பச்சை மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறியது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி!

slider அரசியல்
RAHUL-GHANDI

 

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சில தினங்களாக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனுடனும், அடுத்து பொருளாதார நிபுணராக கருதப்படும் அபிஜித் பானர்ஜி போன்றவர்களுடனும் இணைய வழியில் தொடர்ந்து கலந்துரையாடல் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  “கொரானா முன்னிட்டு மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை’’ என்று விமர்சனம் செய்துள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து இன்று (8.5.2020) காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர்,    “கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க எடுக்கப்படும்  நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்து வருகிறது. ஆரோக்கியத்திற்கும், பொருளாதார நிலைமைக்குமான போட்டியாக கொரோனா உள்ளது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை். அதேநேரத்தில் பொது முடக்கத்திலிருந்து மீள சரியான உத்தி தேவை. ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கும் தற்போது உதவிகள் தேவை. அவர்களுக்கு பண உதவி செய்வது அவசியம்.  ஊரடங்கை தளர்த்துவதற்கு முன் உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்.    சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. ஒரு பிரதமருக்கு பதிலாக, பல வலிமையான முதல்வர்கள் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம்.

மேலும், கொரோனா தடுப்புப் பணியில் மத்திய அரசிடம்  வெளிப்படைத்தன்மை இல்லை. அரசாங்கம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் தேசிய அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாநில மட்டங்களில் தீர்மானிக்க வேண்டும். தேசிய அளவில் பசுமை மண்டலங்களாக  இருந்த  பகுதிகள் இப்போது சிகப்பு மண்டலங்களாக மாறத் தொடங்கிவிட்டன. இது மத்திய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையை பறைசாற்றுகிறது” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் உட்பட சில மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. புதுச்சேரி யூனியனிலும் காங்கிரஸ் ஆட்சிதான். இங்குள்ள முதல்வர்கள் பச்சை மண்டலங்களாக இருக்க தகுதி படைத்தவை. ஆனால், சிவப்பு மண்டலங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் கூறியுள்ளனர். இதனை தான் இன்று (8.5.2020) செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி சொல்லியுள்ளார். ஆகவே, இந்த விஷயத்தை சீரியஸாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இது மக்கள் நலன் சார்ந்த ஒன்று. இதில் விழிப்புணர்வுடன் இல்லாமல் அலட்சியம் செய்தால் மக்களிடமிருந்து அதற்கான கோபம் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சி மீது பாயலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எஸ்.சிவாநந்தன்.