அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் ஸ்டாலின்- பன்னீர்செல்வம்

slider அரசியல்
ops-stalin

அதி.மு.க அரசு மீது மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருவதை ஜீரணிக்க முடியாமல், அதை கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்கிற குற்றச்சாட்டை துணை முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு கொரானாவுக்கு நடுவிலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உருவெடுத்துள்ளது.

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று (24.4.2020) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுக்களிலும், பிரதமருக்கு அனுப்பிய பல கடிதங்களிலும், அண்மையில் நடந்த நிதிக்குழு கூட்டத்திலும், ’1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு வேண்டும்’ என்பதை தமிழக முதல்வர் எடுத்துரைத்தார். இதை மறைத்து, முதல்வர் எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், வெறும் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக காத்திருப்பதாக தி.மு.க. மற்றும் சட்டமன்ற எதிர்க் கட்சித், தலைவர் ஸ்டாலின் கூறுவதிலிருந்து அவரது மலிவான அரசியல் வெளிச்சமாகிறது.

நடப்பாண்டு மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயில் இருந்து தமிழகத்திற்கு 32,849 கோடி ரூபாயை 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது முதல்வர் மற்றும் தமிழக அரசின் முயற்சியால் தான் நடந்தது.இது தெரியாமல் 15 – வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில், தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இது முதல் தவணையாகும். மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும்.

மேலும், ‘நிதிப் பகிர்விற்கு பிறகும் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில் கூட தமிழகத்திற்கு வெறும் 4,025 கோடி ரூபாய் மட்டுமே’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், அரசின் வற்புறுத்தல் காரணமாக முதன் முறையாக நடப்பாண்டிற்கு 4,025 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானியம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக முதல் தவணையும் பெறப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது மிகவும் வேடிக்கையாகயுள்ளது. அ.தி.மு.க., அரசுக்கு, மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருவதை ஜீரணிக்க முடியாமல், கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் அறிக்கை விடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம்.கொரோனா நோய் தடுப்பில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பழைய விஷயங்களை கிளறி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்த நேரத்தில், அரசியல் லாபம் தேடாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், அவர் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு தமிழகத்தில் லாக்-டவுன் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தமிழக முதல்வருக்கும், எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் இப்போது அ.தி.மு.க. தரப்பிலிருந்து இரண்டாவது நபராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்துள்ளார். இந்த நிகழ்வுகள் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் கொரானா போன்ற பேரிடரில் தமிழகம் தவியாய் தவித்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்குமான போட்டி அரசியலுக்கும் மட்டும் குறையிருக்காது என்பதுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்