கொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்!

slider அரசியல் உலகம்
wang-yi-china-foreign-minister

 

கொரானா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என குற்றம் சுமத்தி வருகிறது அமெரிக்கா. குறிப்பாக, சீனாவின் வூகான் வைரலாஜி ஆய்வுக் கூடத்திலிருந்து செயற்கையாக கொரானா வைரஸ் உருவாக்கப்பட்டபோது, அதிலிருந்து வெளியேறிய கசிவே இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது அமெரிக்காவின் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்கு அடுத்து அமெரிக்கா வைக்கும் இன்னொரு முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், “கொரானா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆய்வுக்கு சீனா ஒத்துழைக்க மறுக்கிறது” என்பதுதான். அமெரிக்காவின் இந்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கு நேரிடையாக எந்தப் பதிலையும் தராமல் இருந்து வந்த சீனா “கொரானா வைரஸ் தோற்றம் குறித்த  ஆய்வுக்கு சீனா தனது ஒத்துழைப்பை வழங்கும்” என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி (24.5.2020) சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பீஜிங்கில் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு  அதாவது விசாரணைக்கு சர்வதேச அறிவியல் சமூகத்துடன் விஞ்ஞான ரீதியில் ஒத்துழைப்பு தர சீனத் தரப்பு ஒரு திறந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. இந்த ஆய்வு செயல்முறையானது தொழில் முறையில் அமைய வேண்டும். நியாயமாக நாம் ஆய்வில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் அரசியலை தவிர்க்க வேண்டும். இந்த ஆய்வின்போது அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். ஆய்வுக்கு முன்பாகவே குற்றச்சாட்டு சுமத்துவதை சீனா எதிர்க்கிறது.

கொரோனா வைரஸ் சீற்றத்துக்கு மேலாக அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரஸும் பரவுகிறது. அது சீனாவை தாக்கி இழிவுபடுத்துவதாகும்.சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல் பல பொய்களை இட்டுக்கட்டி வருகிறார்கள். அத்துடன் பல சதித் திட்டங்களையும் தீட்டி உள்ளனர்.    கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஆதாரம் இன்றி வழக்கு தொடுக்கிறார்கள். இது சர்வதேச சட்ட விதிகளையும் மனசாட்சிகளையும் புறந்தள்ளுவதாக அமைந்துள்ளது. இது பொய்யானது. இதை நியாயப்படுத்த முடியாது. இது சட்டவிரோதமானது. இத்தகைய வழக்குகளை கொண்டு வருகிறவர்கள் பகல் கனவு காணுகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வார்கள்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் இப்போது போல ஒருபோதும் நெருக்கமாக இணைக்கப்படவில்லை என்பதுதான். அனைத்து நாடுகளும் ஒரே உலகளாவிய கிராமத்தில் வாழ்கின்றன என்பதையும், மனிதநேயம் என்பது பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஒரு சமூகம் என்பதையும் இதுவரை எதுவும் இதுபோல தெளிவுபடுத்தியது இல்லை. கொரோனா வைரஸைப் பொறுத்தமட்டில் அதற்கு எல்லைகள் இல்லை. இனங்கள் கிடையாது. எந்த பாரபட்சமுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.

இதனை அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் அது வைரஸுக்கு ஓட்டைகளை சுரண்டுவதற்கான வழியை கொடுக்கும். நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். அறிவியலை நிராகரித்தால் இந்த வைரஸ் பெரிய அழிவை ஏற்படுத்த அனுமதிப்பதாகும். விலைமதிக்க முடியாத பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. இதனால் புவியியல், இனம், வரலாறு, கலாசாரம், சமூக அமைப்பு உள்ளிட்டவற்றை தாண்டி அனைத்து நாடுகளும் எழுந்து நிற்க வேண்டும். உலகெங்கும் உள்ள நாடுகள் பகிரப்பட்ட எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த பூமியை கூட்டாக பாதுகாக்க வேண்டும்.

பூமி மட்டும்தான் நம் அனைவருக்குமான வீடாகும். சீனாவும், அமெரிக்காவும் அமைதியான சக வாழ்வு வாழவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழியைக் கண்டுபிடித்து வெவ்வேறு அமைப்புகள் மற்றும் கலாசாரங்களை கொண்ட நாடுகளுக்கு இது சாத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும். சீனா மிகப்பெரிய வளரும் நாடாகவுள்ளது. அமெரிக்கா வளர்ந்த நாடு என்ற வகையில் அது உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் சிறப்பான பொறுப்பை கொண்டிருக்கிறது. அமெரிக்காவை மாற்றவோ அந்த இடத்துக்கு இன்னொரு நாட்டை கொண்டு வரவோ சீனா நினைக்கவில்லை. ஆனால், சீனாவை மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது’’ என்று கூறினார்.

  • எஸ்.சிவாநந்தன்