படப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி!

slider சினிமா
SIRANJEEVEE

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் கொரானா காரணமாக இந்தியாவெங்கும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தமிழகம் உட்பட சில மாநில அரசுகள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளன. வெள்ளித்திரை என்னும் சினிமா படப்பிடிப்புக்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கு பிரபலம் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் சிரஞ்சீவி, “சினிமாக்களில் காதல் பாடல் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வந்தன. பல படங்களின் வசன காட்சிகளை முடித்துவிட்டு வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்க காத்திருக்கின்றனர். கொரோனாவால் அது நடக்குமா? என்பது கேள்விக்குறியாகயுள்ளது. எனவே நமது நாட்டிலேயே வெளிநாடுகளின் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்தலாம். இதுதான் இப்போதுள்ள தீர்வு. முன்புபோல் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த செல்ல முடியாது.

இந்தியாவுக்குள்ளேயே ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஊட்டி அல்லது மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். சினிமா நிறைய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தாலும் பிரச்சினை தீர்ந்து விடாது. கதாநாயகர்கள் ஒரு படத்தில்தான் நடிப்பார்கள். ஆனால், கதாநாயகிகள் பல படங்கள் வைத்திருப்பார்கள். அதற்கு கால்ஷீட்டை அவர்கள் பிரித்து கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். தியேட்டர்களுக்கு அனுமதி கிடைத்த பிறகு ரசிகர்கள் வருவார்களா? வரமாட்டார்களா? என்பது பிறகுதான் தெரியவரும். அதற்கு முன்பு படப்பிடிப்பை முடிப்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.