விஜயகாந்தை பாராட்டிய இயக்குநர் சேரன்!

slider அரசியல் சினிமா

 

vijayakanth

உலகமெங்கும் கொரோனா நோயிலுள்ளவர்களை காப்பாற்றும் அரும்பணியில் ஈடுபட்டு வருபவர்கள் டாக்டர்கள். தமிழகத்திலும் டாக்டர்கள் இத்தகைய செயலில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இப்படி பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த டாக்டருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்பு மரணம் ஏற்பட்டது. மரணமடைந்த டாக்டரை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கத்திலுள்ள மயானத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது அங்குள்ள சில மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது இப்போது பெரும் பிரச்னையாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தனக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உடனடியாக அறிவித்தார்.  இவரின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளது.

இது குறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் கூறுகையில், “வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட.. வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்… உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்..’’ எனக் கூறியுள்ளார்.