புத்தக விமர்சனம் – Mrs.விஸ்வநாதன் – ரிச்சர்ட்ஸ் (1983 – 1920)

இலக்கியம் கதைகள்

படித்தேன் பகிர்கிறேன்

(புத்தக விமர்சனம்)

Mrs விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்
Mrs விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ்

Mrs. விஸ்வநாதன்- ரிச்சர்ட்ஸ்
(1983 – 1920)
பக்கங்கள் : 380
விலை ரூ : 380
ஆசிரியர்கள் : மலர் மற்றும் -விசு
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்

 

வேலூரில் புல்லட் ட்ரெய்ன் வேகத்தில் ஆரம்பிக்கிறது கதை. பக்கங்கள் நகர நகர கதை ஆரம்பமாகாத மாதிரியே தோன்றியது. ஆனால், போகப் போக சம்பவங்களையே கதையாக்கி இருக்கிறார்கள் என புரிய ஆரம்பித்தது.

முதல் பக்கத்தில் காந்தி நகரைப் பற்றி உள்ள விவரணை மற்றும் ஆங்காங்கே வரும் பாலாறு பற்றிய வரிகள் தவிர்த்து கதை தொடர்பாக பெரிதாக எந்த விவரிப்புகளும் இல்லை. ஆனால், ஆசிரியர்கள் சொல்ல நினைத்த அனைத்தும் கதாபாத்திரங்கள் உரையாடல்களாலேயே கதை சொல்லி, காட்சிகளை இலகுவாக நகர்த்தி செல்கின்றன .

நாயகனும் நாயகியும் முதல் சந்திப்பில் எப்படிப் பேசுகிறார்களோ, அதே டெம்போவை 380 பக்கங்களிலும் தொய்வில்லாமல் மெயின்டெய்ன் செய்கிறார்கள் கதாசிரியர்கள்.

எண்பதுகளில் நண்பர்கள் காரும் பைக்கும் பீரும் தம்முமாக பள்ளிப் பருவத்தில் அடிக்கும் கொட்டம் ரசிக்கும்படி உள்ளது. பாலாறு, கதை முழுக்க பயணிக்கிறது. அது நல்ல வசதி படைத்த நண்பர் குழாம் என்பதை அவர்களின் வாகனங்கள் சொல்லுகின்றன. கதை நாயகனுக்கு நல்ல ‘சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’. எல்லாக் கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் துடுக்காகவே பதில் பேசுகின்றன.

‘அலைகள் ஓய்வதில்லை’, ட்ரங்கால் புக் செய்து பேசுவது, லாண்டரிக்காகவே பெங்களூர் செல்வது, டெலிஃபோன் கனெக்‌ஷன் பெறுவது என்று எண்பதுகளுக்குள் நம்மால் சுலபமாக பொருந்திப்போக முடிகிறது.

உமாவுக்கு வாய்த்ததைப் போன்றதொரு அப்பா பூவுலகில் பார்ப்பது கடினம். அத்தை, வெளிநாட்டில் இருக்கும் அம்மா, கதை நாயகனின் பெரியப்பா பையன் என்று எல்லோருமே ரொம்ப நல்லவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையில் தேர் ஈஸ் நோ நெகடிவ் கேரக்டரைசேஷன் அட் ஆல்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உருவான கதை உபயோகமான தகவல். ஆனால், இந்தக் கதையில் எதற்கு என்று யோசித்தபோது, புளியமரம் பற்றி சிறுகுறிப்பு வரைக என்ற கேள்விக்கு மாட்டைப் பற்றி முழுவதுமாக விவரித்து, அதாகப்பட்ட மாடு இந்த புளியமரத்தில் கட்டப்பட்டிருந்தது என்ற அந்த பழைய ஜோக் ஞாபகம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதைப்போலவே சிப்பாய் கலக விவரிப்பும். கதையினூடே இவற்றை விவரித்திருந்தால் பொருத்தமாயிருந்திருக்குமோ?

ஆனால், பேரலல்லாக பயணிக்கும் மற்றொரு கதை அதிகமாக ஆர்வத்தைத் தூண்டியது. பங்கஜத்தின் பிடிவாதமும், பரிசல்காரனின் மௌனமும் ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும் போகப் போக நமக்குப் பழகி விடுகிறது. இந்தக் கதை சில அத்தியாயங்களே வருகிறது. அட்டைப்படமே இந்தக் கதையை விவரிப்பதாக இருப்பதால், இந்த ஃப்ளாஷ்பேக் பற்றி நிறைய இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனேன். கதாபாத்திரங்களை விட கதாசிரியர்கள் இந்த அத்தியாயங்களில் நிறைய பேசுகிறார்கள்.

நமக்குத் தான் கதை நாயகனின் பெயர் தெரியவில்லை, உடன் இருக்கும் நண்பர்களும், கதாநாயகி உட்பட அவன் பெயரே தெரியாமல் கடைசிவரை இருப்பது நம்பும்படி இல்லை. ஸ்கூலிலோ, காலேஜிலோ கூட அவன் நிஜப் பெயரை கேட்டுத் தெரிந்துக்கொள்ள முயலாதது ஆச்சர்யம். அதைப்போலவே தலைமறைவான நண்பன் ரகுவைப் பற்றியோ அந்த ஆக்ஸிடென்டில் அடிபட்ட தாத்தாவைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. அம்போவென விட்டுவிட்டு அவரவர் வேலையைக் கவனிக்க சென்றுவிடுகின்றனர். இறுதியில் எங்கிருந்து வந்தது அந்த திடீர் அக்கறை என்று புரியவில்லை.

இப்படி ஒரு காதலைக் கொண்டவர்கள் பின்னர் எப்படி அப்படியொரு முடிவெடுத்திருக்க முடியும், எதுவாகிலும்? நம்பமுடிவில்லை. ஐந்தே வருடங்களில் வறண்டு போன பாலாறு போல திடீரென ஹெவியாக மாறிவிடுகிறது கதை. கடைசி அத்தியாயத்திற்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டேஜ் தந்திருக்கலாமோ கதைசொல்லிகள்?

கொஞ்சம் நெகடிவ்ஸும் உண்டு.

அதாவது, எக்கச்சக்கமான உரையாடல்கள். ஆரம்பத்தில் ஓவர் டோசேஜ் ஆகிப்போன பாடல் வரிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும். மேலும், நிறைய ஆங்கில மொழிக் கலப்பு. என்றாலும், முதல் படைப்பே தலகாணி சைஸ் நாவல் என்பது சாதாரண முயற்சி அல்ல. வாழ்த்துக்கள் மலர் & விசு.

 

அருணாராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *