போர் சம்பந்தபட்ட படத்தில் நடிக்கவேண்டும் – அதர்வா!

slider சினிமா
ATHARVA

 

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் அதர்வாவும் ஒருவர். இவரது தந்தை முரளி சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அதிலும் காதல் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.  ‘இதயம்’,  ‘கீதாஞ்சலி’  ‘பூவிலங்கு, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ ஆகிய படங்கள் இதற்கு உதாரணங்கள்.

நடிகர் அதர்வா காதலுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டுமல்லாமல் ஆக்ஷனுக்கு வாய்ப்புள்ள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அதர்வாவிடம் டுவிட்டர் மூலம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், “வாரிசு நடிகராக இருப்பதில் உள்ள சவுகரியம், அசவுகரியம்’’  என்கிற கேள்விக்கு, “வாரிசு நடிகராக இருப்பதில் சவுகரியங்களே நிறைய இருக்கிறது. இவன் இன்னாரின் மகன் என்று அடையாளம் காட்டப்படுவோம். அதன்மூலம் சுலபமாக ரசிகர்களை சென்று அடைவோம். அப்பா இப்படி நடித்தார். மகன் எப்படி நடிப்பாரோ? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஒப்பிட்டு பார்ப்பார்கள். இதுவே அசவுகரியம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி பெரிதாக முன்னால் நிற்கும். அந்த சவாலை ஜெயித்துக் காட்டுவது சுலபம் அல்ல” என்று கூறியுள்ளார்.

அடுத்து “உங்கள் அப்பா ஒரு காதல் நாயகனாக பேசப்பட்டார். நீங்கள் எப்படி?’’ என்கிற கேள்விக்கு, ’’அப்பாதான் என் ஹீரோ. எனக்கு காதல் கதைகளும் பிடிக்கும். விளையாட்டு தொடர்பான கதைகளும் பிடிக்கும். இரண்டும் கலந்த கதை ரொம்ப பிடிக்கும். அப்படி ஒரு கதைதான் ‘ஈட்டி’. எனக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. போர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது’’ என்றும் அதர்வா பதில் கூறியுள்ளார்.