ஜூன் மாதம் வரை ஊரடங்கு – மருத்துவக் குழு பரிந்துரை!

slider அரசியல்

 

தமிழகத்தில் சென்னையில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் கொரானா தொற்று எண்ணிக்கை வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரானாவினால் உயிர்ப்பலி எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் மிகவும் குறைந்த சதவீதத்திலே இருந்து வருகிறது. இந் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலுள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கொண்ட குழுவை கொரானா குறித்த ஆலோசனைகள் வழங்க நியமித்திருந்தார். அவர்கள் இன்று (14.5.2020) முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன்பின்னர் தங்கள் குழு சார்பில் ஜூன் 1-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்தனர்.

தமிழக முதல்வர் நேற்று (13.5.2020) பேசும்போதுகூட கொரானாவை கட்டுபடுத்துவது மக்கள் கையில்தான் உள்ளது என்று கூறியிருந்தார். மேலும், பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் அறிவுறுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்   இன்று (14.5.2020) தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமியை தமிழக அரசு நியமித்திருந்த மருத்துவ குழு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.  இதன்பின்னர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த  மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பிரதீப் கவுர், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம்.  அதிகளவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது.  தாங்கள் பணியாற்றும் இடங்களில் தொழிலாளர்கள் உள்பட அனைவரும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊரடங்கை நூறு சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை.  ஊரடங்கை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாக தளர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.  அதனால் ஊரடங்கு தொடரும்.  ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.  கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது.  கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்’’ என்று  கூறினார்.

கொரானா பெரும் தொற்று நோய் என்பதை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலே உலக சுகாதார அமைப்பு அறிவித்துவிட்டது. சுவாசங்களை குறிவைத்து தாக்கும் இந்த கொடிய நோய்க்கு மருத்துவங்களை தாண்டி தனிமனித இடைவெளியும், முக கவசமும் தான் முதலுதவி போன்றது என்கிறார்கள் உலகமெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ஊரடங்கு என்பது மக்களை கட்டுக்குள் வைக்க பயன்படும் ஒன்றாக கையாளப்படுகிறது. ஆனால், இதனையே ஆண்டு முழுமைக்கும் செய்து கொண்டிருக்க முடியாது. அதேவேளையில் மருத்துவர்கள் ஆலோசனை என்பது கொரானா போன்ற கொடிய வைரஸ் விவகாரத்தில் கட்டாயமாகிறது. ஆனாலும் தளர்வுகள் எவையெவை என்றும் அவை எப்படியென்றும் அரசு உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டியதும் அவசியமாகிறது. இந்த இரண்டையும் மக்களை காப்பாற்றும் நோக்கில் ஒருங்கே செய்ய வேண்டிய இடத்தில் தமிழக அரசு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்