ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்

slider அரசியல்

 

RAMADOSS-PMK-LEADER

 

கொரானாவை கட்டுபடுத்த நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதேநேரத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்து மக்கள் வருவாயின்றி படும் துன்பம் சொல்லி மாளாது. மத்திய அரசு 20 லட்சம் கோடியளவில் நிதி சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வங்கி கடன் விதிகளை சற்று தளர்த்தி அதிகளவில் கடன் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அந்த மக்களுக்கு நெருக்கடியான நிலைமையிலிருந்து விடுபட வழிவகுக்கும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று தற்போது கூறியுள்ளார் பா.ம.க. தலைவர் ராமதாஸ்.

இது குறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அரசு சார்பில் பெரிய அளவில் நிதியுதவி வழங்க முடியாத சூழலில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடன் விதிகளை சற்று தளர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுத்தால் அனைத்து தரப்பினரும் பயனடைவர்.

மேலும், பொதுத்துறை வங்கிகளில் நகைக்கடன் பெற விரும்புவோருக்கு, வங்கிக் கணக்கு இல்லை என்றாலும், உடனே, புதிய கணக்கு துவங்கி சில மணி நேரங்களில் நகைக்கடன் வழங்க வேண்டும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ஓராண்டில் திருப்பி செலுத்தும் வகையில், அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.   இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும். இதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செயல்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய நாணயத்தை வெளியிடும் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸும் சமீபத்தில் வீடு, வாகனங்களின் மேல் வங்கிகளில் வாங்கிய கடன் தவணை தொகையை மேலும் மூன்று மாதம் நீட்டித்து ஆகஸ்ட் 31-ம் தேதி வாய்ப்பு அளித்துள்ளாதாக கூறியுள்ளார். இந்த நிலைமைக்கும் கீழிலிருக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கு சிறு அளவில் கடன் உதவி அளிப்பதும், அதற்கான கடன் விதிகளை கொரானா பேரிடர் முன்னிட்டு தளர்த்துவதும் பெருவாரியான மக்களுக்கு சமய சஞ்சீவியாக உதவக்கூடிய ஒன்று. இதனையே பா.ம.க. தலைவர் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

  • தொ.ரா.ஸ்ரீ..