கொரானாவுக்கு தமிழ் பாரம்பரிய சிகிச்சை – விஜயகாந்த் வலியுறுத்தல்!

slider அரசியல் மருத்துவம்
VIYAYAKANTH

 

கொரோனா நோயாளிகளுக்கு தமிழ் பாரம்பரிய மருத்துவ முறையை பயன்படுத்தி குணப்படுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எடுதியுள்ளார். இதனை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக கொரானாவுக்கு நமது பாரம்பரிய தமிழ் மருத்துவமுறை 15 நாட்களுக்கு சிகிச்சை அளித்துப் பரிசோதிக்கலாம் என்று விஜயகாந்த் கூறியிருப்பது பெரும்பாலனவர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பாக தே.முதி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், தமிழகம் முழுவதும் இரண்டு ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்துக் கொண்டேவருகிறது. எனவே, கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பாரம்பரிய மருத்துவமான ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றை நாம் நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மருத்துவர் தணிகாசலம் போன்றவர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தி வரும் வேளையில், ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழமொழிக்கேற்ப இந்த காலக்கட்டத்தில் எதையும் அலட்சியமாகக் கருதாமல் ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்களை அழைத்து கலந்தாலோசனை செய்து, அவர்கள் கூறும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு சிகிச்சை அளித்து பரிசோதிக்கலாம். அவ்வாறு செய்யும்போது அதில் பலன் இருந்தால் அந்த சிகிச்சை முறையை தொடரலாம்.

மேலும், இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான சிகிச்சை முறையை உலகுக்கும் நாம் கொண்டு செல்ல முடியும். ஏனெனில், கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம், வேப்பிலை, மஞ்சள், சுடுதண்ணீர், உப்பு, இவையனைத்தும் தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை.   கொரோனாவும் ஒரு வைரஸ் தொற்றுதான் என்பதால் இதற்கு நிச்சயம் பாரம்பரிய சிகிச்சைகள் பலன் அளிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று அறிய வந்துள்ளோம். எனவே, விரைவில் பாரம்பரிய மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அந்த மருத்துவ சிகிச்சையை தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

  • எஸ்.சிவாநந்தன்