கொரானாவுக்கு தடுப்பூசி – ஆக்ஸ்போர்டு அறிவிப்பு!

slider உலகம் மருத்துவம்

 

கொரானா என்னும் கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவாகி நான்கு மாதங்களைத் தாண்டிவிட்டது. இதன் பாதிப்புக்கு உலக வல்லரசான அமெரிக்காவும் தப்பவில்லை. உலகில் 150க்கும் மேலான நாடுகள் இன்றுவரையும் இந்த வைரஸ் நோயினால் தவியாய் தவித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தி கொரானா அதிகளவில் பரவாமல் தடுத்து வருகின்றன. ஆனாலும் மருத்துவ ஆராய்ச்சி உலகம் இந்த கொடிய நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே உலகம் நிம்மதி பெறும் என்று கூறிவருகின்றன. இது முன்னிட்டு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகளை கடந்த சில மாதங்களாகவே எடுத்து வருகின்றன.

இதில் தற்போது இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து கொரானாவுக்கு தடுப்பூசிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஜென்னர் தடுப்பூசி ஆய்வு நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி தான் ChAdOx1 nCoV-19.  இந்த நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை கடந்த சில நாள்களாக மனிதர்களிடையே பரிசோதித்து பார்ப்பதை ஆரம்பித்துள்ளன. முன்னதாக, குரங்குகள் உடலில் இது செலுத்தப்பட்டிருந்தது. அந்த பரிசோதனை வெற்றிகரமாக பலன் கொடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளை செய்ய இங்கிலாந்து அரசு 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு குழு மே மாத இறுதிக்குள் 6,000 – க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்க திட்டமிட்டுள்ளதாக   ‘தி நியூயார்க் டைம்ஸ்’  சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. அந்த   ‘தி நியூயார்க் டைம்ஸ்’  செய்தியில் ஆக்ஸ்போர்டு குழுவின் தடுப்பூசி முயற்சி என்பது உலகெங்கிலும் இதேபோன்று நடைபெறும் ஆராய்ச்சி முயற்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வேகமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.

ஆக்ஸ்போர்டு குழு  சக்சஸ் மொன்டானாவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனங்களின் ராக்கி மவுண்டைன் ஆய்வகத்தில் மார்ச் மாதம் ஆறு ரீசஸ் மாகேக் குரங்குகளுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதித்தது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அந்த குரங்குகள் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் இடத்தில் விடப்பட்டன.  அவைகள் 28 நாட்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்தபோதும் ஆரோக்கியமாக இருந்துள்ளன. குறிப்பாக, ரீசஸ் மா கேக் வகை குரங்குகள், மனிதர்களின் ஜீன்களுக்கு நெருக்கமான ஜீன்களை கொண்ட குரங்குகள் என்று மானுட ஆராய்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

குரங்குகளில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கும், இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், இந்த தடுப்பூசியின் பலன்கள், ஆக்ஸ்போர்டு முயற்சியில் உத்வேகத்தை அதிகரித்துள்ளன. இந்த தடுப்பூசி முழுமையான வெற்றியைக் கண்டால் செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்திய நாட்டின் செரம் நிறுவனம். இது குறித்து  செரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா  கூறுகையில், ’’எங்கள் நிறுவனம் முதல் ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு ஐந்து மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும். அதைத் தொடர்ந்து, உற்பத்தியை மாதத்திற்கு பத்து மில்லியன் டோஸாக உயர்த்துவோம் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியின் சிறப்பு குறித்து ஆகஸ்போர்டு கூறுகையில், “இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் போன்ற தோற்றத்தை மனித உடலுக்குள் செலுத்தும்போது அது மனித நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க பழக்கப்படுத்தும் டெக்னிக்கை பெறும். எனவே, கொரோனா வைரஸ் மனித உடலை தாக்கினாலும் ஏற்கனவே அது போன்ற வைரஸை தாக்கி அழித்த நினைவுகளை மனித நோய் எதிர்ப்பு சக்தி வைத்திருக்கும் என்பதால், எளிதாக கொரோனா வைரஸை விரட்டியடித்துவிடும்’’ என்று கூறியுள்ளனர்.

  • எஸ்.சிவாநந்தன்