காகிதம் மீதான வரியைக் குறையுங்கள் – பிரதமர் மோடிக்கு பத்திரிகைத் துறை கோரிக்கை!  

slider அரசியல் இலக்கியம்

 

கொரானா என்னும் கண்ணுக்கு தெரியாத கொடிய வைரஸ் உலகை மட்டுமல்ல இந்தியாவையும் அல்லல்படுத்தி வருகிறது. இன்றைய கணக்கில் இந்தியாவில் கொரானாவினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரானா குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை பாதுகாக்கும் முக்கிய பணியினை பத்திரிகைத் துறை ஆற்றி வருகிறது. இவ்வளவு அரிதான பணியில் ஈடுபட்டுவரும் பத்திரிகை துறை கொரானா ஊரடங்கு அமலில் உள்ளதால் பெரும் பொருளாதார இழப்புகளை நாளும் சந்தித்து வருகிறது. பாரம்பர்யம் கொண்ட இந்த பத்திரிகை துறையை இதிலிருந்து மீட்டெடுக்க முக்கிய பத்திரிகையாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இது குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக் கொண்டுசென்று சில சலுகைகள் பெற தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இது நிமித்தம் நேற்று (19.5.2020) தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.

இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று (20.5.2020) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  ‘’கொரோனா ஊரடங்கால் அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.  இந்த நெருக்கடியை பிரதமர் கவனத்துக்குச் கொண்டுசெல்வதற்காக மூத்த பத்திரிகையாளர்களான தினமலர் எல்.ஆதிமூலம்,  இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் என்னை நேரில் சந்தித்தனர்.  அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கை கடிதம் அளித்தனர். இவர்களுடன் தினத்தந்தி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

அந்த கோரிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ‘மக்களுக்கு உண்மை செய்திகளை நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பிலுள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அவசியம். கொரானாவினால் நிலவும் ஊரடங்கு முன்னிட்டு அவை நெருக்கடிக்கு உள்ளாவதில் இருந்து மீளும் வகையில் மத்திய அரசு  பத்திரிகை அச்சுக் காகிதம் மீதான வரியை குறைக்க வேண்டும். அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவை தொகையை உடனே பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும். காலத்தின் தேவை கருதி அரசு விளம்பர கட்டணத்தை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

அவர்களிடன் நான் (ஸ்டாலின்) என்ன கூறினேன் என்றால்,  “கொரானா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் வாயிலாக தி.மு.க. செய்துள்ள மற்றும் செய்து வரும் பணிகளை எடுத்துரைத்தேன்.  மக்கள் பக்கம் நிற்கும் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் நிச்சயம் துணை நிற்பர். பிரதமரிடம் இதை வலியுறுத்துவர்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினசரி வாழ்க்கையில் இளைஞர்கள் பலரிடம் மொபைல் போன் வழி செய்திகள் படிக்கப்பட்டாலும் அச்சில் ஏற்றப்பட்டு செய்திதாளில் வருவது என்பது நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது. மேலும், இதை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பல வருடங்களாக பணியாற்றிவரும் சூழலும் உள்ளது. இந்த பத்திரிகைத் துறைக்கு சுதந்திரத்திற்கு பாடுபட்ட முக்கிய பங்களிப்பு இருக்கிறது. இவையெல்லாம் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பத்திரிகைத் துறையினர் காலம் கருதி கேட்கும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி பத்திரிகை தொழிலை மீண்டும் துடிப்புடன் வாழ வைக்க வேண்டுமென்பதே ஒவ்வொரு பத்திரிகையாளனின் வேண்டுகோள்.

எம்.டி.ஆர். ஸ்ரீதர்