கலைஞருக்கு ஒரு கடிதம்

கட்டுரைகள்
கலைஞர் கருணாநிதி
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி

 

அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு,

அனைவரும் ராஜாஜி ஹால் உள்ளும், புறமும். பலர் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் மூழ்கி இருக்க, நானும் என் நண்பன் ரவிசங்கரும் இரு சக்கர வாகனத்தில் காவேரி மருத்துவமனை வாசலிலும், கோபாலபுரத்து வாசலுக்கும் சென்றோம். இரண்டு இடங்களிலும் இருந்த விளக்குக் கம்பம் முந்தைய நாள் நிகழ்வின் சாட்சியாக இருந்தது.

‘கலைஞரே உங்களுடனான என் பயணம் எங்கே?’ என உங்கள் கோபாலபுரத்து வாசலில் என் மனம் தேடியது.

“எத்தனை பேர் நட்ட குழி; எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் பற்றி இழுத்த
இதழ்” என, பட்டினத்தாரின் இந்தப் பாடலோடு துவங்கிய உங்களின் கட்டுரையோ, தொடரோ, ‘குங்குமம்’ இதழில் படித்ததாக நினைவு. அதே கட்டுரையின் நீட்சியாக, “பெண் என்பவளை மேடு, சமவெளி, பள்ளம் என மூன்றாகப் பிரிக்கலாம்” என்று நீண்ட உங்களின் வரிகள் என் வாலிப வயதை உங்கள் பக்கம் ஈர்த்தது. பின்னர், அப்பாவின் நூலகர் பணி உதவ
நெஞ்சுக்கு நீதி’, ‘முரசொலி’, என அனைத்தும் எனது விடுமுறைக்குத் தீனிபோட்டது.

‘தென்றலைத் தீண்டியதில்லை, தீயைத் தாண்டியிருக்கிறோம்’ என்கிற திரைவசனம் என்னை நெருக்கமாய் உங்கள் மொழிப்புலமைக்குள் ஈர்த்தது.

“வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்!” என்கிற அணிவகுப்பு பாடலை நீங்கள் பாடியபடியே, திருவாரூர் வீதிகளில்
தலைமை தாங்கியதை கேள்விப்பட்டு, மாமன்னர் இராஜேந்திரசோழன் தடங்களைத் தேடி
அலைந்தபோது, உங்களைப் பற்றியும் திருவாரூரில் பேசினோம். திருவாரூரின் கமலாலயக்குளம்
எங்களுக்கும் வாழ்க்கையின் எதிர்நீச்சலைக் கற்றுத் தந்தது.

“கூட்டுச் சமுதாயங்கள் தோன்றாத நிலையில் அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்பில்லாத ஒன்றாக இருந்திருக்கலாம். இன்று அரசியலும், இலக்கியமும் பிரித்துப்பார்க்கவே முடியாதவை. இலக்கியத்தைவிட்டு ஒதுங்கியிருக்கிறேன் என்பது, ஒரு மனிதன் பூமியின் ஈர்ப்புச் சக்தியை விட்டு ஒதுங்கியிருக்கிறேன் என்பதற்கு சமமானது” என்று சொன்னவர் நீங்கள். இயல், இசை, நாடகம் இம் மூன்றும் இணைந்த திரைப்படத்துறையின் மைய சக்தியாகவே இருந்தவர் நீங்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா!’ இவ்விரண்டையும் எனக்குள்ஆழ விதைத்த அரசு அலுவலகங்கள் அனைத்தும் உங்கள் ஆட்சிக் காலத்தில் என்பதை கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

“சோழன் சிலை ஸ்டாப் இறங்கிக்க” என தஞ்சை பேருந்துகளின் நடத்துநர்கள்
அறிவிக்கும் போதெல்லாம், “இந்திய நாட்டின் வரலாறு கங்கைக் கரையில் இருந்து
எழுதப்படாமல் காவிரிக்கரையில் இருந்து எழுதப்படவேண்டும்” என்ற உங்கள் ஆசையை அசை போடுவேன் தஞ்சை பெருவுடையாரை வியந்தவாறு.

வரலாற்றை அடுத்த தலைமுறைக்குச் சொல்லுதல் நம் கடமை. காலமாற்றம், கொள்கை மாற்றம், வரலாற்று நிகழ்ச்சிகளை மறைக்கக்கூடாது என்கிற தெளிவு இருந்தமையாலேயே இன்று நாங்கள் பயணிக்கும் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படையை மண்மூடி போகாமல், அய்யன்
பாலகுமாரன் கோரிக்கையை ஏற்று காப்பாற்றிய அக்கறைக்கு என்றும் தலைவணங்குவோம்.

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்!” என வசை பொழிந்த பாரதியார் “உண்மையொன்றே தெய்வமென்றுணர்வீரே!” என்று கூறிய கருத்தே ‘ஒருவனே தேவன்’ என்று விளக்கியதோடு, அவ்விதமே வாழ்ந்ததாலேயே நீங்கள் பிரபஞ்ச சக்தியால் நினைக்கப்படுபவராகவும் இருந்திருக்கிறீர்கள்.

இலக்கியம் என்ற குழம்பில் கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற உள்ளடக்கம் (சிஷீஸீtமீஸீt) மட்டும் இருந்தால் போதாது. உப்பு, புளி, மிளகாய் போலஅழகியலும் (கிமீstலீமீtவீநீs) அவசியம் என்று நீங்கள் ‘சுபமங்களா’வில் அளித்த பேட்டி எனது பலவிதமான பயணங்களின் விதை.

“தனித் தமிழ் வேண்டும். அதற்காக ,பேனாவை ‘மூடியிட்ட எழுதுகோல்’ என்று எழுதவேண்டாம் என்று சொல்லிய உங்களின் இந்த வளைந்து கொடுக்கும் தன்மையே, உங்கள் தமிழ் என்ற,அம்பு சகல இலக்குகளையும் தொடக் காரணம்.

திருக்குறளின் காமத்துப்பாலை காதலிக்கும் வருடங்களில் உங்கள் பொழிப்புரையை படித்தபின் புரிந்தது, அனுபவித்தவன் அலட்டிக் கொள்ளமாட்டான் என்று!

சட்டசபையோ, கவியரங்கமோ, பத்திரிகையாளர் சந்திப்போ, உங்கள் தமிழ்
ஆளுமையினால் கேள்விக் கணைகளை முனை முறிந்த அம்பாக்குவதோடு, சில சமயம் அதனை
மலர் மாலைகளாகவும் மாற்றிச் சூடிக்கொண்ட திறன் கண்டு ‘சமயோசிதம்’ என்ற வார்த்தையின் ஆழத்தை என்னுள் விதைத்தது நீங்கள்.

‘கைம்பெண்’, ‘மாற்றுத்திறனாளி’, ‘திருநங்கை’ போன்ற வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் அவர்களை கௌரவித்த தன்மை பற்றி பலர் பேசினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஓர் அபிமானியின் மரணத்திற்குப்பின் அவரது குடும்பம் ‘லட்சுமி’ என்ற நண்பனின் சகோதரியை விதவையாக சமூகத்தில் விடாது, கைம்பெண் என மாற்றியபோதே நீங்கள் விதைத்தது தமிழ் உணர்வு வாக்கியம் மட்டுமல்ல, பெண்ணின் வாழ்க்கை எனத் தோன்றியது.

உங்களை ஆராதித்தோரும், அவதூறு செய்தவர்களும் மொழிகுறித்தும், அடுத்த
தலைமுறை குறித்த அக்கறையோடும் நீங்கள் செய்த பங்களிப்பை யோசிப்பார்கள் எனில், உங்கள் நூல்களையும், நீங்கள் எழுதிய கடிதங்களையும் தேடி வாசிப்பார்கள்.

உங்கள் இறுதி யாத்திரையில் நீங்கள் யார் உங்களின் தாக்கம் என்ன என்பதை உணர்ந்தே
உங்கள் மகள் கனிமொழியின் மகன் உங்களோடு சேர்த்து பேனாவையும் புதைத்தான். நீங்கள் ஒரு தலைமுறைக்கு விதைத்த தமிழ், இனி என்றும் அழியாது துளிர்க்கும்.

உங்கள் பிறந்த நாளுக்கு கனிமொழி எழுதிய கவிதையின் சில வரிகளை நினைவுகூர்கிறேன்.

“நீ பேசுவதில்லை
ஆனால், நாங்கள்
உன்னைப் பற்றியேதான்
பேசிக்கொண்டிருக்கிறோம்!
வா… வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது
நீ வருவாய் என்ற நம்பிக்கை…
நீயின்றி இயங்காது எம் உலகு.”

தந்தையை இழந்த மகளின் துயரம்போல், உங்கள் இழப்பு இலக்கிய வாசிப்புக்கு நேர்ந்த இழப்பாகவே உணர்கிறேன். உங்கள் எழுத்துக்கள் பலர் தொட என்ன செய்யவேண்டுமோ, அதை காலம் செய்யும்.

உங்களுக்கு கடிதம் எழுதும் முன் நண்பர் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு விவாதித்தேன்.அவர், “இலக்கியத்திற்காக மட்டும் நீங்கள் ஒரு பத்தாண்டுகள் பணிபுரிந்து இருக்கலாம்” என்றார்.

கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தின் உள்ளே நின்றபோது தோன்றியது, ‘எழுதுவது வேறு. வாசிப்பது வேறு. வாசிக்கத் தூண்டுவது வேறு! வாசிப்பின் தாக்கம், சூழல் என்றேனும் ஒருநாள் எழுத வைத்துவிடும்.

’அண்ணாவின் நீட்சியாக நீங்கள்’ என அரசியல்வாதிகள் கொண்டாடும் வேளையில், எழுத்தின், வாசிப்பின், இலக்கியத்தின் நீட்சியாக அண்ணா நூலகத்தின் புத்தகங்களை புரட்டியவாறே என் வாழ்க்கையைக் கடத்திவிடுவேன். நிறைவான வாழ்க்கை உம்முடையது. இதுபோதும்!

– சரஸ்வதி சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *