அமெரிக்கா – சீனா மோதல் பத்தாண்டுகள் நீடிக்கும் – வல்லுனர்கள் கணிப்பு!

slider அரசியல் உலகம்

 

 

உலக வல்லரசான அமெரிக்கா தற்போது வரை கொரானா வைரஸை சீனா பரப்பியதாகவே குற்றம்சாட்டி வருகிறது. இதனை சீனாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது. கொரானாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளும் குரல் கொடுத்து வருவதும் தொடர்கிறது. இதன் விளைவாக உலக அரங்கில் அமெரிக்கா- சீனா மோதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதல் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகத் பிணக்குகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் வர்த்தக பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தின. இதனால் அமெரிக்கா, சீனா இடையேயான மோதல் போக்கு ஆரம்பமானது. இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து அமெரிக்காவில் கொரானாவினால் ஏற்படும் உயிர்பலி அதிக சதவீதத்தில் ஏற்பட்டு வருகிறது. இன்றுவரை 70,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க பொருளாதாரமும் பெருமளவு சரிவைக் கண்டிருக்கிறது. இதிலிருந்து அமெரிக்கா மீள இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கொரோனா தாக்கம் அமெரிக்காவில் இருந்து நீங்க கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்று வைராலஜி விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர்.

இதன் விளைவாக கொரோனா தாக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்ட பிறகு சீனாவை எந்தவிதத்திலாவது தண்டிக்கும். குறிப்பாக, சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் கிளைகள் திறக்க அனுமதி மறுக்கும். அமெரிக்காவின் நட்பு நாடுகளை சீனாவுடன் வர்த்தகத்தை துண்டிக்க வலியுறுத்தும். மேலும், உலக வங்கியிலிருந்து சீனா கடன்பெறத் தடையாக இருக்கும் என்றும் போர் போன்ற சூழல்கள் ஏற்படாத பட்சத்தில் குறைந்தபட்ச அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிணக்கு நீங்கிட பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று சில தினங்களுக்கு அமெரிக்க ஊடகங்களில் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

  • எஸ்.சிவாநந்தன்