இலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்!

slider அரசியல்
SU-VENKATESAN

 

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற ஓர் உத்தரவை போட்டது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க. தி.மு.க.. பா.ம.க. டி.டி.வி.தினகரன், கமல் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தின. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் சில தினங்களுக்கு முன்னர் எழுதினார். இந்த கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

இந்நிலையில், மதுரை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.யான வெங்கடேசன் தனது பேஸ்புக்கில் இது குறித்து தமிழக முதல்வருக்கு கடிதமாக விளக்கி எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் சு.வெங்கடேசன், “மாநில அரசுகளின் கடன் வாங்குவதற்கான வரம்பை மாநில உள் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இதற்கு நிபந்தனையும் விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கடிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்துமாறு நிபந்தனை போடுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள். கூட்டாட்சி முறையில் இப்படி நிபந்தனை போடுவது கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்துவிடும் என்றும், இது பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும், அரசியல் சட்டப்பிரிவு 293 (3) யை மத்திய அரசு நிபந்தனைகள் போட பயன்படுத்துவது இதுவரை இல்லாத ஒன்று என்றும், கருத்தொற்றுமை ஏற்படாத கொள்கை முடிவுகளை நிபந்தனையாக போடக்கூடாது என்றும் உங்கள் கடிதம் கூறுகிறது.

மேலும், ஒரு பிரதமருக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதுவதில் தவறில்லை. ஆனால் மாநில முதல்வரின் கடிதத்திற்கு பதில் எழுதுகிற ஜனநாயக மாண்பு கொஞ்சமாவது மத்தியில் உள்ளவர்களுக்கு உண்டா? இதுவரை நீங்கள் எழுதிய கடிதங்கள் எத்தனை? வந்த பதில்கள் எத்தனை? ஓர் முதல்வரின் கடிதத்திற்கு மறு மொழி கூறாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அவமானம். எதிர்க்கட்சிகளை அழையுங்கள் முதல்வரே! கடிதம் போதாது! அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்க் கட்சிகளை அழையுங்கள். இணையுங்கள். மற்ற மாநில அரசுகள் கருத்துக்களையும் இணைத்து கூட்டாட்சிக்கு விரோதம் என்ற குரலை வலுவாக எழுப்புங்கள். தமிழக எம்.பி.க்கள் உறுதியாக தமிழக நலனுக்காக நிற்பார்கள். குரல் கொடுப்பார்கள். கடிதம் கண்டனமாக மாறாமல் பதில் வராது முதல்வரே!’’ என்று பேஸ்புக் மூலம் தமிழக முதல்வருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • எம்.டி.ஆர். ஸ்ரீதர்