தொடரும் பா.ஜ.க. – காங்கிரஸ் மோதல்!

slider அரசியல்

கொடிய தொற்று நோயான கொரானா கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக உலகையே தவிக்கவிட்டுள்ளது. இதில் உலகளவில் மூன்று லட்சத்துக்கும் மேலான உயிர்கள் பலியாகியுள்ளன. தினமும் உயிர்ப்பலி நிகழ்ந்து இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பீடுகையில் அதிகளவில் இல்லையென்றாலும் பாதிப்பு என்பது இருக்கவே செய்கிறது. இந்த கொரானா முன்னிட்டு மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், தேசிய எதிர்க் கட்சியான காங்கிரஸும் ஒருவர் மோது ஒருவர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.  இது தேசிய அளவில் பெரும் கவனிப்பு பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முகாமிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான எம்.பி. சசிதரூர் ஒரு பேட்டியில்,  ’’கனடா போன்ற நாடுகளில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பார்லிமெண்ட் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனால், நமது இந்தியாவில் கொரோனா பிரச்னையை காரணம் காட்டி பார்லிமென்ட் குழுக்களின் கூட்டங்களை கூட வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடத்த மறுக்கின்றன.; இது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு  உடனடியாக பா.ஜ.க. முகாமிலிருந்து பிரதமர் அலுவலக விவகாரங்கங்கள் துறை அமைச்சரும், பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவருமான ஜிதேந்திர சிங்  பதிலடி கொடுத்தார். அவர் தன் பேட்டியில்,  காங்கிரஸ்  தலைவர்கள் கொரோனா விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆனால், எதுவுமே செய்யவில்லை என்பதுபோல் காங்கிரஸ் கட்சியினர் குறை கூறுகின்றனர். கொரோனா பிரச்னையில் கூட காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

இந்த விமர்சன போர் அடுத்தும் தொடர்ந்துள்ளது. இந்தமுறை காங்கிரஸ் முகாமிலிருந்து கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியே களம் கண்டார்.  ராகுல் காந்தி கூறுகையில், “கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி அரசின் தோல்விச் சின்னம் என்று கடந்த 2014-ம் ஆண்டில்  பிரதமர்  மோடி பேசினார். ஆனால், இதே பிரதமர் மோடி தான் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு உருவாக்கிய இந்த வேலை வாய்ப்பு திட்டத்துக்குத்தான் நாற்பதாயிரம் கோடி ரூபாயை கொரானா பேரிடருக்காக  கூடுதலாக ஒதுக்கியுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமருக்கு நன்றி’’ என்று கூறியிருக்கிறார்.

அடுத்ததாக பா.ஜ.க. முகாமிலிருந்து காங்கிரஸுக்கு அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் மூலம் பதிலடி தந்துள்ளார். ஜே.பி. நட்டா கூறுகையில், “பா.ஜ.க. வை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத எதிர்க்கட்சியினர் கொரானாவை காரணம் காட்டி முதுகில் குத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.  இது ஜனநாயக நாடு. கொரோனா விஷயத்தில் எதிர்க்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அரசு நிர்வாகம் மூலம் சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் பா.ஜ.க. வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. இதுபோன்ற அடக்குமுறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.

கொரானா என்பது பேரிடராக சமுதாயத்தில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களை வாழ்விக்கவும், பொருளாதார முன்னேற்றங்கள் காணவும், இப்படி உயிருக்கு அஞ்சும்படியான ஒரு நிலை ஏற்பட்டால் அதிலிருந்து அவர்களை காப்பாற்றவுமான செயலில் ஈடுபடுவதே அரசியல் கட்சிகளின் பிரதான காரியமாக இருக்க முடியும். இங்கே நமது நாட்டில் இந்த காரியம் ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கும், எதிர்க் கட்சியுமான காங்கிரஸுக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், நடப்பிலே இரண்டு கட்சிகளும் கொரானா விஷயத்திலே அரசியல் ரீதியான விமர்சனங்களை தொடர்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியலாக மக்கள் நலன் விரும்பும் ஜனநாயக விரும்பிகளால் கருதப்படாது. எவ்வளவு விரைவிலே தங்களுக்கிடையேயான விமர்சனங்களையும், இடைவெளிகளையும் துறந்து மக்கள் நலனுக்காக இரு கட்சிகளும் ஒன்றுபட்டு இனிமேல் ஒருவர்கூட இந்தியாவில் கொரானா மூலம்  உயிர்ப் பலியாவது நிகழாதவண்ணம் தடுத்து காப்பாற்ற இணைந்த கைகளாக வேண்டும் வேண்டுமென்பதே சமூகத்தின் அக்கறை கொண்டவர்களின் எண்ணமாக இருக்க முடியும்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்