slider அரசியல் மருத்துவம்
ARVIND-KEJRIWAL

 

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்க உட்பட பல நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. மேலும் .சிகிச்சையிலும் பலவிதமான முறைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து அதிகளவில் பேசப்படுகிறது. இதற்கு மத்திய அரசு தற்போது அனுமதியும் அளித்துள்ளது. இந்த சிகிச்சை முறையை டெல்லி அரசு கொரானா நோயாளிகளுக்கு அளித்து நல்ல பலனை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரானா விஷயத்தில் இந்த தகவல் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவர்களது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு அவற்றை பிரித்தெடுத்து இதனை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை  முறையாகும். கொரோனா வைரஸை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதில் முதல்கட்டமாக டெல்லியில் நான்கு நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து இன்று (24.4.2020) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்லீரல், பைலரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் இயக்குனர் எஸ்.கே.ஸ்டாலின் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,  “கடந்த சில நாட்களில் எல்.என்.ஜே.பி.  மருத்துவமனையில் நான்கு நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது வரை அதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாகவுள்ளன. எல்.என்.ஜே.பி. மருத்துவமனையிலுள்ள தீவிர நோயாளிகளில் குறிப்பிட்ட சிலருக்கு பிளாஸ்மா சோதனையை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த 2-3 நாட்களில் நாங்கள் அதிகமான சோதனைகளை நடத்துவோம். பின்னர் அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிப்பதற்கு அடுத்த வாரம் அனுமதி பெறுவோம். எனவே, கொரோனாவில் இருந்து மீண்ட மக்கள், ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இதன்பின்னர்  டாக்டர் எஸ்.கே.ஸ்டாலின் பேசுகையில்,  “பிளாஸ்மா சிகிச்சை நான்கு நோயாளிகளுக்கு நல்ல முடிவை தந்திருக்கிறது. எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் எங்களிடம் உள்ள மற்ற 2-3 நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் பிளாஸ்மா தயாராகவுள்ளோம்.  இன்று (24.4.2020)அவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவுள்ளோம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் மருத்துவ பரிசோதனை உபகரணங்களுக்கும் மத்திய அரசு தடை போட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்த்த அந்த கருவியின் சில ரிசல்ட்கள் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தவறாக வந்ததால் மத்திய அரசு இந்த முடிவு எடுக்கும்படி நேர்ந்தது. இதுபோன்ற நேரத்தில் தான் டெல்லியிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையில் நான்கு கொரானா நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கிறது என்கிற தெம்பு அளிக்கும் தகவல் நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் கொரானா விஷயத்தில் புதிய வெளிச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்