ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு வெற்றி உறுதி!

slider அரசியல் உலகம்

     

UNITED-NATION

 

உலகளவில் கொரானாவின் தாக்கத்தாலும், பாதிப்பாலும் அரசு நிர்வாகங்கள் முடங்கி வருகின்றன. இதில் உலக நாடுகளின் சங்கம் என்று சொல்லப்படும் ஐ.நா.வின் செயல்பாடுகளிலும் இதன் எதிரொலிப்பு தென்படுகிறது. குறிப்பாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். தேர்தல் நடத்தால் இந்தியா தற்காலிக உறுப்பினராக தேர்வாவது உறுதியான நிலையில் இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான ஐ.நா. தூதராக நீண்ட காலம் இருந்து வந்தவர் அக்பருதீன். இவருக்கு ஐ.நா. மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நன்கு அனுபவம் உண்டு. சமீபத்தில் இவர் இந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக அந்த பதவியில் அமர்ந்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி. இவர் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐ.நா.வில் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் தேர்தல் தள்ளிப்போனது குறித்து முன்னாள் ஐ.நா. தூதரான அக்பருதீன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அக்பருதீன், “உலக நாடுகளின் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை கொரானா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கொரானா விடுத்துள்ள சவால்களுக்கு, உலக நாடுகள் ஒன்றிணைந்து விரைவாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் உலக இயக்கம் இயல்பு நிலைக்கு திரும்புவது தாமதமாகும். ஐ.நா.வின் பதினைந்து உறுப்பினர்கள் அடங்கிய பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூன்17-ம் தேதி நடைபெறவுள்ளது. கொரானா பாதிப்பால் இத்தேர்தலை தள்ளி வைக்கவும், மின்னணு ஓட்டுப் பதிவு மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் ஒரே பிரதிநிதியாக இந்தியா உள்ளது. இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஐம்பத்தைந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, தேர்தல் தள்ளிப் போனாலும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா இடம் பெறுவது உறுதி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக ஆவதற்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளது  சீனா. ஆனால், நிரந்தர உறுப்பினராக பல ஆண்டுகளாக சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரத்தில்  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன என்பதும் முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

  • எஸ்.சிவாநந்தன்.