இலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு!

slider அரசியல்

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்த இலவச மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் கொரானா பேரிடருக்கு தமிழக கேட்டிருந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்கிற வருத்தமும் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் வெளிப்பாடு தமிழக முதல்வர் பேச்சில் அங்கங்கே தென்படுகிறது. இதனுடன் இன்று (23.5.2020) தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி கைது விவகாரம் வேறு முதல்வரை கடும் கோபம் செய்துள்ளது. இவையாவும் சேலத்தில் முதல்வரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உருவெடுத்துள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (23.5.2020) கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.  இதன்பின்னர் அவர் பேசுகையில், ‘’ தமிழகத்தில் நாள்தோறும் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதால் கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்.  தமிழகத்திலுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை அதிகம் செய்யப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும். தமிழகம் கேட்ட நிதியில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆட்டோக்களை இயக்கவும் சலூன்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் நிச்சயமாக அணிய வேண்டும். பட்டியலினத்தவர்களை விமர்சித்ததால்தான் பாரதி கைது செய்யப்பட்டார். மற்றபடி தமிழக அரசுக்கும் கைதுக்கும் சம்பந்தமில்லை. சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவதூறாக பேசியபோதே கட்சித் தலைவர் என்ற முறையில் ஆர். எஸ். பாரதியை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது புகார் கூறுகிறார்.

இ- டெண்டரில் ஊழல் என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிக்கூட உண்மையில்லை.  ஆர்.எஸ்.பாரதி என்ன விஞ்ஞானியா? ஏதோ விஞ்ஞானி போல் பத்திரிகை விளம்பரத்திற்காக பாரதி புகார் கொடுக்கிறார். ஆர் .எஸ். பாரதி தரும் புகார்களின் உண்மைத் தன்மையை ஊடகங்கள் ஆராய வேண்டும். புறநகரங்களில் சிறு மற்றும் குறு தொழில்கள் இயங்க தொடங்கியுள்ளன. கொரோனா பொது முடக்கம் அமலிலுள்ள போதும் தமிழகத்தில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும்’’ என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு மாநில அரசுகள் கட்டணம் வசூலிக்க வகைசெய்யும் மின்சார திருத்தச் சட்டம் வெளியானது. இந்த திருத்த மசோதாவால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோகும் என்பதால் அந்த திருத்தத்தை தற்காலிமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் தான் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று  இன்று அதிரடியாக சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது நடைபெற்றுள்ளது. இதற்கான மத்திய அரசின் எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது இன்னும் சில நாள்களில் தெரியலாம்.

  • எஸ். சிவாநந்தன்