டிரம்ப் மீது குற்றம் சொல்லும் உளவுத்துறை!

slider உலகம்
TRUMP-Anthony-Fauc

 

உலக வல்லரசான அமெரிக்காவில் கொரானாவினால் பலியானவர்களின் எண்ணிகை ஐம்பதாயிரத்தை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், “இது அமெரிக்காவுக்கு நேர்ந்த பெரும் கொடூரம்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் சி.ஐ.ஏ. என்று சொல்லப்படும் அமெரிக்க உளவுத்துறை தாங்கள் முன்கூட்டியே அதிபர் டிரம்புக்கு கொரானா குறித்து சொன்ன தகவல்களை உதாசீனப்படுத்திவிட்டார் என்கிற குற்றச்சாட்டை கூறியுள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான  ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்கு தற்போது மற்றும் முன்பு பணியில் இருந்த சி.ஐ.ஏ. அதிகாரிகள் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், “அதிபர் டிரம்புக்கு தினமும் விடியற்காலையில் உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று சமர்பிக்கப்படும். அப்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வழங்கப்பட்ட முக்கிய தகவல்களில் சீனாவில் கொரானா உருவானது குறித்த பல தகவல்கள் அடங்கியிருந்தது.

ஆனால், கொரானா பெரும் தோற்று எதிராக முதல் நடவடிக்கையே அதிபரால் ஜனவரி கடைசி தேதியில் தான் எடுக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 26-ம் தேதி அன்று பொது மக்கள் மத்தியில் பேசும்போதுகூட கொரானா இன்னும் சில நாள்களில் முற்றிலும் ஒழிந்துவிடும். கொரானா பூஜ்யமாகிவிடும் என்று பேசினார். ஆனால் அதற்கு பிறகுதான் அமெரிக்காவில் கொரானா வேகமாக பரவியது. நியூயார்க் மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியது. இதன்பிறகும் மார்ச் 10-ம் தேதி டிரம்ப் பேசுகையில் அமைதியாக இருங்கள். கொரானா தானாக போய்விடும் என்று பேசினார். இதற்கு அடுத்த நாள் தான் உலக சுகாதார நிறுவனம் கொரானாவை சர்வதேச பெரும் தோற்று நோயாக அறிவித்தது’’ என்று விபரம் தந்துள்ளனர்.

அமெரிக்காவை பொறுத்தவரை சி.ஐ.ஏ. என்பது அதிகாரமிக்க ஒரு அமைப்பாகும். அந்த அமைப்பு அதிபருக்கு மட்டுமல்ல பாராளுமன்றத்தின் செனட் என்று சொல்லப்படும் சபைக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டது. அமெரிக்காவை உலுக்கும் கொடூர நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சம்பவம் குறித்தும் சி.ஐ.ஏ. நிச்சயம் செனட்டுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதில் இப்போது சி.ஐ.ஏ. முதன்முதலாக அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த விவகாரம் இன்னும் கொஞ்ச காலத்தில் அமெரிக்காவை புரட்டிப்போடும் ஒன்றாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.

  • எஸ். சிவாநந்தன்