லாக்டவுனை நீக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் – ராகுல் காந்தி!

slider அரசியல்

 

கடந்த சில தினங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் பொருளாதார அறிவிப்புகளுக்கு ஏற்ப இருபது லட்சம் கோடி மதிப்பிலான நிதி  சலுகைகளை அறிவித்து வருகிறார். இதில் சிறு, குறு, நடுத்தர மற்றும் விவசாயிகளுக்கான சலுகை திட்டங்களும் அடங்கியிருக்கிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் இப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மக்கள் கையில் பணம் சேர வேண்டும். அதுதான் அரசின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்’’ என்று கூறி இந்த நிதி சலுகை அறிவிப்புகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இது பெரும் சலசலப்பை தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ளது.

இன்று (16.5.2020) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர்களிடம், “மக்கள் கையில் பணம் சேர வேண்டும். அதுதான் இப்போது அரசுக்கு ஒரே இலக்காக இருக்க முடியும். ஒரு அம்மா தனது குழந்தைக்கு சாப்பாடு கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அப்படித்தான் இந்த அரசு செயல்பட வேண்டும். மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் மக்களுக்கு உணவு கிடைக்க அரசு கடுமையாக முயற்சிக்க வேண்டும். அரசு நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்த வேண்டும். நாம் அதை செய்யவில்லை என்றால் அது பெரிய அழிவாக வரும். ஏழைகளின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று இருக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டங்களை மீண்டும் ஏற்படுத்தி, அதை  200 நாளாக அதிகரிக்க வேண்டும்.

அடுத்து  அரசு கடன் கொடுக்கும் வங்கிகள் போல செயல்படக் கூடாது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். உடனடியாக பொருட்களுக்கான, சந்தை தேவையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனாவைவிட மிக மோசமான பாதிப்பாக பொருளாதார சரிவு உண்டாகும். நாம் மக்கள் கையில் பணத்தை கொண்டு சேர்க்கவில்லை என்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வராது. கவனமாக இருக்க வேண்டும் அதேபோல் லாக்டவுனை நீக்கும்போது மிகவும் கவனமாக நீக்க வேண்டும். முக்கியமாக வயதான நபர்கள், பெண்கள் பலியாகாமல் லாக்டவுனை நீக்க வேண்டும். மத்திய அரசு இதற்கு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். அரசுக்கு நாங்கள் அறிவுரை வழங்க தயாராக இருக்கிறோம். அரசு எங்கள் கோரிகைகளை கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.சிவாநந்தன்