அ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு!

slider அரசியல்

 

தமிழகத்தை கொரானா பிடியிலிருந்து மீட்க வேண்டிய முக்கிய பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செலவத்துக்கும் இருக்கிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க. என்கிற மக்கள் செல்வாக்குள்ள கட்சியின் இரட்டை தலைமையும் இவர்கள் தான். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும். முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வோ தொகுதிக்கு மூன்று வேட்பாளகளை இப்போதே தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் கட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தியுள்ள அ.தி.மு.க. இரட்டை தலைமை அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிக்குள் இரண்டு அதிரடிகளை மேற்கொண்டுள்ளது. இந்த அதிரடி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதிக்காக அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை நேற்று (19.5.2020) அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, வேலூர், கோவை, மதுரை என்று நான்கு மண்டலங்களாக தகவல் தொழில்நுட்ப பிரிவைப் பிரித்துள்ளனர். இதற்கான பொறுப்பாளர்களாக சென்னை மண்டலம் – அஸ்பயர் கே.சுவாமிநாதன், வேலூர் மண்டலம் – எம்.கோவை சத்யன் (அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்), கோவை மண்டலம் – சிங்கை ஜி.ராமச்சந்திரன்,  மதுரை மண்டலம் – வி.வி.ஆர்.ராஜ் சத்யன்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை வட்டாரத்தில் சில நிர்வாகிகளிடம் விசாரித்தோம். அவர்கள் நம்மிடம், ‘’தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிடும். இப்போதுள்ள சூழலில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.  மேலும் முதல்வர், துணை முதல்வரின் வாரிசுகளுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பதவிகள் வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யவே தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்கள்.

அ.தி.மு.க. இரட்டை தலைமை நேற்று (19.5.2020) தகவல் நுட்ப பிரிவில் மட்டும் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இன்னொரு அதிரடியாக. அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து ஊராட்சி கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று (20.5.2020) முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா மறைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் விட்டுச் சென்ற ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வும் இவர்கள் தலைமையின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. இடையில் சட்டமன்ற இடைத் தேர்தல்களை சந்தித்து வெற்றி கண்ட அனுபவம் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இருக்கிறது. இதனை முன்னிட்டே அ.தி.மு.க. இரட்டை தலைமை இப்போதே பல அதிரடி நடவடிக்கைகளை கட்சிக்குள் எடுத்துள்ளது என்றும், இன்னும் பல முன்னேற்பாடுகளையும் கள வியூகங்களையும் வகுக்க வேண்டியது இரட்டை தலைமைக்கு பாக்கியுள்ளது என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.