oru nathi oru sisu - short story

ஒரு நதி ஒரு சிசு – சிறுகதை

slider கதைகள்

சிறுகதை

 

ஒரு நதி ஒரு சிசு

சுப்ரமணிய பாஸ்கர்

 

அத்தியாயம் 1

 

இப்போது அவன் நின்று கொண்டிருக்கும் இடம், கடலூரில் உள்ள பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாதி இடிந்த நிலையிலுள்ள பழைய பாலம். ஆற்றில் தண்ணீரெல்லாம் ஓடவில்லை. மணல் திருடிய அடையாளமாய் ஆங்காங்கே குட்டை குட்டையாய் தண்ணீர் தேங்கிக் கிடந்தது.

 

ஆற்றோரத்தில் நாகரீகம் பிறந்ததாய் வரலாற்றுப் புத்தகங்களில் படித்தது ஞாபகம் வந்தது அவனுக்கு. ஆனால், இப்போது அவன் கண் எதிரில் இருந்த ஆற்றோரத்தில் தினம் தினம் அநாகரீகமே பிறந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது அவனுக்கு. யானையோ, சிங்கமோ அல்லது ஏதாவது ஒரு வலிமை வாய்ந்த மிருகமோ இறந்து போய்விட்டால், அதனருகில் நாய்களும், நரிகளும் பயமில்லாமல் போய் அதைக் கடித்து குதறுமே, அதுபோல் கரைபுரண்டு ஓடிய ஆறு காய்ந்து போனதும், அதன் கரைகள் மக்களின் காலைக் கடன் கழிக்கும் இடமாய் மாறிப்போனது.

oru nathi oru sisu - short story
ஒரு நதி ஒரு சிசு

தண்ணீரற்ற அந்த ஆற்றில் இறங்கி, அதன் மணலில் கால் பதிக்க நினைத்தான். ஆனால், அதற்கு முன் பல மனிதக் கழிவுகளில், தான் கால் பதிக்க வேண்டும் என்பதால், தன்னுடைய ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். ஓரிரு இடங்கள் என்றில்லாமல் ஆற்றின் நீண்ட கரைகளில் முழுக்க முழுக்கவே அவரவர்களுக்கு முடிந்த மட்டும் நாசம் செய்துவிட்டிருந்தார்கள். அவனுடைய மனம் திரும்பி பல வருடம் பின்னோக்கி ஓடியது.

 

அத்தியாயம் 2

 

“ராசுவுக்கு தங்கச்சி பொறக்கப்போவுது” என்று அத்தை அடிக்கடி அவனைச் சீண்டிக் கொண்டே இருந்தாள்.

 

“பாப்பா பொறந்தா என்ன பண்ணுவ?”

 

“யாருக்கும் தரமாட்டேன் நானே வச்சிக்குவேன்…”

 

“ஆமா யாருக்கும் தரமாட்டான், அம்மாகிட்ட பால் குடிக்கக்கூடத் தரமாட்டான். இவனே வச்சிக்குவான்” என்று சிரித்தாள்.

 

“பால் குடிச்சி முடிச்சதும் நானே மடியில வச்சிக்குவேன்.”

 

“நீ ஸ்கூலுக்குப் போனதும் நாங்க எங்க வீட்டுக்குத் தூக்கிட்டு போய்டுவோம்” என்று அவனை  வேண்டுமென்றே வெறியேற்றிக் கொண்டே இருந்தாள் அத்தை. அத்தையின் பேச்சுக்கு மாற்று வழி என்ன என்று யோசித்து, ‘பாப்பா பொறந்ததும் இனி ஸ்கூலுக்கே போக வேண்டாம்’ என்று அவனுக்குள் ஒரு முடிவு செய்து கொண்டான். இதை தனது சக ஒன்றாம் வகுப்பு மாணவன் மோகன்ராஜிடம் ‘தங்கச்சி பொறந்ததும் நானே பாத்துக்குறேன்’ என்று சொல்லிவிட்டான்! இனி அம்மாவிடமும் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற முடிவையும் எடுத்திருந்தான்.

 

 

அத்தியாயம் 3

 

அவனுடைய வீட்டின் பின்புறம் கிணறும், கிணற்றைச் சுற்றி குளிக்கவும், பாத்திரம் கழுவவும் இடமளித்து சிமென்ட் மேடை செய்து, அதனருகே மாடுகள் குடிக்க கழுநீர் தொட்டியும் செய்திருந்தார்கள். அருகிலேயே ஒற்றை முருங்கை மரம் ஒன்று வேப்ப மரம் அளவிற்கு வளர்ந்து செழித்திருந்தது. வீட்டின் பின்புறத்திலிருந்து கிணறு வரையிலான இடைப்பட்ட அந்த இடமானது மண் தரையாகவே இருக்க, காலை விடிந்ததும் அவனுடைய கொள்ளுப்பாட்டி அங்கே வந்து கால்நீட்டி அமர்ந்துகொண்டு போன நூற்றாண்டுக் கதைகளையெல்லாம் பேசியபடி ஒரு கையால் வெற்றிலையை இடித்து வாயில் குதப்பிக் கொள்வாள்.

 

பாட்டிலில் வைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அந்த மார்கழிக் குளிரில் உறைந்துபோய் கெட்டியாய் இருந்தது. அதை வெயில் படும்படி இவனிடம் வைக்கச் சொன்னாள் பாட்டி. கிணற்றடியில் அம்மா பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். அவன் உருக ஆரம்பிக்கும் எண்ணெய்யை அண்டார்டிகாவில் பனிமலை உருகுவதை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி போல் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

திடீரென்று கிணற்றடியில் பாத்திரங்கள் உருள ஆரம்பித்தன. வீட்டில் இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தனர் அம்மாவை நோக்கி. தேங்காய் எண்ணெய் இன்னும் முழுதாய் கரையவில்லையே என்ற பெரிய ஏமாற்றத்தோடு எழுந்தபடியே கிணற்றடியில் சிறு கூட்டமொன்று கூடி விட்டதை அதிர்ச்சியாகப் பார்த்தான் அவன்.

 

கிணற்றடியில் அம்மாவால் ஒரு காலை ஊன்ற முடியவில்லை. உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது. ஒரு கையும் சரியாக வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தனர். வீட்டுப் பெண்கள் சிலர் அழ ஆரம்பித்தனர். அவனை அம்மாவோடு நெருங்கவிடாமல் சிலர் தடுக்க,  அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

அப்பா மிக வேகமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தார். தெரிந்த மருத்துவர் ஒருவர் வந்தார். கார் வந்தது. ஸ்ட்ரெச்சர் வந்தது.

 

அவனுக்கு கோவம் கோவமாய் வந்தது. ‘இந்த பாட்டிதான் காலையிலேயே ஜில்லுன்னு இருக்கற தண்ணில அம்மாவ பாத்திரம் கழுவ வச்சுது. அதனாலதான் அம்மாவுக்கு உடம்பு முடியாமப் போயிடுச்சு’ என்று தோன்றியது.

 

இதை யாரிடம் சொல்வது? அப்பாவிடம் சொல்லலாம். ஆனால், அவரும் அம்மாகூடப் போயிட்டாரு.

 

“அம்மா எங்க போயிருக்கு, எப்ப வரும்?” பாட்டியிடமே கேட்டான்.

 

“கடலூர் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. சித்தப்பா வந்ததும் நீ நாளைக்குப் போய் அம்மாவ பாக்கலாம்” என்றாள் வெற்றிலையை இடித்துக் கொண்டே.

 

 

அத்தியாயம் 4

 

மறுநாள் சித்தப்பாவோடு போகாமல் தாத்தாவோடுதான் அவன் ஆஸ்பத்திரிக்கு போனான். தங்கச்சிப் பாப்பா பிறக்கப் போவதை இவர்கள் பேசுவதில் இருந்து தெரிந்து கொண்டான். இரண்டு மணி நேர பேருந்து பயணத்தில் தங்கைக்கு என்ன பேர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே வந்தான்.

 

மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன், அப்பாவும் தாத்தாவும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அவன் அம்மாவை தேடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அப்பாவே அழைத்துப் போனார். அவனைப் பார்த்ததும் அம்மா அழுதபடியே, “சாப்பிட்டியா?” எனக் கேட்டாள். அப்பாவை அழைத்து “இவனுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுங்க” என்றாள்.

 

“தங்கச்சிப் பாப்பா எங்கம்மா?” என்ற அவன் கேள்விக்கு, அம்மா கேவி அழத் தொடங்கும்போது செவிலியர் ஒருவர் உள்ளே நுழைந்து, “குழந்தைங்கள கொஞ்ச நேரம் விடாதீங்க…” என்றார். அவன் பயந்தபடியே வெளியே வந்து, அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டான். இப்போது தாத்தா போய் அம்மாவைப் பார்த்துவிட்டு கையில் ஒரு பையுடன் வெளியே வந்தார். அப்பா தாத்தாவிடம் அழுதபடியே பேசியது அவனுக்குப் புரியவில்லை.

 

“நான் பார்த்துகிறேன், நீ போய் மங்கலஷ்மியைப் பார்த்துக்க..” என்றார் தாத்தா.

 

தாத்தா எங்கயோ வெளியே கிளம்புகிறார் என அவனுக்குப் புரிந்தது. சட்டென எழுந்து “நானும் வரேன்” என தாத்தாவின் கைகளைப் பற்றினான். தாத்தா அப்பாவைப் பார்த்தார்.

 

“சரி கூட்டிட்டுப் போங்க..”

 

மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் ஒரு சிறு மண்வெட்டி வாங்கிக் கொண்டார் தாத்தா. போகும் வழியில் தாத்தாவிடமிருந்த பையை அவன் வாங்கிக் கொண்டான். சில தெருக்களைக் கடந்தார்கள். கடைசித் தெருவையும் கடந்த பிறகு, முட்புதர்களையும் குப்பை மேடுகளையும் கடந்த பின்னர் ஒற்றையடிப் பாதையானது. அது வளைந்து நெளிந்து பெண்ணையாற்றின் கரையில் வந்து நின்றது.

 

 

அத்தியாயம் 5

 

ஆற்றின் கரையோர ஈர மணலில் இறங்கி நடத்தார்கள். திட்டுத்திட்டாய் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலும் சில மணல் மேடுகளையும் நீரோட்டம் அங்கங்கே ஏற்படுத்தியிருந்தது. பாதி ஆறு வரை தாத்தா நடந்து வந்து ஓர் இடத்தைத் தேர்வு செய்தார். மண்வெட்டியால் சிறிதாய் குழியொன்றை வெட்டினார்.

 

“அந்தப் பைய கொடு” என்று அவனிடமிருந்த பையை வாங்கிக் கொண்டே, “அம்மா உங்கிட்ட ஒன்னும் சொல்லலையா?” எனக் கேட்க, “இல்ல தாத்தா…” என்றான் அப்பாவியாய்.

 

“பாப்பா செத்துப் போய்ட்டா. இந்தப் பையில இருக்கறது உன்னோட தங்கச்சிப் பாப்பாதான்…”

 

தாத்தா அந்தக் குழியின் முன் மண்டியிட்டு அமர்ந்தார். பையில் இருந்து பச்சிளம் சிசுவின் உடலை வெளியில் எடுத்தார். அந்த வெளிர்நீல துணிப்பைக்குள் என்ன இருக்கிறது என்பதை அவன் இப்போதுதான் பார்க்கிறான்.

 

“இங்க வா… வந்து பாரு பாப்பாவை…”

 

அவன் அருகே வந்தான். கண்கள் கலங்கின. அவனுக்குப் புரிந்து விட்டது. அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.

 

“தாத்தா இங்க வைக்க வேண்டாம்… நம்ம வீட்டுக்கு எடுத்துகிட்டுப் போய்டலாம்…” அழுதபடியே  கெஞ்சினான்.

 

தாத்தா மென்மையாய் சிரித்தார்.

 

“பேராண்டி வீட்டுக்குலாம் எடுத்துகிட்டுப் போக முடியாது. நல்லா பாத்துக்க இது செத்து இரண்டு நாளுக்கு மேல ஆயிடுச்சு. இன்னும் ஒரு நாள் இது உங்கம்மா வயித்துல இருந்திருந்தா உங்கம்மாவே செத்துப் போயிருக்கும். என்னமோ உங்கம்மாவ காப்பாத்திட்டு இது போயிருச்சி…”

 

அவன் தாத்தாவின் தோளை பிடித்துக் கொண்டே, குழிக்குள் கிடந்த தன் தங்கச்சிப் பாப்பாவை நன்றாக ஊடுருவிப் பார்த்தான்.

 

அந்த சிசுவின் உடல் ஒருவித நிறமாகவும், முகம் வெளிறிய நிறமாகவும் இருந்தது. தலை நிறைய சுருள் முடியோடு கொழு கொழுவென இருந்தது. அதன் வயிற்றில் இருந்து தொப்புள் கொடி அதன் கழுத்தில் சுற்றி இருக்க, துர்க்கை அம்மன் ஒன்று குழந்தை வடிவத்தில் இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.

 

தாத்தா இப்போது சட்டைப் பையில் இருந்து துழாவி கற்பூரம் ஒன்றை எடுத்து மணலை குவித்து அதன் மீது வைத்து ஏற்றினார். அம்மாவைக் காக்க வந்த அம்மா அந்த பெண்ணையாற்றின் வயிற்றில் உறங்கப் போனாள். இருவரும் வணங்கியபிறகு, மணலால் மூடினார்கள். பின்னர் மூன்று முறை சுற்றி வந்தார்கள்.

 

அன்று மாலையே எல்லோரும் வீட்டிற்குப் புறப்படத் தயாரானார்கள்.

 

மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது யாரோ ஒருவர் தனக்கு குழந்தை பிறந்ததற்காக இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார். அவனது கையிலும் ஒரு சாக்லேட் திணிக்கப்பட்டது. சுற்றிலும் பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அவனின் வீடு நோக்கிய பயணத்தில்  ஆற்றுப் பாலத்தின் மீது போகும்போது, மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட அந்த சாக்லேட்டை தங்கை ருசிப்பாள் என்ற நம்பிக்கையோடு ஆற்றை நோக்கி எறிந்தான்.

 

அத்தியாயம் 6

 

இப்போது, சுள்ளென்று அடிக்கிற வெயிலின் வெப்பம் அறியாமல் ஆற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். இடது தோளில் மாட்டியிருந்த பேக்கில் இருந்து, சாக்லெட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாய் ஆற்றை நோக்கி வீசத் தொடங்கினான். மொத்தம் 21 சாக்லெட்டுகள் வீசப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *