இருக்கற குழந்தை ஆணா, பெண்ணான்னு கண்டுபிடிச்சி சொல்கிற வித்தை இன்னமும் இருப்பது அக்மார்க் காமடி ரகம்’’ என்கிறார் டாக்டர் பத்மா சுந்தரம்.

 

சந்திப்பு : பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *