புதிய மருந்து – பிரதமர் மோடி வருத்தம்!

slider அரசியல் மருத்துவம்
MODI

 

பெரும் தோற்று நோயாக உலகையே மரணபீதியில் ஆழ்த்தியிருக்கும் கொரானாவிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உட்பட பல்வேறு நாடுகள் பெரும் பொருள் செலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பணியில் இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்படியாக புதிய மருந்துகள் மற்றும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கும் விஷயத்தில் நமது நாட்டில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள் பழமையானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி  தற்போது தெரிவித்துள்ளார். இது இப்போது இந்தியாவெங்கும் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

கொரானா போன்ற நோய்களுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபடுகையில் அந்த புதிய கண்டுபிடிப்பு மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான ஒப்புதல்களை பெறுவதற்கு அந்த நாடுகளில் மிகச் சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. இதுவே இந்தியாவில் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளை முதலில் எலிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்திடவே பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது என்று சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனாவைக் கட்டுப்படுத்த ரெம்டிசிவிர் போன்ற மருந்துகள் நல்ல பலன்களை தருகிறது. அந்த மருந்தை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவதற்கு தற்போதைய நடைமுறையில் அதிக காலம் ஆகிறது. இதற்கு இந்திய மருந்து ஒழுங்குமுறையிலுள்ள குறைபாடுகளே காரணம் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து ஆலோசிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில்  5-5-20  அன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது.  இதில் பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், பிரதமரின் ஆலோசகர் அமர்ஜீத் சின்ஹா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் பல்ராம் பார்கவா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுதன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “கொரானா வைரஸை ஒழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு துறையினரும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுவது  வரவேற்கதக்கது. ஆனால், இந்த விஷயத்தில் கவலையளிக்க கூடிய அம்சமும் உள்ளது. அதாவது, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், நம் அதிகார வர்க்கமும், நடைமுறைகளும் அதற்கு சாதகமாக இல்லை. புதிய மருந்து கண்டுபிடிப்புகளின்போது சில அடிப்படை பரிசோதனைகளுக்கான ஒப்புதல்கள் விரைவாக வழங்கப்படுவதில்லை. அடிப்படையில் நம் மருந்து ஒழுங்குமுறையில் பின்பற்றப்படும் நடைமுறைகள் பழமையானதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளன. இதுபோன்ற தாமதங்கள், போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட வேண்டும். புதிய மருந்துகள், நெறிமுறைகளின்படி உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்பட்டால் மட்டும் போதாது. அவை விரைவாகவும் மக்களை சென்றடைய வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.

  • தொ.ரா.ஸ்ரீ.