கொரானா குறித்து அச்சம் தேவையில்லை– முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

slider அரசியல்

 

TAMILNADU-CHIEF-MINISTER

 

பிரதமர் மோடி கடந்த 11-ம் தேதி அன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் மே 17-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கியமாக தமிழகத்தில் இன்னும் கொஞ்சநாளைக்கு தமிழகத்துக்கு விமான, ரயில் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தார். இதன்பின்னர் இன்று (13.5.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கொரானா நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசியுள்ளார். மேலும், கொரானா காலத்திலும் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இன்று (13.5.2020) சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இங்கு தமிழக முதல்வர் பேசும்போது, ‘’ கண்ணுக்கு தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறோம். ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கவும் அரசு வழிவகைகளை செய்துள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் மாதத்திலும் இந்த பொருட்களை மக்கள் பெற்று கொள்ளலாம். அதனால் தமிழகத்தில் உணவு பஞ்சம் என்பது ஏற்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில்  ஆயிரம் ரூபாய்  மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை வழங்கினோம். இதன் பின்னர் மீண்டும் அவர்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,  அம்மா உணவகங்கள் வழியேயும் மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறோம். இதனால் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்றனர். கொரோனாவை தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும். தமிழகம் மற்றும் இந்தியாவில் தற்போது உயர்ந்துள்ளது. இதன்பின்னர் கொரோனா பாதிப்பு  குறைய வாய்ப்புள்ளது. டாக்டர்களின் தீவிர சிகிச்சைகளினால் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் சோதனை செய்யப்படுவதால் பாதிப்பு  எண்ணிக்கை அதிகமாக தெரிய வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. கொரானா குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை’’ என்றும் பேசியுள்ளார்.

  • எஸ்.சிவாநந்தன்