கொரானா ஆராய்ச்சிகளை சீனா திருடுகிறது – அமெரிக்கா மீண்டும் புகார்!

slider அரசியல் உலகம்

 

கொரானாவுக்கு அதிக உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டிருக்கும் நாடாக தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக இருந்து வரும் அமெரிக்கா கொரானா விவகாரத்தில் சீனா நிறைய விஷயங்களை மறைத்துவிட்டது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க இப்போது தங்களது கொரானா ஆராய்ச்சி பற்றிய தகவல்களை இணைய ஹேக்கர்கள் மூலம் சீனா திருடி வருவதாக பகிரங்க புகாரும் கூறியுள்ளது. இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவில் அதிக அதிகாரம் கொண்ட அமைப்புகளான எஃப்.பி.ஐ. மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை (Department of Homeland Security) ஆகியன சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களில், ‘’ கொரோனா தொடர்பான எங்களின் செயலை சீனா கண்காணிக்கிறது. இணைய ஹேக்கர்கள் உதவியுடன் சீனா, அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி குறித்த விவரங்களை திருடுகிறது. மேலும் எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது, எப்படி டெஸ்டிங் செய்யப்படுகிறது என்பது குறித்த தகவலையும் சீனா திருடுகிறது. இதற்காக பெரிய ஹேக்கர்கள் குழுவை சீனா களமிறக்கியிருக்கிறது. இணைய ரீதியாக சைபர் வார் போல இதை சீனா செய்கிறது.    இதற்காக அந்நாட்டு ஹேக்கர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் போல வேடம் போடுகிறார்கள். தங்கள் ஆராய்ச்சிக்கு தகவல் கேட்பது போல வரும் இவர்கள், பின் ஹேக்கிங் மூலம் முக்கிய தகவல்களை திருடுகிறார்கள். இவர்களின் முக்கிய குறி ஆராய்ச்சி மருத்துவமனைகள், தனியார் கொரோனா சோதனை மையங்கள் தான். இங்குதான் எளிதாக ஹேக்கிங் செய்ய முடியும். இதற்கு தக்க பதிலடி தற்போது கொடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் பல வருடங்களாக பயிற்சி எடுத்துள்ளோம். சீனாவின் இந்த ஹேக்கிங் முயற்சியை முறியடித்துள்ளோம். அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த அனுமதியின் பெயரில் சீனாவிற்கு இணையம் மூலம் திருப்பி பதிலடியும் கொடுத்து வருகிறோம். நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம்’’ என்று கூறியிருக்கின்றன.

சில வாரங்களாகவே தென் சீன கடல் எல்லையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இது போராக வெடிக்கலாம் என்றுகூட சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் இப்போது இந்த இணைய ஹேக்கர் மோசடியையும் சீனா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. உலக சமாதானம் விரும்புவர்கள் உலக வல்லரசுகளான இந்த இரு நாடுகளின் மோதலை விரும்பவில்லை என்றே உலகளவில் வெளியாகிவரும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • எஸ்.சிவாநந்தன்

.