slider அரசியல்

 

PRASANTH-KISHORE

  

தமிழகத்தில் முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸுக்கும் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒரு காலத்தில் பா,ஜ.க.வுக்கும் தேர்தல் ஆலோசகராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது பி.ஜே.பி.க்கு எதிரான கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக செயல்படுவதால் பா.ஜ.க. இவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பீகார் பாரதீய ஜனதா கட்சி இவர் மீது கொரானா நேரத்தில் கோல்கட்டாவுக்கு பிரசாந்த் கிஷோர்  விமான பயணம் மேற்கொண்டார் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இந்த விவகாரத்தை ஆரம்பித்து வைத்தவர் பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிகில் ஆனந்த். இவர் “பிரசாந்த் கிஷோர் கார்கோ விமானத்தில் கோல்கட்டாவுக்கு ரகசியமாக சென்று வந்துள்ளார். பிரசாந்த் கிஷோர் அரசு அதிகாரியும் இல்லை. விமான நிறுவன அதிகாரியும் இல்லை, மருத்துவ துறையை சேர்ந்தவரும் இல்லை. இவ்வாறு எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் விமான பயணம் மேற்கொள்ள யார் அனுமதி அளித்தது? இது தொடர்பாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் மத்திய விமானத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கவுள்ளேன். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி தோல்வியடைந்துவிட்டது. கொரோனா ஒழிப்பிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.   மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது இமேஜை உயர்த்திக் கொள்ளவே பிரசாந்த் கிஷோரை இந்நேரத்தில் அழைத்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்’’ என்கிற பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  இப்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் விதமாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “நான் விமானப்பயணம் செய்தது உண்மை என்று அவர்கள் தெரிவித்தால், அதற்குரிய ஆவணங்களை வெளியிட வேண்டும். விமானம் எங்கிருந்து புறப்பட்டது. பின்னர் எங்கு சென்றது உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும். விமான செயல்பாடுகள், மத்திய அரசின் விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆண்டு வருகிறது. எனவே, என் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அது குறித்த தகவல்களை பெற எந்தவொரு கஷ்டமும் இருக்காது. நான் தற்போது சாதாரணமானவன். என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மன்னிப்பு கேட்க தயார். அதேபோல் அவர்களும் மன்னிப்பு கேட்பார்களா’’ என்று அந்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர்  கூறியுள்ளார்.

  • தொ.ரா.ஸ்ரீ.