அ.தி.மு.க. வெற்றிக்கு மோடியின் ஆலோசனை!

slider அரசியல்
eps-modi-ops

 

கொரானா விஷயத்தில் நல்லவிதமாக மக்களிடம் பெயர் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஏதும் சறுக்கல் ஏற்பட்டால் விரைவில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது தங்களுக்கு பெரும் பாதகமாகும் பயமும் அ.தி.மு.க. முகாமில் இருக்கிறது. இதை முன்னிட்டு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கொரானாவுக்கு நடுவிலும் தங்கள் போட்டி அரசியலை தொடர்கின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருகிறது.

குறிப்பாக, கொரானா குறித்த தி.மு.க.வின் கேள்விகளுக்கு   அ.தி.மு.க. தரப்பிலிருந்து ‘’எதிர்க்கட்சிகள் என்ன டாக்டர்களா?’’ என்று  கூறுவதும் அதற்கு தி.மு.க. தரப்பில் “டாக்டர்களையே காப்பாற்ற தெரியாத அரசா மக்களை காக்க போகிறது’’ என்று பதிலடி தந்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாக சில விமர்சனங்கள் தி.மு.க. தரப்பிலிருந்து வருவது அ.தி.மு.க. முகாமை சற்று சலனப்படுத்தியுள்ளது என்றுதான் கூறப்படுகிறது. மேலும், கொரானா விஷயம் வேறு நாளும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டிய கட்டாயமான நிர்பந்தம் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்டுவிட்டது  என்றால் மிகையில்லை.

இதனிடையே கடந்த 19-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி போனிலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் பேசினார். அப்போது தமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகள், நிலவரம் குறித்தெல்லாம் பிரதமர் விசாரித்துள்ளார். அந்த சமயத்தில்தான் தி.மு.க. கூறிவரும் விமர்சனங்களை மோடியிடம் முதல்வர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடி தி.மு.க.வை வீழ்த்த ஏதாவது வியூகங்களை செயல்படுத்துங்கள் என்றும், முக்கியமாக அ.தி.மு.க.வுக்குள் நிலவும் கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றும், எல்லாரையும் ஒன்றிணைக்க பாருங்கள் என்றும் கூறினாராம். மேலும், ஒருவேளை சசிகலா விடுதலையானாலும், அவரையும் தவிர்த்துவிடாமல் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள பாருங்கள் என்றும் இதன்மூலம் கட்சியை பலப்படுத்தும் விஷயத்தில் தீவிரமாக இறங்குங்கள் என்று கூறியதாகவும். அ.தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மட்டுமே கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வருகின்றன. இந்தமுறை அ.தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியில் நீடித்து வருகிறது. வழக்கமாக கடந்த 25 வருடங்களாக ஒரு ஐந்தாண்டு தி.மு.க. என்றால் அடுத்த ஐந்தாண்டு அ.தி.மு.க. என்றே ஆட்சி செய்து வந்திருக்கிறது. இந் நிலையில் 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வென்றதுபோல், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அ.தி.மு.க தன் ஆட்சியைத் தொடர வேண்டுமானால் அதற்கு இப்போதைய அ.தி.மு.க.வின்  இரட்டை தலைமை வெகுஜன மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை பெறும் செயலில் இறங்கி சாதிக்க வேண்டியது மிகவும் அவசியம். கட்சியின் சின்னமான இரட்டை இலை மட்டும் போதும் என்று நினைத்தால் அது சறுக்கலாக அமைய அதிக வாய்ப்புண்டு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்