தோனி மீது பாய்ந்த தினேஷ் கார்த்திக்!

slider விளையாட்டு
DHONI-DINESH-KARTHIK

 

தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் விக்கெட் கீப்பர் மற்றும் வலது கை பேட்ஸ்மன். கடந்த உலகக் கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்தார். பின்வரிசையில் களம் இறங்கி பினீஷிங் செய்வதில் கெட்டிக்காரர் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் இவருக்கு பெயர் உண்டு. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது இந்திய அணியின் பிரபலம் தோனி குறித்து சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சமீபத்தில் தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்,  ’’முதலாவது ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் 2008-ம் ஆண்டில் நடந்தபோது, நான் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்த நான், தமிழகத்தின் முன்னணி வீரராக இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நம்பினேன். அவர்கள் என்னை கேப்டனாக நியமிப்பார்களா? இல்லையா? என்பது மட்டுமே எனக்குள் அப்போது எழுந்த கேள்வி.

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதல் வீரராக விக்கெட் கீப்பர் டோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (தற்போதைய இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.11.30 கோடி) ஏலம் எடுத்தனர். அப்போது டோனி எனது பக்கத்தில்தான் (ஆஸ்திரேலியாவில்) உட்கார்ந்து இருந்தார். தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யப்போகிறது என்பதை என்னிடம் கூட அவர் சொல்லவில்லை. ஒரு வேளை அவருக்கு முன்கூட்டி தெரியாமல் இருந்திருக்கலாம். சென்னை அணி நிர்வாகம் எனக்குப் பதிலாக டோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வேதனை அடைந்தேன். சில சீசன்களுக்கு பிறகு சென்னை அணிக்காக எடுப்பார்கள் என்று நினைத்தேன். 13 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அழைப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அந்த பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தோனிக்கும், தினேஷ் கார்த்திக்கும் போட்டி என்று ஒரு பேச்சு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் உலா வருவது அடிக்கடி நிகழ்வது உண்டு. இந்த பேட்டியும் இன்னும் சில நாளைக்கு பெரும் விவாதமாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.

  • எஸ்.சிவாநந்தன்