இந்தியாவுக்கு நேபாள் நாடு திடீர் எதிர்ப்பு – பின்னணியில் சீனா!

slider அரசியல் உலகம்
BIDYA-DEVI-BHANDARI

 

கடந்த 8-ம் தேதி இந்தியா சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியிலிருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு நேபாள் நாட்டின் எல்லையோரத்தில் ஐந்து கி.மீ. தூரம் வரை சாலை அமைக்கப்பட்டது.  குறிப்பாக, கைலாஷ் மானசரோவர் செல்லும் மக்களுக்காக இந்த சாலை அமைக்கப்பட்டது என்று மத்திய அரசு விளக்கம் தந்திருந்தது. இந்நிலையில் லிபு லேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்ததற்கு நேபாள் அரசு தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பின் சீனா இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது  இது தொடர்பாக நேபாள் அதிபர் பித்யா தேவி பந்தாரி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்த இடங்களை மீட்போம். இந்தியா அங்கு சாலை அமைத்ததை ஏற்க முடியாது. இந்த இடங்கள் நேபாளுக்கு கீழ் வர கூடியது. இதற்கான புதிய நேபாள் வரைபடத்தை நாங்கள் வெளியிடுவோம்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே இன்று (16.5.2020) அளித்த பேட்டியில், “நேபாள் நாட்டுடனான இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். கிழக்கு காளி ஆறு அவர்களுக்கு சொந்தம் என்று நேபாள் அரசு கூறுகிறது. நாங்கள் அங்கு சாலையை அமைக்கவில்லை. நாங்கள் மேற்கு காளி ஆற்றில்தான் சாலையை அமைக்கிறோம். அங்கு பிரச்சனை எதுவும் இல்லை.   இத்தனை வருடம் அந்த பகுதியில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால், திடீர் என்று அங்கு பிரச்சனையை உண்டாக்க நேபாள் முயல்கிறது. இதற்கு காரணம் இருக்கலாம். நேபாளை பின்னணியில் இருந்து யாராவது இயக்கலாம். நேபாள் அரசுக்கு பின் மூன்றாவதாக ஒரு கை இருக்கிறது. இந்த பிரச்னையை விரைவில் சரி செய்வோம். விரைவில் இது தொடர்பாக முக்கியமான நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய நாணுவ தளபதி நாரவனே நேபாள் நாட்டை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூறியிருப்பது சீனாவைத் தான் என்றும், நேபாள் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த முடியும் என்று சீனா கணக்கு போடுகிறது என்றும், நேபாளை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுவதும் இந்த விவகாரத்துக்கான காரணமாக இருக்கமுடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

-தொ.ரா.ஸ்ரீ.