தயாநிதி மாறன் மீது ஸ்டாலின் வருத்தம்

slider அரசியல்

 

சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து தி.மு.க. செயல்படுத்திய ‘ஒன்றிணைவோம்’ திட்டம் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை அவரிடம் அளித்தனர். இந்த சந்திப்பு இப்போது பெரும் விவகாரமாக மாறியுள்ளது. தலைமை செயலாளர் எங்களை அவமதித்துவிட்டதாக தி.மு.க. எம்.பி.க்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்கள். இதில் தற்போது தயாநிதி மாறன் மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பேச்சாகி வருகிறது.

குறிப்பாக, தி.மு.க. எம்.பி.க்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், “எங்களை நாகரீகமாக தலைமைச் செயலாளர் நடத்தவில்லை. நாங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது டி.வி.யை சத்தமாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் உங்களை போன்ற ஆட்களிடம் இது தான் பிரச்னை என்றார். வெளியில்போய் செய்தியாளர்களிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்’’ என்று கூறினார் என்று சொன்னார்கள். இது உடனடியாக தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

ஒருபுறம் இந்த பேட்டி தலைமைச் செயலாளர் தி.மு.க. எம்.பி.க்களை அவமானப்படுத்திவிட்டார் என்று பரபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு புறம் இந்தப் பேட்டியின்போது தயாநிதி மாறன் எம்.பி. பேசும்போது, “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்று பேசியது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ட்விட்டர் மூலம் கண்டனம் பதிவு செய்திருந்தார். தயாநிதி மாறனால் ஏற்பட்ட இந்த நிலை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துவிட்டதாம். திருமாவளவன் ட்வீட் போட்ட ஒரு மணிநேரத்தில் தயாநிதி மாறனை இந்த சம்பவத்துக்காக கடிந்துகொண்ட ஸ்டாலின் உடனடியாக மன்னிப்புகோரும்படி கூறினாராம். உடனடியாக ட்வீட்டில் தயாநிதி மாறன் மன்னிப்புக்கோரியதும் நடந்தது.

அடுத்ததாக தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து இருந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நேரடியாக தொடர்பு கொண்டு தி.மு.க. அளித்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கிறேன் என பலமுறை தெரிவித்தும், சூழ்நிலை புரியாமல் தேதியை சொல்லுங்கள் என்று டி.ஆர்.பாலுவும், தயாநிதியும் திரும்ப திரும்ப கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறது  தலைமை செயலக வட்டார தகவல்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்