அச்சு ஊடகத்துக்கு பெருகும் ஆதரவு – ஆய்வு தகவல்!

slider இலக்கியம்

 

கடந்த 20 ஆண்டுகளாக, அதாவது 2000-ஆம் ஆண்டின் துவக்கத்துக்குப் பிறகே கம்ப்யூட்டரின் பயன்பாட்டில் செய்திகளும் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது. இதன் தாக்கம் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று பேஸ்-புக் மற்றும் வாட்ஸ்-அப் என்கிற சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதியாகவும் மாறியது.

தொலைக்காட்சியின் வரவுக்கு முன்பு அச்சு ஊடகமான பத்திரிகையும், இதழ்களும்தான் மக்கள் செய்திகள் அறியும் ஒரே ஊடகமாக இருந்தது. 1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பு வந்த பின்னரும்கூட அச்சு ஊடகத்துக்கு பெரும் பாதிப்பெல்லாம் ஏற்படவில்லை. ஆனால், கம்ப்யூட்டரிலும், மொபைல் ஆப்களிலும் செய்திகள் இடம்பெறத் துவங்கியவுடன் அச்சு ஊடகம் பெரும் பின்னடைவை கண்டு வருகிறது. இதுதான் தற்போதைய நிலை. இந்நிலையில் கொரானா பாதிப்பை முன்னிட்டு ஊரடங்கு அமலிலுள்ள இந்த நேரத்தில் அச்சு ஊடகத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது என்று ஆய்வு தகவல் கூறுகிறது.

இது குறித்து டெல்லியைச் சேர்ந்த  ‘அவான்ஸ் பீல்ட் அண்ட் பிராண்ட் சொல்யூஷன் எல்.எல்.பி.’, என்கிற நிறுவனம் ஆய்வு நடத்தியது. கடந்த 13 – 16 தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து கேள்விகளை அந்த நிறுவனம் கேட்டது. அப்போது மக்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து ஆய்வு முடிவுகளை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில்,  “ஊரடங்கு காலத்தில் மக்களிடையே நாளிதழ்களை படிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. வாசகர்களுக்கும், நாளிதழ்களுக்கும் இடையே உள்ள உறவு கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை விட அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுஉள்ளது. ஊரடங்கிற்கு முன் ஒரே நாளில் நாளிதழ்களை ஒரு மணி நேரத்துக்கு மேல் படிப்பவர்கள் எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஊரடங்கிற்கு முன் அரை மணி நேரம் மட்டும் நாளிதழ்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை 42 சதவீதமாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் அரை மணி நேரம் நாளிதழ் படிப்பவர்கள் எண்ணிக்கை 72 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமும் 15 நிமிடங்களுக்கு குறைவாக நாளிதழ் வாசிப்போர் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 14 சதவீதமாக இருந்தது. ஊரடங்கின் போது 3 சதவீதம் பேர் மட்டுமே 15 நிமிடங்களுக்குள் குறைவாக நாளிதழ்கள் வாசிக்கின்றனர். மீதமுள்ள 97 சதவீதம் பேர் 15 நிமிடங்களுக்கும் அதிகமாக நாளிதழ்கள் வாசிப்பதற்கு நேரத்தை செலவிடுகின்றனர். ஊரடங்கிற்கு முன் 58 சதவீதம் பேர் ஒருமுறை மட்டுமே நாளிதழ்களை படித்தனர். ஊரடங்கில் 42 சதவீதம் பேர் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அதாவது திரும்ப திரும்ப நாளிதழ்களை படிக்கின்றனர்’’ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • எஸ்.சிவாநந்தன்