பா.ஜ.க.வுக்கு தூதுவிடும் தி.மு.க. முக்கியப் புள்ளி!

slider அரசியல்
VP-DURAISAMY

 

தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவரும், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான வி.பி.துரைசாமி தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு இப்போது பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது. ஸ்டாலினுக்கும் வி.பி.துரைசாமிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்றும், இதன் பின்னணியில் வி.பி.துரைசாமி விரைவில் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்பிருப்பதாகவும், இதன் அறிகுறியே இந்த சந்திப்பு என்றும் அரசியல் வட்டாரத்தில் தீவிர பேச்சுக்கள் கிளம்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி.  தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். இவர் எம்.எல்.ஏ., எம்.பி., துணை சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்திருக்கிறார்.  அண்ணா அறிவாலயத்தில் எப்போதும் காணக்கூடிய நிர்வாகிகளில் இவரும் ஒருவர். கலைஞர் இருந்தவரை கட்சி விஷயங்கள் எதுவானாலும் வி.பி.துரைசாமியிடமும் கலந்து முடிவெடுப்பார். கலைஞர் மறைந்தபிறகு கட்சியில் சீனியர்கள் பலர் மெல்ல மெல்ல ஓரங்கட்டபோது வி.பி.துரைசாமியும் அதிலிருந்து தப்ப முடியவில்லை. ஸ்டாலினுக்கும் இவருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமல் போனது. இந்நிலையில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்ற வி.பி.துரைசாமியின் விருப்பம் அந்தியூர் செல்வராஜ்க்கு வழங்கப்பட்டது. எனவே, அவர் தனது அதிருப்தி குரலை வெளிப்படுத்த நினைத்திருக்கிறார். ஆனால், கழக சீனியர்கள் சிலர் அவரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் தான் நேற்று (18.5.2020)  தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை வி.பி.துரைசாமி சந்தித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து வி.பி.துரைசாமி கூறுகையில்,  “தமிழக பா.ஜ.க. தலைவராக .முருகன் பதவியேற்றதற்காக அவரை சந்தித்து வாழ்த்து சொன்னதாக ’’  கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம், ‘’முருகன் பொறுப்பேற்று மூன்று மாதம் ஆகிறது. இப்போது போய் வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?  முருகனும், வி.பி.துரைசாமியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள்.  இதன்மூலம் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகமும் தொடர்பும் இருந்து வந்திருக்கிறது. முரசொலி நிலம் விவகாரத்தில் தனக்கு சம்மன் அனுப்பி தி.மு.க.வின் மதிப்புக்கு சமூக வலைதளங்களில் குந்தகம் ஏற்படுத்தியவர்  தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் என்பதை ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லை. இப்படிப்பட்ட நபரை தேடிச்சென்று சந்தித்து அதன் புகைப்படத்தை துரைசாமி வெளியிடுகிறார் என்றால் இதற்கு மேல் அவர் இங்கிருந்து என்ன இல்லாவிட்டால் என்ன?    வி..பி.துரைசாமி என்ன முடிவெடுத்தாலும் சரி யாரும் அதனை தடுக்கவேண்டாம் என்கிற எண்ணத்தில் தான் தலைவர் ஸ்டாலின் உள்ளார்’’ என்று சொன்னார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கட்சியின் சீனியர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பின்பு கே.பி.ராமலிங்கம் கலைஞர் போல் ஸ்டாலின் இல்லை என்கிற விமர்சனத்தையும் பொதுவெளியில் கூறினார். இப்போது இன்னொரு சீனியர் அதுவும் கலைஞருடன் நெருக்கமாக இருந்தவர் கழகத்தை விட்டு வெளியேறும் சூழல் தென்பட துவங்கியுள்ளது. ஒருவேளை இவர் நீக்கப்பட்டாலோ அல்லது வேறு கட்சிக்கு சென்றாலோ என்ன குற்றச்சாட்டை ஸ்டாலின் வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு தி.மு.க. முகாமிலே ஏற்பட்டிருக்கிறதாகவும் தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஒன்று தெரிய வருகிறது. தி.மு.க.வுக்குள் என்னமோ நடக்கிறது?  இன்னும் கொஞ்ச நாளில் அது என்னவென்று அம்பலத்துக்கு வரலாம். அதுவரை காத்திருப்போம்.

  • தொ.ரா.ஸ்ரீ.