இன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்!

slider அரசியல்
VAANATHI-SRINIVASAN

 

திராவிட கொள்கைக்கும் பா.ஜ.க.வின் கொள்கைக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இவ்வளவு தீவிரமான பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடுள்ள தி.மு.க.விலிருந்து அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்த வி.பி.துரைசாமி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.  இந்த சம்பவம் தமிழக அரசியல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தற்போது தமிழக பா.ஜ.க..வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ள வி.பி.துரைசாமியை நான் மனதார வரவேற்கிறேன். மாற்றுக் கட்சிகளிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையக்கூடியவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கக் கூடும். மேலும், திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த நிர்வாகிகள் தேசியக் கட்சியான பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் பா.ஜ.க.வின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான விடையாக இருக்கிறது.

மேலும்,  மாற்றுக் கட்சிகளிலிருந்து வி.பி.துரைசாமியை போன்று யார் வந்தாலும் அதனை நாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறோம். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மாற்றுக் கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைகிறார்கள் என்றால் எங்கள் கட்சி வலுவாக இருப்பதால் தானே இணைகிறார்கள், இல்லை என்றால் எப்படி வருவார்கள். சிலர் தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். தூய்மையான அரசியலை முன்வைத்து மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் இணையலாம்’’ என்று கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு கொஞ்சநாள் தான் ஆகிறது. அதற்குள் தி.மு.க.வின் முக்கிய புள்ளியான வி.பி.துரைசாமியை பா.ஜ.க. பக்கம் கொண்டுவந்துவிட்டார். துரைசாமி தி.மு.க. தலைவர் கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழக பா.ஜ.க.வில் பலர் தலைவராக இருந்துள்ளனர். எவர் காலத்திலும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. இவை போன்ற சம்பவங்கள் இனியும் தொடர்ந்தால் அது தமிழகத்தில் பா.ஜ.க. வலுவாக காலூன்ற எடுக்கும் நடவடிக்கையாக அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.