தெருவோர தெய்வங்கள் - சிறுகதை

தெருவோர தெய்வங்கள் – சிறுகதை – ஜிப்ஸி ரகுவேல்

slider கதைகள்
தெருவோர தெய்வங்கள் - சிறுகதை
தெருவோர தெய்வங்கள் – சிறுகதை – ஜிப்ஸி ரகுவேல்

 

சன்னமாகப் பெய்துகொண்டிருந்த மழையில், ஏற்கனவே பாதி நனைந்திருந்ததால், உடம்பெல்லாம் சொத, சொதவென இருந்தது. ‘இந்தக் கூட்டத்தில் லோகு எங்கு இருப்பான்?’ எனத் தெரியவில்லை. மார்க்கெட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் ஜன நெருக்கடியால் எங்கு ஒதுங்குவது என்று தெரியாமல், கூட்டமாக நின்றிருப்பவர்களின் கால்களுக்கு இடையே ஓடி, ஓடி வந்தன. ஒரு நாயை ஒருவர் எட்டி உதைக்க, அது கத்திக்கொண்டே வேறொரு பக்கம் ஓடியது.

 

ரொம்ப நேரமாக மாலையை கையில் வைத்துக்கொண்டிருக்கிறேன். சரியான பசியும்கூட! தேர்தல் முடிவு தெரிந்ததும் லோகுவுக்கு மாலையைப் போட்டுவிட்டு, அதன்பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மனது வயிற்றுக்கு கட்டளையிட்டது.

 

மழை அதிகமாய் கொட்டத் தொடங்க, கைக் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பனிரெண்டு. எங்கும் மனிதத் தலைகள். இரவு என்பதே தெரியவில்லை. பசியாற சூடாக ஒரு காபி குடித்தால் தேவலாம் என வயிறு மனதிடம் கெஞ்ச, அந்நேரம் பார்த்து, தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களும், அடுத்ததாக வாக்குகளைப் பெற்றவர்களின் பெயர்களும், ஒவ்வொரு வாக்காளரும் வாங்கிய ஓட்டுக்களின் விபரங்களும் ஒலி பெருக்கியில் தெளிவாக அறிவிக்கப்படுகிறது. கடைசிவரை லோகுவின் பெயர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரவே இல்லை.

 

கொட்டும் மழையில் அப்படியே நின்றிருந்தேன். லோகு நனைந்தபடியே என்னை நோக்கி வந்தான்.

 

“மாப்ள மாலைய குடு…”

 

எதுவும் பேசாமல் கொடுத்தேன். என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. அவன் முகத்தைப் பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. எனக்கு கண்ணீர் வந்துவிடும் போல் இருந்தது. அவன் பின்னாலேயே போனேன். இவனை எதிர்த்து நின்று ஜெயித்தவருக்கு மாலையைப் போட்டுவிட்டு, கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறினான். நான் வெறுமனே நின்றிருந்தேன். அவரிடம் ஏதோ பேசிவிட்டு, என்னை நோக்கி வந்தான்.

 

“விடு மாப்ள பாத்துக்கலாம். எதுவும் கடந்து போகும்”என்று சொல்லிட்டு, இன்னொருவரிடம் பேசப்போய்விட்டான்.

 

அவன் அப்படித்தான். எதையும் பெரிதாக தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டான். காட்டுச் சுனையைப்போல மனசு அவனுக்கு. என்ன நடந்தாலும் அடுத்த வேலை என்ன உண்டோ, அதை நோக்கி நகரத் தொடங்கிவிடுவான். நானும் அவனைப் போலவே இருக்க வேண்டும் என பல முறை எண்ணியதுண்டு.

 

லோகு என் பள்ளி நண்பன். இரண்டு மாதத்திற்கு முன்பாக கோயம்பேடு  பூ மார்க்கெட் தேர்தலில், செயலாளர் பதவிக்கு அவன் வேட்பாளராக நிற்கிறான் என்று தெரியவந்தபோது,  என்னுடைய சினிமா வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவனுக்காக தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டேன். இப்போது, அந்தத் தேர்தலில் ஒவ்வொரு பதவிகளுக்கும் போட்டியிட்டவர்களில் சரிபாதி பேருக்கு என்னை அடையாளம் தெரியும். காரணம் லோகுதான்.

 

இதுவரையில் நான் எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போட்டதில்லை. என்றாலும், என்னால் அவனுக்கு வெற்றியை ஈட்டித்தர என்னென்ன வழிகளில் உதவ முடியுமோ, அதையெல்லாம் செய்தேன்.

 

இன்று காலையில்கூட வாக்குப் பதிவு நடக்கும் இடத்திற்கு சற்றுத் தொலைவில், சிறு பதாகையில் வரையப்பட்ட அவனுடைய தேர்தல் சின்னத்தையும், அவனுடைய புகைப்படத்தையும் கையில் ஏந்தியபடியே நின்றேன்.

 

என்னால் அவனுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் மழையில் நனைந்தபடியே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்துவிட்டேன்.

 

இங்கிருந்து மீஞ்சூருக்குப் போயாக வேண்டும். இந்த இரவில் மீஞ்சூருக்கு பேருந்து இருக்காது. சென்ட்ரல் ரயில் நிலையம் போய், அங்கிருந்து மீஞ்சூருக்குப் போகலாம் என்றாலும், அதுவும் சிக்கலாகவே முடியும். வேறு வழியில்லாமல், இரவு நேரத்து டீ கடையில் விற்பனையாகாமல் மீதமிருந்த மாலை செய்தித் தாளை ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி, தரையில் விரித்து, கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே படுத்தேன்.

 

ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு என்று எப்போதோ கேள்விப்பட்ட ஞாபகம். என்னைப் போலவே பலரும் காலையில் வரப்போகும் முதல் பேருந்துக்காக காத்திருந்தார்கள். தனியாக காத்திருந்தவர்களைக் காட்டிலும், குடும்பத்தோடு அமர்ந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாகப் பேசியபடியே இருக்க, கொசுக்கள் தங்களின் பசியாறிக்கொள்ள, என் உடலைத் துளைத்தெடுக்க, இந்த இடம் சரிப்பட்டு வராது என்பது ஊர்ஜிதமாக, அந்த இடத்தைவிட்டு புலம்பெயர ஆயத்தமானேன்.

 

திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்து தயார் நிலையில் இருப்பது கண்களில் பட்டது. ஒரு சில பயணிகள் மட்டுமே உள்ளே இருந்தனர். கையில் ஓரளவு பணம் இருந்ததாலும், நாளைக்கு முக்கியமான பணிகள் ஏதுமில்லாததாலும், ‘திருவண்ணாமலைக்கு போனால் என்ன?’ என்கிற எண்ணம் உதித்ததாலும், அந்தப் பேருந்துக்குள் ஏறி, பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு, அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன்.

 

கோயம்பேட்டிலிருந்து பேருந்து எப்போது கிளம்பியது என்று தெரியாது. திடீரென தூக்கம் கலைந்தபோது, ஏதோ ஓரிடத்தில் பேருந்து நின்றுகொண்டிருக்கிறது. சிலர் அருகிலுள்ள கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

 

“இது எந்த ஊர் சார்?” நடத்துநரிடம் கேட்டேன்.

 

“செஞ்சிப்பா…”

 

எல்லோரும் பேருந்துக்குள் வந்துவிட, நான் மட்டும் பேருந்திலிருந்து கீழே இறங்கினேன். என்னைக் கவனித்த நடத்துநர், “ஏம்ப்பா… நேரமாச்சு, நீ மட்டும் தனியா எங்க போற?” என்றார். அவரின் பேச்சில் அதட்டலும், எரிச்சலும்.

 

நான் அமைதியாக அவரைப் பார்த்தேன்.  அவர் திரும்பவும் என்னைப் பார்த்து முறைத்தபடியே, “உன்ன தாம்ப்பா சொல்றேன்… வண்டிய எடுக்கப்போறோம்… ஏறு” என்றார்.

 

பக்கத்தில் இருந்த கொடிக்கம்பத்தில் சாய்ந்து நின்றேன். வினோதமாக என்னைப் பார்த்த ஓட்டுநர், “நடு ரோட்ல உக்காருடா, ஏத்த வசதியா இருக்கும்” என்றபடியே, பேருந்தை எடுத்துக் கொண்டு, கொடிக் கம்பத்தை இடிக்காமல் கிளம்பிவிட்டார்.

 

கோயம்பேட்டில் இதே பேருந்துக்குள் என்னை நுழைத்துக் கொண்டபோது இருந்த மனநிலை இப்போது இல்லை. டீ கடை ரேடியோவில் “ஓ வசந்த ராஜா” என்று எஸ்.பி.பி-யும் ஜானகியும் உருகிக்கொண்டிருந்தார்கள். அங்கேயே நின்றிருந்தேன்.

 

திடீரென மழை தூற ஆரம்பித்தது. டீ கடைக்கு அருகே பூட்டிக்கிடந்த இன்னொரு கடைப்பக்கம் ஒதுங்கினேன். அங்கு வயதான ஒருவர் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை இடித்துவிடாதபடி  நின்றேன்.

மழை அதிகமாக, சாரல் மிகுதியாக, அந்தப் பெரியவர் கண் விழித்தார்.

“எந்த ஊரு…”

“மெட்ராஸ்ண்ணா…”

என்னை உற்று பார்த்தார். அடுத்த நொடியே “சாப்ட்டியா…” என்றார்.

 

“இல்லைண்ணா…” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்,  தலைக்குப் பக்கத்தில் இருந்த பையில் இருந்து, அவித்த நான்கு பனங்கிழங்குகளை எடுத்து என் கையில் திணித்துவிட்டு, மீண்டும் படுத்துக் கொண்டார். எனக்கு தடக்கென்றது. நான் சாப்பிடாததே அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

 

பசியை மனது இப்போது ஞாபகப்படுத்த, இரண்டு பனங்கிழங்குகளை சாப்பிட்டு முடித்தேன். நல்ல சுவையும்கூட. திரும்பவும் எழுந்து, மேலும் இரண்டு கிழங்குகளை கொடுத்தவர், எழுந்து போய் மூத்திரம் பெய்துவிட்டு திரும்பவும் வந்து “சக்கரை நோயா.. மழை சீசன் வேறவா.. அதான் அடிக்கடி ஒண்ணுக்கு வருது” என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துவிட்டார். அவர் கொடுத்தது வெறும் கிழங்குதான். ஆனால், எனக்கு அது ஜீவகாருண்யத்தின் உச்சமாகப் பட்டது.

 

மழை வலுத்து பெய்யத் தொடங்கியது. சாரலை அவர் பொருட்படுத்தவேயில்லை. நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். இப்போது டீ கடை ரேடியோவில் ‘சின்னப்பொண்ணு சேலை’யை இளையராஜா பரிசோதித்துக்கொண்டிருந்தார்.

 

நின்று கொண்டே நேரத்தை போக்கினேன். மழையும் ஓய, விடியத் துவங்கியது. டீ வாங்கிக்கொண்டு வந்து அவரை எழுப்பினேன். ஒரு நிமிடம் என்னைப் பார்த்தவர், டீயை வாங்கி உறிஞ்சத் துவங்கினார்.

 

“டீயில சக்கரையே இல்லப்பா..”

 

“உங்களுக்கு தான் சுகராச்சே…  அதான் சக்கர போடாத டீ வாங்கிட்டு வந்தேன்” என்றேன். மெல்லப் புன்னகைத்துக் கொண்டவர், டீயை ஆத்மார்த்தமாக உறிஞ்சிக் குடித்தார்.

 

நன்றாக விடிந்துவிட்டது. அருகிலிருந்த தண்ணீர்க் குழாயில் முகம் கழுவிக்கொண்டோம். அரை மணி நேர உரையாடலுக்குப் பிறகு, காலையில் சாப்பிட்ட டிபனுக்கு எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்தான் பணம் கொடுத்தார். திரும்பவும் பேசினோம். இடைப்பட்ட நேரத்தில்  அங்கே வருகை தருகிற பேருந்துகளில் தன்னிடமிருந்த பனங்கிழங்கு கட்டுகளை விற்றார்.

 

எட்டு மணி வாக்கில் இன்னும் சிலர் அருகிலிருந்த ஊர்களில் இருந்து, பனங்கிழங்கு கட்டுகளைகளையும், நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளையும் எடுத்துக் கொண்டு, அங்கே விற்பனை செய்ய வந்தனர். ஓர் அக்கா கூடை நிறைய மல்லிகைப் பூவோடு, என் அருகே அமர்ந்து, வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கினார். நான் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பேருந்தில் எதிர்பார்க்காத வண்ணம் நல்ல வியாபாரம் அவருக்கு. அதை முடித்துவிட்டு என்னிடத்தில் வந்தார். பக்கத்தில் பூ கட்டிக்கொண்டிருந்த அக்கா, அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

 

“முத்தண்ணே உன் பொண்ணும் பேத்தியும் உன்னை பாத்துகிட்டே அந்தப்பக்கம் போகுதுங்க பாரு” என்றார்.

 

திரும்பிப் பார்த்தவர், சடாரென அந்தப் பக்கம் ஓடினார். பின்னர், சட்டென நின்று விட்டு என்னிடம் திரும்பினார். நான் அமைதியாக இருந்தேன். என் அமைதியைப் புரிந்துகொண்டது போல்,

 

“பானையில் சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

சோதனைய பங்கு வச்சா சொந்தமில்லே, பந்தமில்லே..

கண்ணதாசன் சரியாத்தான் எழுதியிருக்கான்ல”  என்றவர், சிறிது நேரம் அமைதி காத்தார்.

 

பின்னர், “எல்லாக் கிழவனும் சொல்றதுதான். என் பொண்டாட்டி இருந்த வரைக்கும் ராஜா மாதிரி இருந்தேன். இப்போ சீப்பட்டு போய், ரோட்ல கெடக்குறேன், சாப்பிட்டியான்னு கேக்கக்கூட நாதியில்ல. நான் பெத்த பொண்ணு கூட…”

 

மேற்கொண்டு பேச முடியாமல் அழுதார். அழுகையை விடவும் ஆறுதலான விஷயம் மனதுக்கு கிடையாது என்பதை உணர்ந்தவன் நான் என்பதால், இந்த மாதிரி நேரத்தில் அவருக்கு சமாதானம் சொல்வது அபத்தமாக இருக்கும் என்கிற முடிவோடு, அழுது முடிக்கும் வரையில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “வயசான கொழந்தை ஒண்ணு நாலு பேருக்கு மத்தியில வாய்விட்டு அழுவுறதை என்னன்னு சொல்ல?”

 

அழுது முடித்தவர், தோளில் இருந்த துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

“பஸ் ஏறினா அரை மணி நேரத்துல வீட்டுக்கு போய்ருவேன். பதினாறு வயசுல கல்யாணமாச்சு தம்பி. இத்தன நாளா அவள பாத்துட்டே இருந்துட்டனா, அவ இல்லாம வீட்ல படுக்க முடியல. என் மல்லிகா வீட்ல இருக்கான்னு நெனைச்சிகிட்டு இங்கேயே படுத்துருவேன். கொண்டு வந்த கெழங்கு மொத்தமா தீர்ந்தா மட்டும், ஒரு தடவ வீடு வரைக்கும் போயிட்டு வருவேன். ‘நீ தான் வீட்ல இல்லியே… வீட்ட எழுதி குடுத்துடுன்னு பொண்ணு கேட்டா. நான் செத்தா எல்லாம் உனக்கு தானேன்னு சொன்னேன். அவ கேக்கல.  ஏன்னா, அவளோட ஆத்தா புத்தி அப்டியே.. நான் சொல்றத எப்பவுமே புரிஞ்சிக்கமாட்டா..” என்று சிரித்தார்.

 

எனக்கு மனசுக்குள் என்னவோ போல் இருந்தது. இந்த என்னவோ போல் இருக்கிற மனசு மிக ஆபத்தானது. அந்த நிலைக்கு வந்து விட்டால், மனசு என்ன வேண்டுமானாலும் செய்ய ஆயத்தமாகிவிடும். என் பாக்கெட்டில் அப்போதைய இருப்புத் தொகை 600 ரூபாய் சொச்சம். அதில் 400 ரூபாயை எடுத்து அவருடைய கிழங்கு பைக்குள் வைத்துவிட்டேன். அதை அவர் கவனிக்கவில்லை.

 

“நான் ஊருக்கு கௌம்பறேன்” என்றபடியே, ஒரு பேருந்தை நோக்கி கிளம்ப எத்தனித்தேன்.

 

“இது சென்னைக்கு போற பஸ்ப்பா, நீ திருவண்ணாமலை கோயிலுக்கு போறேன்னுதான சொன்னே…?”

 

“சாமிய பாத்துட்டேன். அதான் திரும்பவும் சென்னைக்கே கௌம்பறேன்…”

 

என் பதில் புரியாமல் என் கண்களையே பார்த்தார்.

 

“நல்ல தூக்கத்துல இருந்து எழுந்திருக்கும்போது கூட, ஒருத்தன் கண்ணை பார்த்தே, அவன் சாப்பிடலைன்னு தெரிஞ்சிக்கிட்டு, சாப்பிட குடுத்தீங்களே.. உங்கள விட சாமி என்னண்ணே பண்ணிடப்போகுது.. உங்கள பாக்கத்தான் நான் அங்க இருந்து வந்திருக்கேன்னு தோணுது…”

 

என் வார்த்தையை அவர் ஏற்றுக்கொண்டாரா தெரியவில்லை.

 

‘சிறு தெய்வமோ

பெருந் தெய்வமோ

கோயிலுக்கு வெளியே தான்

கும்பிடுகிறேன் அனைத்தையும்..!’

என்று கல்யாண்ஜி-யின் கவிதை ஞாபகத்துக்கு வந்தபோது, நான் நுழைந்த பேருந்து கிளம்ப ஆயத்தமானது.

 

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த என்னிடம் சில பனங்கிழங்கு கட்டுகளை வலுக்கட்டாயமாகத் திணித்தவர் சத்தமாக கேட்டார்.

 

“வேலு உன் முழுப்பேரு என்னன்னு சொன்ன..”

“ஜிப்ஸி ரகுவேல்”

“ஜிப்ஸி-ன்னா..?”

“உங்கள மாதிரியே தெய்வத்தை தேடுறவன்!”

பேருந்து மெல்ல ஊர்ந்தபடியே அங்கிருந்து நகரத் தொடங்கியது.

 

சிறுகதை

தெருவோர தெய்வங்கள்

ஜிப்ஸி ரகுவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *