ஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்!

slider அரசியல்
MK-stalin

 

இன்று (23.5.2020) அதிகாலை சென்னையிலுள்ள வீட்டில் தி.மு.க. அமைப்புச்  செயலாளர் ஆர். எஸ்.பாரதி எம்.பி.போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின மக்களை அவமதிக்கும் விதமாக ஆர்.எஸ்.பாரதி பேசியதான புகாரை ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் காவல்துறையில் அளித்தது முன்னிட்டு இந்த கைது என்பது பின்னர் தெரியவந்தது. இந்த கைதை கண்டித்தும், இதற்காக அ.தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கைது விவகாரத்தைக் கண்டித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனா கால ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார். எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கெல்லாம் தி.மு.கழகம் என்றைக்கும் அஞ்சாது. மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி அவர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி கைது செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு  ‘அன்பகம்’ உள்ளரங்கத்தில் ஒரு விழாவில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி – அது தொடர்பாக  அப்போதே ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரிய விளக்கம் அளித்து – மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த அராஜக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து கைது வெறியாட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது  ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள  ‘கொரோனா கால டெண்டர் ஊழல்’ மீது விரிவான புகாரை  ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார். ’கொரோனா கால ஊழல்’, ’கொரோனா தோல்வி’ ஆகியவற்றை மூடிமறைக்கவும் குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன் ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி  பழனிசாமி.

பட்டியலின – பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும்  அவர்களின் சமத்துவ – சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு பணிகளை இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான அரைவேக்காட்டு அதிகார துஷ்பிரயோகம் மூலம்- எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரம் மற்றும் அராஜகத்தின் துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் மிரளாது. நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்.

இந்த மாபெரும் மக்கள் இயக்கம் பனங்காட்டு நரி எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது. ’கொரோனா கால ஊழல்களையும்’, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவை தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து அதோகதியாக நிற்பதையும் மக்கள் மன்றத்திலிருந்து எடப்பாடி . பழனிசாமியால் ஒருபோதும் மறைத்திடவும் முடியாது. அதற்கான தார்மீகப் பொறுப்புகளிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

மேலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது  சட்டவிரோத  ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளை கழகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இன்று அதிகாலை மத்திய குற்றபிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது போலீஸ். இதன்பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம், ஆர்.எஸ். பாரதி கோரிக்கை விடுத்தார். மேலும், தனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதாகவும் நீதிபதியிடம் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். நீதிபதி ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். இவையெல்லாம் அதிகாலை ஆரம்பித்து மதியத்துக்குள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழகத்தின் இரண்டு நாள் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முதல் நிகழ்வு நேற்று (22.5.2020) தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பா.ஜ.க.வில் இணைந்தது. இன்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை முன்பு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பட்டியலின மக்களை அவமதிக்கும் விதமாக பேசியதான புகாரில் கைது செய்துள்ள இரண்டாவது நிகழ்வு. இவற்றைத் தொடர்ந்து அடுத்து ஏதும் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எம்.டி.ஆர். ஸ்ரீதர்