அரசு ஊழியர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள் – டி.டி.வி.தினகரன்!

slider அரசியல்

 

ttv-eps

 

கொரானா பேரிடராக அறிவிக்கப்பட்டிருப்பதால் இதற்கான நிவாரண தேவைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி  மத்திய அரசுக்கு தேவைப்படுகிறது. இதனால், பொருளாதார மற்றும் வருவாய் நெருக்கடி  அடுத்தாண்டு வரைக்கும்  நீடிக்கக்கூடும் என்று அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இதற்காக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒரு வருட காலத்துக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனையே தமிழக அரசும் இப்போது பின்பற்றியுள்ளது. இப்படி அகவிலைப்படியை நிறுத்தியதை தேசிய அளவில் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் தி.மு.க.வும் எதிர்த்துள்ளது. இதில் தற்போது அ.ம.மு.க.வும் இணைந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் அதிக நிதி தேவைபடுகிறது. அரசு சார்ந்த வருவாய் கடந்த இரண்டு மாதங்களில் மிக குறைந்த அளவிலே இருக்கிறது. என்றாலும்,  கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டியிருக்கிறது. மேலும், கொரானா சிகிச்சைக்கான புதிய மருத்துவ மனைகள் கட்ட வேண்டிய தேவையும், மருத்துவ கருவிகள் வாங்க வேண்டிய தேவைகளும் அரசுக்கு இருக்கிறது. இதற்கும் அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது.  இதற்காக  அகவிலைப்படி நிறுத்தம், பி.எஃப். வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இது குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (28.4.2020) தனது டுவிட்டரில்,  ’’நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால்  பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செய்யும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?’’ என்று கூறியுள்ளார்.

தேசிய அளவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் பி.எஃப். வட்டி சதவிகிதத்தை குறைப்பது மனிதநேயமற்ற செயல் என்று கருத்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான எல்லா எதிர்க் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒரே குரலை எதிரொலித்துள்ளன. மத்திய அரசை பின்பற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் இதே வழிமுறையை கடைபிடித்ததை தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கடுமையாக எதிர்த்து வருகிறார். மெட்ரோ போன்ற திட்டங்களை குறைக்கச் சொல்லியும், புதிய பாராளுமன்ற கட்டும் திட்டத்தை தள்ளிபோட்டு இதற்கான நிதியை சமாளிக்க முடியும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மோடி அரசுக்கு ஆலோசனை கூறிவருகின்றன.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்