புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ராணுவ உதவி – டெல்லியில் திடீர் போராட்டம்!

slider அரசியல்
YASHWANTH-SINHA

 

 

இந்தியாவில் இப்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவிப்பதும் அல்லல்படுவதும் தான் பெரும் பிரச்னையாக வெடித்திருக்கிறது. இவர்கள் லாரியிலோ அல்லது நடந்தோ செல்கையில் ஏற்படும் விபத்துகளில் உயிர்ப்பலி ஏற்படுவதும் நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமைக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கோரிக்கையாக கூறி வருகிறார்கள். இந்த நெருக்கடியை மத்திய பா.ஜ.க. அரசு எப்படி கையாண்டு தீர்க்கப் போகிறது என்பதும் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று (19.5.2020) முன்னாள் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான  யஷ்வந்த் சின்ஹா புலம் பெயர் தொழிலாலர்களின் இந்த நிலைக்காக திடீரென போராட்டம் நடத்தினார்.  புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ராணுவத்தை பயன்படுத்தி உதவ வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து யஷ்வந்த் சின்ஹா இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இதனையடுத்து யஷ்வந்த் சின்ஹாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த சின்ஹா, ’’எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ’’இடம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசுக்கு தெரியவில்லை. இந்த அரசு என்பது ஏழைகளுக்கு எதிரானது. வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் இந்தியர்களை அழைத்து வர முடிகிறது. ஆனால், சொந்த நாட்டில் தொழிலாளர்கள் சாலைகளில் நடக்கிறார்கள். அதை கண்டுகொள்ள மத்திய தயார் இல்லை‘’ என்று சொல்லியுள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. திலீப் பாண்டே கூறுகையில், ‘’ஒரு நாளைக்கு  இருபதாயிரம் ரயில்களை நம்மால் இயக்க முடியும். முன்பு நாளைக்கு 2.3 கோடி பேர் ரயிலில் பயணித்தார்கள். இதை இப்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.சிவாநந்தன்