தமிழகத்தில் பிளாஸ்மா ஆராய்ச்சி!

slider அரசியல் மருத்துவம்

 

 

கொரானாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதனை முழுவதும் நீக்குவதற்கும் பல்வேறு நாடுகளில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவும் இந்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் என்றால் தற்போது கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என்னமாதிரி சிகிச்சை அளிக்க வேண்டு எனவும், அதில் எது சீக்கிரத்திலும், சிறந்த முறையிலும் நோயாளிகளை குணப்படுத்துகிறது என்பதையும் மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அதில் பிளாஸ்மா முறையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக டெல்லியில் நான்கு நோயாளிகளிடம் பரிசோதனை முறையில் சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல விளைவுகளும் கிடைத்துள்ளதாக தகவல்களும் வந்தன. இந்நிலையில் தமிழகம் பிளாஸ்மா ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த பிளாஸ்மா ஆராய்ச்சி சென்னை ராவீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு அவற்றை பிரித்தெடுத்து கொரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு தான் பிளாஸ்மா சிகிச்சை முறை என்று பெயர்.  இதற்கு முன்பு மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டபோது நல்ல பலனை தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுபோலவே கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக இந்தியாவில் முதற்கட்ட ஆராய்ச்சி துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி, மதுரை, நெல்லை, வேலுார் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சியை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை துவக்கிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து இன்று (12.5.2020) சென்னையிலுள்ள   ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் டாக்டர் சுபாஷ் கூறுகையில், ‘’கொரோனாவிற்கான பிளாஸ்மா சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியின் வாயிலாக கொரோனா சிகிச்சைக்கான சாதக, பாதகங்கள் குறித்து தெரியவரும். ஆராய்ச்சி முடிவு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். நாடு முழுதும் பல மருத்துவமனைகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆராய்ச்சியில் நல்ல தீர்வு கிடைத்தால் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும். இந்த ஆராய்ச்சியின்படி சிகிச்சை செயல்பாட்டிற்கு வருவதற்கு ஆறு முதல் ஒன்பது மாதங்களாகும்” என்று கூறியுள்ளார்.

  • எஸ். சிவாநந்தன்