கொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி

slider அரசியல்
UDHAV-THAKERE

 

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் 20 லட்சம் கோடியளவிலான மத்திய அரசின் நிதியறிவிப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும், இந்த அறிவிப்பு மாநில அரசுகளை பிச்சைகாரர்களாக்க வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கொரானா நிதி மற்றும் ஆம்பன் புயலுக்கு மாநில அரசு கேட்ட நிவாரண நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த வரிசையில் இப்போது சிவசேனை கட்சி  பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது. சிவசேனை கட்சியின் இந்த விமர்சனம் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனைக் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் சமீபத்தில் சாம்னாவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் மோடி வாரணாசியில் நான்கு  துப்புரவு தொழிலாளர்களின் கால்களைக் கழுவி மனிதநேயத்தை நமக்கு முன்பு காட்டியிருந்தார்.  கடந்த மூன்று மாதங்களில் அந்த மனிதநேயம் மறைந்துவிட்டதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் அந்த மனிதநேயத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றும் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்வது போன்ற பிரச்னைகள் அடிக்கடி அரசியல் மயமாக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் இன்று சுமார் ஆறு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதேபோல வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். ஹிட்லரின் கொடுமை மற்றும் யூதர்களிடம் நடந்து கொண்டது குறித்து கோபப்படுபவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். மராட்டியத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது என எதிர்க்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து தப்ப முடியாது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமருக்கு எழுதும் கடிதங்களால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கிளர்ந்தெழுந்து வருகிறார். அவரை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை தடுத்தது யார்? சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை கவர்னரின் உதவியுடன் கலைப்பதே பட்னாவிஸின் ஒரே நிகழ்ச்சி நிரல்’’ என்று அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் நான்கு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைவிட்டு வேறு மாநிலங்களில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் இதுவரை 30 லட்சம் தொழிலாளர்கள் மட்டும் இந்த கொரானா காலத்தில் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இவர்கள் சில மாநிலங்களில் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். அவ்வேளையில் காவல்துறை இவர்கள் மீது அடிதடி நடத்தும் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. இந்த விவகாரம் மத்தியிலுள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனை எவ்வளவு சீக்கிரம் சரிசெய்ய முடியுமோ அவ்வளவு சரிசெய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மோடி அரசு மேல் விழும் நிர்வாக குறைபாடு என்கிற எதிர் கட்சிகளின் விமர்சனத்திலிருந்து தப்பிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்