ஆந்திர விஷ வாயு விபத்து – மனித உரிமைகள் கவுன்சில் நோட்டீஸ்!

slider அரசியல்

 

lgpolymers

 

ஆந்திர மாநிலத்தின் முக்கியமான நகரம் விசாகப்பட்டிணம். இங்கு மிகப்பெரிய துறைமுகம் உள்ளது. இந்த நகரத்தில் இன்று (7.5.2020) ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தினால் ஒன்பது உயிர்கள் பலியாகியிருக்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மூச்சு திணறல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இந்தியாவையே உலுக்கி விட்ட இந்த விபத்து குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இன்று (7.5.2020) காலைவேளையில் ஆந்திர மாநிலம்  விசாகப்பட்டிணம் நகரத்தில் அமைந்துள்ள கோபால்பட்டிணம் என்கிற இடத்தில் இயங்கிவந்த எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் இந்த ஆலையைச் சுற்றியுள்ள மூன்று கி.மீ. தூரத்திலிருந்த ஐந்து கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் ஒன்பது பேர் பலியாகிவிட்டனர். மேலும், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தின் பாதிப்பினால் 1000 பேருக்கு மேல் மூச்சுவிடச் சிரமம் மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாலை ஏற்பட்ட இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கிவிட்டது.  தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற  தேசியப் பேரிடர் குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தை அறிந்தவுடன் ஆந்திர முதல்வர்  ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டிணம் விரைந்தார். அங்கு  விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இத்துடன் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி நிவாரணமும் அறிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

  • எஸ்.சிவாநந்தன்