ஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும்  புயல்!

slider அரசியல்
PRIYANGA-GHANDHI

 

இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொரானாவினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முன்னிட்டு வேலை இழந்துள்ளனர். மேலும், தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவைகளும் அவர்களுக்கு சரிவர கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளால் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் பலர் உயிர் இழந்து வருவதும் நடந்து வருகிறது. பஸ், ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் வாழ்வு பெரும் அவதியாகியுள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லி தெருக்களில் புலம் பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்கள் நிலவரம் கேட்டறிந்தார். இவர்களுக்கு சில உதவிகளையும் ராகுல் காந்தி செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஆயிரம் பஸ்களை ஏற்பாடு செய்த நிகழ்வு பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக பிரியங்கா காந்தியின் அலுவலகம் சார்பில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில், “காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 1000 பஸ் வசதி ஏற்படுத்தி தரவுள்ளதாகவும் இதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்” என்றும் கேட்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் வீடியோ வடிவில் ஒரு தகவலும் கொடுத்திருந்தார். ஆரம்பத்தில் பிரியங்கா காந்தியின் கோரிக்கையான புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பஸ்கள் அனுப்பும் விஷயத்தில் உடன்படாத மாநில அரசு பிறகு பிரியங்கா காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ஆனால், ஒரு நிபந்தனையும் விதித்தது.  அது என்னவென்றால், உத்தர பிரதேச மாநிலத்திற்கு வெளியேயுள்ள அந்த ஆயிரம் பஸ்களும் தலைநகர் லக்னோ வரவேண்டும். அங்கிருந்து தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று  கூறியது.

மாநில அரசின் இந்த முடிவுக்கு பிரியங்கா தரப்பு எதிர்ப்பு  காட்டியது.   வீணாக காலி பஸ்களை எல்லையிலிருந்து தலைநகர் லக்னோ வரை இயக்கி அதன்பிறகு தொழிலாளர்களை அங்கிருந்து அழைத்துச் செல்வது வீண் செலவு மற்றும் நேர விரயம் என்கிற பதிலும் அரசுக்கு தரப்பட்டது.

இதனையடுத்து டெல்லியிலிருந்து ஓரளவுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய உத்தரபிரதேச மாநிலத்தின் தொழில் நகரங்களான நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு தலா 500 பஸ்களை அனுப்பி வையுங்கள் என்று மாநிலஅரசு தரப்பு கூறியது.  மேலும், இதற்கு முன்பாக பஸ்கள் தொடர்பான விவரம், நடத்துனர் மற்றும் டிரைவர் தொடர்பான விவரம் அரசிடம் தரப்பட வேண்டும். அதை மாவட்ட கலெக்டர்கள் சரி பார்ப்பார்கள் என்கிற நிபந்தனை அளிக்கப்பட்டது.

இதனை ஏற்று பிரியங்கா தரப்பும் அனைத்து விபரங்களையும் அரசுக்கு அனுப்பியது. இதில் தான் வில்லங்கம் ஆரம்பித்தது. உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங்  இந்த விபரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி மீது ஒரு புகார் வைத்தார். அவர் தனது புகாராக, ‘காங்கிரஸ் கட்சி அனுப்பிய பட்டியலில் இருக்கக்கூடிய பதிவு எண்களை சரிபார்த்தபோது அதில் பல இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் நம்பர் என்று தெரிய வந்திருக்கிறது. பஸ்களை ஏற்பாடு செய்யாமல் போலியாக விளம்பரத்திற்காக காங்கிரஸ் இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளது’ என்று கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் உத்தரபிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது.

இது குறித்து உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் லல்லு கூறுகையில், ’’மக்களுக்கு தவறான தகவலை அளிக்கிறது ஆளும் பா.ஜ.க. அரசு. தவறான வாகன பதிவு எண்களை வெளியிட்டு காங்கிரஸ் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்கிம்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை.  அவர்களுக்கு உதவி செய்ய வருபவர்களை அவமானப்படுத்துகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.சிவாநந்தன்

 

.