கொந்தளித்த சோனியா காந்தி!

slider அரசியல்
rahul-soniya-modi

 

   தேசிய எதிர்க் கட்சியான காங்கிரஸில் ராகுல் காந்தி பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போதும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சித்தும் வருகிறார். ஆனால், காங்கிரஸின் இடைக்காலத் தலைவராகவுள்ள சோனியா காந்தி இப்படியெல்லாம் பேசுபவர் அல்ல. ஆனால், அவர் இப்போது, “பா.ஜ.க. வகுப்புவாத வெறுப்புணர்வு வைரஸை பரப்புகிறது’’ என்று கொந்தளித்து பேசியிருப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர், “கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சமயத்திலும் மத்திய அரசு காங்கிரஸ் கட்சியின் சார்பாக சொன்ன யோசனைகள் எதையும் ஏற்கவில்லை.. பா.ஜ.க. மத வெறுப்பு வைரஸைப் பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலையை தர வேண்டும். நாம் எல்லாரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில் பா.ஜ.க. அரசு இதுபோல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. நமது சமூக நல்லிணக்கத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சரி செய்ய நம்முடைய கட்சி கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கிறது. நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, லாக்டவுன் கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், ஆக்கப்பூர்வான கூட்டுறவு கோரியும் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். கொரோனா வைரஸ் போராட்டத்தில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி தெரிவித்துள்ளேன். பலவித யோசனைகளையும் வழங்கி உள்ளேன். ஆனால், அவை எதுவுமே பெரிசா எடுத்துக் கொள்ளப்படவில்லை. துரதிர்ஷ்டமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை பாதியளவுதான் ஏற்றார்கள். மற்றபடி மோசமான வழியில்தான் செல்கிறார்கள். பாரபட்சமாக மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறது பா.ஜ.க. இரக்கம், பெருந்தன்மை, எதற்கும் உற்சாகமாக தயாராவது போன்றவை மத்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை.

பா.ஜ.க.வின் இந்த செயல் நாட்டின் ஒவ்வொரு இந்தியரையும் கவலையடையச் செய்துள்ளது. முதல்கட்ட லாக்டவுனிலேயே 12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோய்வி்ட்டன. வைரஸை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள லாக்டவுன் நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படி பல தரப்பட்ட மக்களை அளவுக்கு அதிகமாகவே பாதித்து வருகிறது. வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.. இதனால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.

ஒவ்வொருவரும் கொரோனாவை எதிர்த்து போராடுகிறார்கள். பாதுகாப்பு சாதனங்கள், டெஸ்ட் கிட்கள் நாட்டில் இப்போதுகூட பற்றாக்குறையாக இருக்கின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்துக்கு தலா ரூ.7,500 வழங்க வேண்டும். உணவு தானியங்கள் இன்னும் 11 கோடி மக்களை சென்றடையவே இல்லை. ஒவ்வொரு மாசமும் 11 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அரை கிலோ சர்க்கரை வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும். ஊரடங்கின் தாக்கத்தை மென்மையாக்குவதில் அரசு இரக்கம் காட்ட தவறிவிட்டது.. மே 3-ம் தேதியுடன் லாக்டவுன் முடிகிறது. இதற்கு பிறகு அதாவது மே 3-ம் தேதிக்கு பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகளும் அபாயகரமானதாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

2014-ம் ஆண்டில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் பெரும்பாலானவைகளை மோடியின் முதல்முறை அரசு செயல்படுத்தியது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் தான் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் அரங்கேறிய நடவடிக்கை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் அறிக்கையிலே காஷ்மீர் பிரிப்பு மற்றும் அயோத்தி பிரச்னைக்கு தீர்வு போன்றவை இடம்பிடித்திருந்தன.  இவையாவும் அந்தக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மக்கள் வழங்கிய ஓட்டு மூலம் பெரும்பான்மை கிடைக்கிறது. இதன்மூலம் ஆட்சி அமைகிறது.  இதன்பிறகு அதனை நிறைவேற்றுகிறது என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், பேரிடர் என்பது பா.ஜ.க. அரசு என்றோ காங்கிரஸ் அரசு என்றோ பார்த்து வருவதில்லை. இதனை சமாளித்து மக்களை காப்பாற்றும் அரசே மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிக்க முடியும். தற்போது கொரானா என்னும் கொடிய நோயிடம் இந்தியா மாட்டிக் கொண்டுள்ளது. இதனை விரட்டி மக்களை காப்பாற்றவும் அதேநேரத்தில் இந்தமாதிரியான சமயங்களில் நிர்வாக முறையில் என்னமாதிரியான செயல்பாடுகள் பலனளிக்கும் என்பது அறிவும் அனுபவமும் சேர்ந்த ஒன்றால் மட்டுமே சரிவர செய்ய முடியும். சோனியா காந்தியின் ஆலோசனைகளை எதிர்க் கட்சித் தலைவர் என்று பார்க்காமல் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவரின் வழிகாட்டல் என்கிற முறையில் ஏற்று பா.ஜ.க. அரசு செயல்படுமானால் அதன் நல்லபெயரும் அந்தக் கட்சிக்குதான் கிடைக்கும என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.