புத்தக விமர்சனம் – மூன்று காரணங்களும் மூன்று குறிப்புகளும்

இலக்கியம் கலை

படித்தேன் பகிர்கிறேன்

(புத்தக விமர்சனம்)

மூன்று காரணங்களும்
மூன்று குறிப்புகளும்

 ஆசிரியர் : மதுரை சத்யா

பக்கங்கள் : 124

விலை : ரூ 80

மதுரை சத்யா
மதுரை சத்யாவின் மூன்று காரணங்களும் மூன்று குறிப்புகளும்

ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும்’ என இதுவரை எந்த நியதியும் உருவாக்கப்படவில்லை. உருவாக்கவும் முடியாது. விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது சிறுகதை இலக்கியம். ஆனால், கதையைப் படித்து முடித்தவுடன், வாசகரின் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை அந்தச் சிறுகதை உருவாக்க வேண்டும் என்கிற பொதுவான தரக் கட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. வாசகரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும். அப்படி, மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்ட சிறுகதைகள், நீண்ட காலத்திற்குப் பேசப்பட்டு, இலக்கிய உலகில் தனக்கென ஓர் அங்கீகாரத்தையும் பெறும்.

ஒரு சிறுகதையை எழுதத் தூண்டுவது எது? ஒரு சிறுகதை யாருக்காக எழுதப்படுகிறது? ஒரு சிறுகதைக்கான வாசகர் வட்டம் எது? ஓர் எழுத்தாளர் தனக்கான வாசகர் வட்டத்தை எப்படி வரையறுப்பது? எல்லோராலும் சிறுகதை எழுத முடியவில்லையே ஏன்? இப்படியாக சிறுகதைகள் பற்றிய பல கேள்விகள், சந்தேகங்களாக எனக்குள் எழுந்த காலம் உண்டு.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நான் விரும்பி வாசித்த ‘மந்திரவாதி மான்ட்ரேக்’, ‘டார்ஜான்’ ஆகிய கதைகள், கல்லூரிக் காலத்தில் சலிப்பைக் கொடுத்தன. ‘ஓ… அப்படியென்றால், ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு மாதிரியான கதைகள் பிடிக்கும்போல’ என நான் நினைத்தபோது, ஐந்தாம் வகுப்பில் நான் வாசித்த அதே கதைகளை ஹாலிவுட்டில் திரைப்படங்களாக உருவாக்கி, எல்லோரையும் விரும்பச் செய்திருந்த விஷயம் தெரிய வந்தது. எழுத்தில் சலிப்பைக் கொடுத்த கதைகள் திரைப்படங்களாக உருமாறும்போது, விருப்பைப் பெறுகின்றன. எழுத்து காட்சியாக மாறும்போதும், வாசகன் பார்வையாளனாக மாறும்போதும் விருப்பு, வெறுப்பு இடமாறு தோற்றப்பிழைக்கு எடுத்துக் காட்டாய் அமைந்துவிடுகிறது.

‘அப்படியென்றால், ஒரு படைப்பை எப்படிக் கொடுக்கிறோமோ, எப்படி வழங்குகிறோமோ, அதைப் பொருத்து அதன் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறதா?’ என்கிற அடுத்த கேள்வி எனக்குள் முளைத்தது. படைப்பு பற்றிய இப்படியான கேள்விகள், என்னுடைய வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருந்தன, இருக்கின்றன. மதுரை சத்யாவின் ‘மூன்று காரணங்களும் மூன்று குறிப்புகளும்’ சிறுகதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போது, படைப்பியல் சார்ந்த என் இப்போதைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் ஏதேனும் விடை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளுக்குள் தோன்ற, ஒவ்வொரு கதையாகப் படித்து முடித்தேன்.

ஒரு படைப்பாளியை ஒரு நிகழ்வோ, சம்பவமோ பாதிக்கும்போது, அதிலிருந்து ஒரு படைப்புக்கான கரு உருவாகிறது. அந்தக் கருவுக்குத் தேவையான ஊட்டச் சத்தாக சில புனைவுகளையும், அதை அழகு படுத்துவதற்காக சில கற்பனைகளையும் உருவாக்கி, சொற்களை வசமாக்கி முடிக்கையில், அந்தப் படைப்பாளியிடமிருந்து ஒரு படைப்பு பிரசவித்துவிடுகிறது. மதுரை சத்யாவின் ‘மூன்று காரணங்களும் மூன்று குறிப்புகளும்’ என்கிற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் யாவும் இப்படித்தான் உருவாகியிருக்கும்.

மதுரை சத்யா பெண் என்பதால், ‘பெண்ணியம் என்கிற வட்டத்திற்குள் இந்தச் சிறுகதைகள் அடங்கியிருக்குமோ?’ என்கிற சந்தேகத்தோடுதான் முதல் கதையான ‘கவிதைக்காரி’யை வாசிக்கத் தொடங்கினேன். என்னுடைய சந்தேகம் தவறானது என்பதை ‘கவிதைக்காரி’ சிறுகதை நிரூபித்தது. அடுத்த கதை, அதற்கடுத்த கதை என ஒவ்வொரு கதையாகப் படித்து முடிக்கையில், எந்தக் கதையிலும் அவர் பெண்ணியம், ஆணியம் சொல்ல வரவில்லை. மாறாக, மனித உறவுகளைப் பத்திரப்படுத்தவும், பாதுகாக்கவும் உறுதுணையாக இருக்கிற பண்புகளைப் பற்றியே சொல்லியிருக்கிறார். இரண்டு கதைகளில் பயம், அகங்காரம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

‘கவிதைக்காரி’யில் இரண்டு பெண்களுக்கு இடையேயான நட்பைச் சொன்னவர், ‘சொல்லாமலே’ சிறுகதையில் வந்த வாய்ப்பை அகங்காரத்தால் பறிகொடுத்த ஒரு பெண்ணின் கதையைச் சொல்லியிருக்கிறார். ‘பழரசம்’ சிறுகதையில் மனிதத்தைத் தொலைத்துவிட்டு மனிதர் என்கிற போர்வையில் அலைகிறவர்களைப் பற்றி எடுத்துரைக்கிறார். இதுபோல் ஒவ்வொரு கதையிலும் ஒரு விஷயத்தை, தன் எழுத்தாளுமையோடு முன்னெடுத்து வைக்கிறார்.

பத்து சிறுகதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தில், எல்லாக் கதைகளுமே என்னைக் கவர்ந்தன என்றாலும், அத்தனைக் கதைகளிலும் மாறுபட்டு நின்றது ‘ஒரு நாள் இரவில்’ என்கிற சிறுகதையே. நட்பு, ஏமாற்றம், மனிதம், அமைதி, காதல், அறிவு, கோபம், அன்பு, உறவு என ஒவ்வொரு கதைகளிலும் ஒரு விஷயத்தைச் சொல்கிறவர், ‘ஒரு நாள் இரவில்’ கதையில் ஆவியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பேய் பிசாசு, ஆவி என்பதெல்லாம் மூட நம்பிக்கை’ என ஒரு சாராரும், ‘அதெல்லாம் உண்மைதான்’ என ஒரு சாராரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் இக் காலத்தில், ஆவி இருக்கிறதா, இல்லையா? என்பதை ‘ஒரு நாள் இரவில்’ சிறுகதையின் முடிவில் சாமர்த்தியமாக வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்.

ஒவ்வொரு சிறுகதையிலும் ஆங்காங்கே ‘நறுக்’ வசனங்களால் முத்திரை பதிக்கும் மதுரை சத்யா சிறுகதை உலகுக்கு புதியவர் என்றாலும், அவரின் எழுத்துகளில் புதியவர் என்கிற எந்த அடையாளமும் இல்லாமல், தன்னைக் காட்டியிருப்பது, எதிர்காலத்தில் இதுபோன்ற இன்னும் பல தொகுப்புகளை வெளியிடுவார் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.

 

– பாலமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *